Published:Updated:

`ராகுலுக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா?!' - மத்திய அரசை விமர்சித்த முத்தரசன்

முத்தரசன்
முத்தரசன்

``சின்னம் குறித்து, திருமாவளவன் அவருடைய கட்சி நிலை குறித்துக் கூறியிருக்கிறார். இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல. எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது."

``நாடு மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மத்திய அரசை விமர்சனம் செய்து பேசினால், பேசுபவர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா... இதுதான் மோடி அரசின் சாதனை’’ என்று மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.

காந்தி அஸ்தி மண்டபம்
காந்தி அஸ்தி மண்டபம்

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை அருகேயுள்ள மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``நாடு மிகவும் மோசமான நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணை காவல்துறையினரே எரித்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்கச் சென்ற ராகுல் காந்தியைக் கீழே தள்ளி வன்முறையைக் கட்டவிழ்த்திருக்கிறார்கள். நாடறிந்த ஒரு தலைவரை இப்படிக் காவல் துறையினர் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து நாடு முழுவதும் பட்டியலினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

முத்தரசன்
முத்தரசன்

பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றைத் தடுக்க மத்திய அரசு எதாவது முயற்சி செய்ததுண்டா? இல்லை. நாடு மோசமான நிலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசை விமர்சனம் செய்து பேசினால் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாக்குகிறார்கள். ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா... இதுதான் மோடி அரசின் சாதனை" என்று மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் அவர், ``கிராமசபைக் கூட்டத்தில், விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் பிறகு அவசர அவசரமாக, இரவோடு இரவாக கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது ஜனநாயக விரோதச் செயல். 70% மக்கள் விவசாயத்தைச் சார்ந்திருக்கிறார்கள்.

முத்தரசன்
முத்தரசன்
ம.அரவிந்த்

விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார் பிரதமர். 12-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களின் முன்பாக மாபெரும் போராட்டம் நடத்தவிருக்கிறோம். ராகுல் காந்தி வரப்போகிறார் என்றவுடன் உடனடியாக அங்கு ஒரு மாதம் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவர்கள் எத்தனை அடக்குமுறைகளைக் கொடுத்தாலும் அவற்றை எதிர்த்து நிற்போம்" என்றார்.

"தி.மு.க கூட்டணிக் கட்சிகள் வரும் சட்டமன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதாகத் தகவல் வெளியாகிவருகிறதே...’’ என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த முத்தரசன், ``தி.மு.க அதிகாரபூர்வமாக அப்படி எதையும் அறிவிக்கவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பத்திரிகைகள்தான் அப்படிக் கூறிவருகின்றன. சின்னம் குறித்து திருமாவளவன் அவருடைய கட்சி நிலை குறித்துக் கூறியிருக்கிறார். இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல. எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு