Election bannerElection banner
Published:Updated:

`ரஜினியின் தற்காப்பு; விஜய் ஆதரவு அளித்திருந்தால்..?' - குடியுரிமை சட்டத்தைக் குறிப்பிட்ட முத்தரசன்

முத்தரசன்
முத்தரசன் ( ம.அரவிந்த் )

``லாரிகளுக்கு மாமூல், மேல்மட்டத்துக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறி விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.40 என கமிஷன் கேட்டு கட்டாய வசூல் பகிங்கரமாக நடைபெறுகிறது" - முத்தரசன்

``காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மேலிடத்துக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறி விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40 கமிஷன் கேட்டு கட்டாய வசூல் நடைபெறுகிறது. இதைத் தடுக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தஞ்சாவூரில் தெரிவித்தார்.

முத்தரசன்
முத்தரசன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைப் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் 15-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களைப் பார்வையிட்டார். பின்னர் தஞ்சாவூர் வந்த அவர் செய்தியாளர்களிடம், ``காவிரி டெல்டாவில் கடுமையான சூழலுக்கு இடையே விவசாயிகள் இந்தாண்டு கடன்களைப் பெற்று விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்லை, விற்க முடியாமல் கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாகக் காத்திருக்கின்றனர்.

கொள்முதல் நிலையங்களில் போதியளவு சாக்கும் சணலும் இல்லை. அத்துடன் பணியாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மூட்டைத் தூக்கும் தொழிலாளர்களுக்கு மிக சொற்பமான ஊதியம்தான் வழங்கப்படுகிறது. அதை உயர்த்தி வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அங்கிருந்து குடோன்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். லாரிகளுக்கு மாமூல், மேல்மட்டத்துக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறி விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.40 என கமிஷன் கேட்டு கட்டாய வசூல் பகிங்கரமாக நடைபெறுகிறது. அதே போல் ஒரு மூட்டைக்கு 2 கிலோ வீதம் நெல்லை பணியாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த முறைகேடுகளை உடனடியாகத் தடுக்க வேண்டும்.

முத்தரசன்
முத்தரசன்

கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து, அதிக பணியாளர்களை நியமிக்க வேண்டும். கொள்முதல் பணி சீரமைப்பு தொடர்பாக 21 கோரிக்கைகளை நாங்கள் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆட்சியாளர்களுக்கு வழங்கினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அந்தத் துணிவு முதல்வருக்கு இல்லை.

தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவது என்பது 100 சதவிகித நம்பிக்கையாக இருந்தது. அது தற்போது தவிடுபொடியாகிவிட்டது. இதில் தற்போது ஒருவர் சரண்டர் ஆகி இருக்கிறார். உயர் பொறுப்பில் உள்ளவர்களின் துணை இல்லாமல் இந்த முறைகேடு நடைபெற்றிருக்காது. சி.பி.சி.ஐ.டி விசாரணை போதாது, சி.பி.ஐ விசாரணையும் உயர் நீதிமன்ற நேரடி கண்காணிப்பு விசாரணையும் நடத்தப்பட வேண்டும்.

முத்தரசன்
முத்தரசன்

வருமானவரித்துறையின் சோதனை என்பது மத்திய அரசின் பினாமியாக மாறிவிட்டது. நடிகர் விஜய் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகப் பேசியிருந்தால் இந்த ரெய்டு நடந்திருக்காது. ரஜினி தன்னை தற்காத்துக்கொள்ள குடியுரிமை சட்டத்தை ஆதரித்துப் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்துக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்க தயார்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு