Election bannerElection banner
Published:Updated:

`கேள்விக்கு கிண்டலாக பதில் சொல்வதா?!' -சட்டப்பேரவை நகைச்சுவையால் முத்தரசன் காட்டம்

முத்தரசன்
முத்தரசன்

திரையுலகில் தற்போது ரஜினிகாந்தைவிடவும் திறமையான பல இளம் நடிகர்கள் தடம் பதித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அது தான் எங்கள் கோரிக்கை. மத ரீதியாக மக்களைச் சட்டப்படி பிரிக்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் திருச்சியில் தொடங்கி வேதாரண்யம் வரையில் சமூக நல்லிணக்க பாதையாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக அரசு கொரோனா பாதிப்பைத் தடுக்க எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

முத்தரசன்
முத்தரசன்

கொரோனா பாதிப்பின் வீரியத்தை உணர்ந்த தமிழக அரசு உடனடியாக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, இதுகுறித்து எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினால், உங்களுக்கு வயதாகிவிட்டது. சர்க்கரை நோய் இருக்கிறது. பயப்படாதீர்கள் என்றெல்லாம் கிண்டல் செய்து தீவிரமான ஒரு பிரச்னையை நகைச்சுவையாக மாற்றுகின்றனர்.

சட்டப்பேரவையில் பேசியதை நகைச்சுவையாக பார்க்காமல் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் பிரச்னையாகப் பார்த்து உடனடியாக தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்காதது அதிமுக செய்த சூழ்ச்சி.

அதிமுகவின் கூட்டணியில் தொடர வேண்டுமா இல்லையா என்பதை தேமுதிக தான் முடிவு செய்ய வேண்டும். தமாகா தலைவர் ஜிகே வாசன் எனது நீண்ட கால நண்பர். அவர் பாஜகவில் இணையப் போகிறாரா இல்லையா என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அவர் இணைய மாட்டார் என நம்புகிறேன். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை பாஜக தலைவராக அக்கட்சி அறிவித்துள்ளது. ஆனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களுக்காக எந்த ஒரு நல்லதையும் செய்யவில்லை.

முத்தரசன்
முத்தரசன்

1967ஐ போல் மீண்டும் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என அண்ணாவுடன் நடிகர் ரஜினிகாந்த் தன்னை ஒப்பிட்டுப் பேசுவது ஏற்புடையதல்ல. நடிகர் ரஜினிகாந்த் அண்ணாவுடன் தன்னை ஒப்பிடக்கூடாது. திரையுலகில் தற்போது ரஜினிகாந்தை விடவும் திறமையான பல இளம் நடிகர்கள் தடம் பதித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என நடிகர் ரஜினிகாந்த் கூறுவது ஒன்றும் புதியது அல்ல. தேர்தலுக்குப் பிறகு கட்சி தொண்டர்கள் தேவையில்லை என்று அவர் கூறுவது வியப்பாக உள்ளது. யார் அவரை இயக்குகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு