Published:Updated:

``சினிமாக்காரர்களுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும்" - காரணம் சொல்லும் டாக்டர் கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி

``ரெண்டு பாட்டு பாடத்தெரியும், டான்ஸ் ஆடத் தெரியும்கிறதாலயே தங்களை புத்திசாலியா நினைச்சு பேசுறது தவறானது.'' - டாக்டர் கிருஷ்ணசாமி

``சினிமாக்காரர்களுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும்" - காரணம் சொல்லும் டாக்டர் கிருஷ்ணசாமி

``ரெண்டு பாட்டு பாடத்தெரியும், டான்ஸ் ஆடத் தெரியும்கிறதாலயே தங்களை புத்திசாலியா நினைச்சு பேசுறது தவறானது.'' - டாக்டர் கிருஷ்ணசாமி

Published:Updated:
டாக்டர் கிருஷ்ணசாமி

''ராஜராஜன் இந்து இல்லைன்னு சொல்ற டைரக்டர்தான், நான் கொம்பன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அது கருத்து சுதந்திரம்னு சொன்னார்.'' என்று மதுரை வந்திருந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி திரைப்படத்துறையினருக்கு எதிராக கடுமையாக பேசினார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

மேலும், தூய்மை இந்தியா பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளதை மாற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாகவும், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து முக்கிய நகரங்களில் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், ``கடந்த 2004-ல் சண்டியர் திரைப்படம் வந்தபோது தமிழ் கலாசரத்தை சீரழிக்கிறது, அரிவாள் கலாசாரத்துக்கு வக்காலத்து வாங்குகிறது, ஆபாசத்தை புகுத்துகிறது, சாதியத்தை தூக்குவது போன்ற விஷயங்கள் படத்தில் இடம்பெறக் கூடாது என்றேன். திரைப்படம் மூலம்தான் தமிழகத்தில் அரசியலே கைப்பற்றப்பட்டுள்ளது. திரைப்படங்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமே இருக்க வேண்டுமென கூறினேன். அதுபோலவே 2011-ல் வன்முறைக்காட்சிகள் அதிகமிருந்த கொம்பன் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தேன். அப்போது திரைப்படத்துறையை சேர்ந்த ஒவ்வொரு சங்கத்தினரும் கருத்து சுதந்திரத்தில் தலையிடலாமா, படத்தில் வருவது கற்பனை என்று சொன்னார்கள். அதே நபர்தான் சமீபத்தில் வெளியான ஒரு படத்தை வைத்து நேர்மாறாக விமர்சிக்கிறார். திரைப்படங்கள் மூலம்தான் அரசியல் சொல்லப்படவேண்டும், இந்து முத்திரை குத்தக்கூடாது என்றும் சொல்கிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

திரைப்படத்துறையினர் காசு போட்டீங்களா, அதில் சம்பாதிச்சோமா என்று போயிடணும். தமிழ் நாட்டை சீரழிக்கக் கூடாது என்கிறேன். வரலாற்றை, வரலாறாக பார்ப்பதை விட்டு மனம்போனபோக்கில் திரித்து வரலாறை அழிக்கிறார்கள். தமிழ் சமூகங்களுக்குள் பகையை மூட்டுகிறார்கள். அதிலும் கடந்த 6 மாதங்களாக திரைப்படங்களை ஓட்டுவதற்காகவே நடிகர்கள் ஊர் ஊராக போகிறார்கள். பெரியாரை பற்றி பேசுகிற இவர்களுக்கு கூத்தாடிகளால்தான் தமிழ்ச்சமுதாயம் அழிக்கப்படுகிறது, சினிமாவை ஒழிக்கணும்னு என்று பெரியார் பேசியது தெரியுமா?

போதை வஸ்துகளுக்கு அடிமையாக்கப்பட்டதுபோல் சினிமா என்ற மாயைக்குள் தமிழ் இளைஞர்கள் அடிமையாகியுள்ளார்கள். திரைப்படங்களில் கற்பனை காட்சிகளை, சிரிப்பு காட்சிகளை காட்டாமல் வரலாறுகளை மாற்றி அரசியலை புகுத்த நினைத்தால் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்." என்று எச்சரித்தவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

``தமிழர்களிடம் சைவம், வைணவம் என்ற மதம்தான் இருந்தது என்று சிலர் பேசி வருவது சர்ச்சையாகியுள்ளதே தங்களுடைய நிலைப்பாடு என்ன?”

``சைவம்னா என்ன? வைணவமம்னா என்ன? கிறிஸ்டியன்ல ரோமன், பிராட்டஸ்டாண்ட், லுத்தரன், பெந்தகோஸ்தே என்றால் என்ன? முஸ்லீமில் சன்னி, ஷியா என்றால் என்ன? இந்த அரிச்சுவடி தெரியாதவரெல்லாம் எப்படி டைரக்டர் ஆனார்? ஒரு மதம் எப்படி தோன்றியதுன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா? ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வழிபாட்டுக்கு ஒரு தன்மை உண்டு. புத்த மதத்தை புத்தரா தோற்றுவித்தார்? புத்த மதத்துலயே மூனு பிரிவு இருக்கு. சைவம், வைணவம் என்றாலும் அதுவே இல்லாவிட்டாலும் மரத்தையோ, மைல் கல்லையோ தொழுதாலும் அது இந்து நடைமுறை. பஞ்ச பூதங்களை வணங்குவதுதான் இந்தியப் பண்பாடு. தமிழர்கள் சூரியனுக்கு பொங்கல் வைத்தும், பசுமாட்டுக்கு பொட்டு வச்சு வழிபடுகிறோம். அதுதான் இந்து பாரம்பரியம்.

பொன்னியின் செல்வன் - சினிமா
பொன்னியின் செல்வன் - சினிமா

முதலில் பாரம்பரியம், பண்பாடுன்னா என்னன்னு படிச்சுட்டு இவர்கள் பொதுத்தளத்துக்கு வரட்டும். ரெண்டு பாட்டு பாடத்தெரியும், டான்ஸ் ஆடத் தெரியும்கிறதாலயே தங்களை புத்திசாலியா நினைச்சு பேசுறது தவறானது. சைவம், வைணவத்துல என்ன வேறுபாட்டை கண்டுட்டாங்க. இந்து மதத்தில் முக்கியமானது உருவ வழிபாடு. மனுஷன் ஸ்ட்ரைட்டாவா வந்துட்டான்? நியாண்டர்தால்லருந்துதானே வந்தான். அன்னைக்கு அவனும் ஒரு கடவுளை கும்பிட்டிருப்பான். இப்படித்தான் நம் பண்பாடு உருவானது.

இவங்க யாரு இந்து முத்திரை குத்த? இப்ப, ராஜராஜன் இந்து இல்லைன்னு சொல்ற டைரக்டர்தான், கொம்பன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அது கருத்து சுதந்திரம்னு சொன்னார். சிவனை கும்பிடுறவங்க இந்து இல்லாமல் வேற யாரு? அவருக்கு இன்னொரு மதத்தை பேச அருகதை கிடையாது.

பிரிட்டிஷ்காரன் கொடுத்த இந்து அடையாளத்தை பயன்படுத்தக் கூடாது என்று சொன்னால், கிறிஸ்தவம், முஸ்லீம் என்ற அடையாளமுமில்லாமல் வாழலாமே? இந்து மதத்தை எதிர்ப்பவகள் அந்நிய நாட்டின் கைக்கூலிகள். மிஷனரிகளின் ஏஜென்டுகள். இந்தியா பாரம்பரியத்தை, நாட்டுப் பற்றை ஒழிக்கவும், அந்நிய மத சிந்தனைகளை உண்டாக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் நோக்கம்.”

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

``சாதிக்கொடுமைகளால்தான் மதம் மாற்றம் நடந்ததாக சொல்வது பற்றி என்ன நினைக்குறீர்கள்? இமானுவேல் சேகரன் கிறிஸ்துவத்தை ஏற்றதற்கு சாதி காரணமில்லையா?”

``அதெல்லாம் சும்மா சொல்றது. நம் நாட்டில் வாள் மூலம்தான் மதமாற்றம் நடந்தது. பாபர் காலத்தில் மதம் மாறாதவர்களுக்கு புதிய வரியே போடப்பட்டது.”

``சூத்திர இந்து வேறு, பிராமண இந்து வேறு என்று திருமாவளவன் பேசுகிறாரே?”

``அது ஒன்னுமில்லை, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை டார்கெட் பண்ணுவதற்காக நீட்டை கையில எடுத்தாங்க. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எடுத்திருக்கும் அஸ்திரம்தான் இது.”

``சாதிப்பெருமை பேசும் வன்முறை நிறைந்த படங்கள் இப்போதும் வந்துகொண்டுதானே இருக்கு?”

``என் எதிர்ப்புக்கு பிறகு எவ்வளவோ குறைஞ்சிருக்கு. தென் தமிழகத்தில் சாதிக்கலவரங்கள் குறைந்து சமூக நல்லிணக்கம் ஏற்பட்டிருருக்கு.”

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

``நீங்கள் இப்படி சொல்கிறீர்கள், ஆனால், சமீபத்தில் தென்காசி மாவட்டத்துல கடையில் மிட்டாய் கொடுப்பதில்கூட குழந்தைகளிடம் சாதி பாகுபாடு காட்டப்பட்டதே?”

``அது வேற...., இங்கொன்றும் அங்கொன்றும் நடபதை வைத்து பொதுவாக சொல்லக்கூடாது.”

``திரைப்படங்கள் மூலம்தான் தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும் சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை, மறைக்கப்பட்ட விஷயங்களை வெளியே கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறதே?”

``விதிவிலக்காக ஒன்றிரண்டு இருக்கலாம். பெரும்பாலான படங்கள் தமிழ் சமூகத்தை சீரழிக்கின்றன. திரைப்படத்துறையினர் தங்கள் உயரம் என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். டாஸ்மாக்கும் போதைப்பொருள்களும் இளைஞர்களை எப்படி சீரழிக்கிறதோ அதுபோல் திரைப்படங்களும் சீரழிக்கிறது. சினிமாக்காரர்களுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும்.”

``பா.ஜ.கவின் குரலாக நீங்கால் ஒலிக்கிறீர்கள் என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படுகிறதே?”

``இப்போது இந்தக் கேள்வி சம்பந்தமில்லாதது.”

``வருகின்ற தேர்தலில் தங்கள் நிலைப்பாடு?”

``தேர்தல் வந்தால் நிலைப்பாடு உண்டு. ”