Published:Updated:

'தகைசால் தமிழர்' விருதுக்கு என்.சங்கரய்யா தேர்வு! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 என். சங்கரய்யா
என். சங்கரய்யா

தமிழ்நாடு அரசின் `தகைசால் தமிழர்' விருதைப் பெறும் முதல் தமிழ் ஆளுமையாக, திரு. என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் ஆகஸ்ட் 15-ம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, `தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் . ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கைகளால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்த விருதுடன், பாராட்டுச் சான்றிதழும், பரிசுத்தொகையாக பத்து லட்ச ரூபாய் காசோலையும் கையளிக்கப்படும் என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தமிழ்நாடு அரசின் `தகைசால் தமிழர்' விருதைப் பெறும் முதல் தமிழ் ஆளுமையாக, திரு. என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தமாதம் ஆகஸ்ட் 15-ம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இது குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், `தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவைப் பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

சங்கரய்யா
சங்கரய்யா

`தகைசால் தமிழர்' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.

என தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு