அரசியல்
Published:Updated:

“குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்னை அவர்கள் சுட்டுக் கொல்லட்டும்!”

கல்யாணசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம் தடாலடி

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, அவர்களின் உண்மையான தொண்டர்கள் அறத்தின் கூர் குறையாமல் முன்வைக்கும் கேள்விகளை ஆதங்கம் பொங்கும் கடிதங்களாக ஜூ.வி-யில் வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் 9.9.2020 தேதியிட்ட இதழில், ‘மாறுங்கள் சீமான்... இல்லையேல் காணாமல் போவீர்கள்!’ என்ற தலைப்பில் கடிதம் வெளியிட்டிருந்தோம். அதன் நெருப்பலைகள் நாம் தமிழர் கட்சியையும் தாண்டி தகித்துக்கொண்டிருக்கின்றன. கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பில், ‘மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி இருவருடனும் இனி இணக்கம் இல்லை’ என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்தார் சீமான்.

இந்நிலையில், இந்தச் சர்ச்சைகள் குறித்து கல்யாணசுந்தரத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘உங்களுக்கும் சீமானுக்கும் என்னதான் பிரச்னை?’’

‘‘கடந்த ஐந்து மாதங்களாகத் திட்டமிட்டு என்னிடம் பேசுவதைத் தவிர்த்துவந்தார் அண்ணன் சீமான். கட்சியைவிட்டு வெளியேற்றுவதற்கான வேலைகளையும் செய்துவந்தார். அதில்கூட எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், எனக்கு `துரோகி’ப் பட்டம் கொடுத்து வெளியேற்றுவதில் பெருமுனைப்போடு இருந்தார். அவரை நேரில் சந்தித்து அதற்கான விளக்கத்தைப் பெற முயன்றேன். அது பலனளிக்காமல் போகவும்தான், ஊடகங்களுக்குச் சென்று என் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினேன்.’’

‘‘உங்களைக் கட்சியைவிட்டு வெளியேற்ற நினைக்க என்ன காரணம்?’’

‘‘பேராசிரியர் சுந்தரவள்ளி, தன்னுடைய யூடியூப் சேனலில் என்னையும் ராஜீவ் காந்தியையும் கட்சியில் முன்னிலைப்படுத்தலாம் என்று காணொலி ஒன்றை வெளியிட்டார். அதற்குப் பிறகு, என்னைக் கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது; என்னோடு இணைந்து வேலை செய்யக் கூடாது என எங்கள் மாவட்டப் பொறுப்பாளர்களிடமும், வெளிநாடுகளிலுள்ள எங்கள் நிர்வாகிகளிடமும் அண்ணன் சீமான் தெரிவித்திருக்கிறார்.’’

கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

‘‘கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் / வெளியேற்றப்பட்டவர்கள் சீமான் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும், அவர்களுடன் நீங்கள் தொடர்புவைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?’’

‘‘முகநூலில் அவர்களுடன் நட்பில் இருப்பது, அவர்கள் நடத்தும் போராட்டங்கள், நல்ல விஷயங்களைப் பகிர்வது ஆகியவற்றில் என்ன தவறு இருக்கிறது? மற்றபடி அவர்களுடன் வேறு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை.’’

‘‘கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் சீமானை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கும் போது, மற்ற நிர்வாகிகள் அதற்கு பதிலளிக்கிறார்கள். ஆனால், நீங்கள் மட்டும் அமைதியாக இருப்பதாகச் சொல்கிறார்களே..?’’

‘‘அது என் சுபாவம். நான் அடைந்திருக்கும் பக்குவம். கட்சியில் பயணித்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போது, அதை நான் விமர்சனமாக மட்டுமே பார்க்கிறேன். அது குறித்து கட்சி விவாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.’’

‘‘உங்கள் ஆதரவாளர்களைவைத்து, சீமானைப் பற்றித் தவறாக சமூக வலைதளங்களில் எழுதியதாகவும், சீமானின் இறப்புக்காக நீங்கள் காத்திருந்ததாகவும் சீமானே சொல்கிறாரே..?’’

‘‘எப்போது அவர் இப்படி ஒரு கருத்தைச் சொன்னாரோ அதற்குப் பிறகு அது பற்றிப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால், என் நேர்மை குறித்து அண்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேடையில் ‘மது அருந்தக் கூடாது’ எனப் பேசிவிட்டு அறைக்கு வந்து மது குடிக்காமல் இருப்பதுதான் நேர்மை... மேடையில் ‘சிகரெட் குடிக்கக் கூடாது’ எனப் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கியதும் சிகரெட் பிடிக்காமல் இருப்பதுதான் நேர்மை. அந்தவகையில் நான் நேர்மையாளன்தான். உடல்மொழியை வைத்து நக்கல் பேசுவதெல்லாம் நன்றாக இல்லை.’’

‘‘தேர்தல் காலத்தில், 30 லட்சம் ரூபாயைக் கையாடல் செய்ததாகச் சொல்கிறார்களே...’’

‘‘தயவுசெய்து விசாரணைக்குழு அமைத்து என்னை விசாரிக்கச் சொல்லுங்கள். என்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் என்னை அவர்கள் சுட்டுக் கொல்லட்டும்.’’

‘‘கட்சியில் ஒரு சர்வாதிகாரிபோல் சீமான் செயல்படுகிறார் என வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? ‘’

‘‘சில நேரங்களில் என்னுடைய கருத்துகளை முன்வைப்பதற்கு ஒரு வெளி இருந்திருக்கிறது. ஆனால், முடிவுகளை அவர் எடுத்துவிட்டால், பிறகு கேள்வியின்றி அதைக் கறாராகச் செயல்படுத்தியிருக்கிறோம். கட்சியில் போதுமான அளவு ஜனநாயகம் இல்லை என்பதே ஆரம்பத்திலிருந்து என்னுடைய கருத்து.’’

‘‘தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு சீமானை மையப்படுத்தியே கட்சி பயணிக்கிறது என்பது உண்மையா?’’

‘‘தமிழ்த் தேசியத்தை உருவாக்குகிற கட்சியாகத்தான் எங்கள் கட்சி உருவானது. `பிரபாகரனியம்’தான் எங்கள் தத்துவமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில், `சீமானிசம்’ என்ற ஒரு வார்த்தை முன்வைக்கப்பட்டது. அது குறித்துக் கேட்க, சீமான் பேசும் காணொலிகளை பொதுவில் எடுத்துப் போடுவதுதான் சீமானிசம் என்றார்கள். அதைத் தத்துவமாக முன்வைக்கும்போது, குழப்பம் வரும் என்று நான் சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. நான், சீமானிசத்தை ஏற்கவில்லை.’’

‘‘சீமானிடம் நீங்கள் முன்வைக்க விரும்பும் ஒரு கேள்வி?’’

‘‘உண்மையில் மனசாட்சியுடன்தான் என்னைப் பற்றிப் பேசுகிறீர்களா அண்ணா... உங்களோடு இருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா அண்ணா?’’