Published:Updated:

தி.மு.க உலகப் பணக்காரர்களைக்கொண்ட கட்சி! - கொரோனா என்று ஒரு நோயே கிடையாது! - என்னை செருப்பால அடிங்க!

மன்சூர் அலிகான்
பிரீமியம் ஸ்டோரி
News
மன்சூர் அலிகான்

ரகிட ரகிட மன்சூர் அலிகான்

‘நிவர் புயல்’ வெள்ளத்திலும், “என்ன வேணா நடக்கட்டும், நான் சந்தோஷமா இருப்பேன்... ரகிட ரகிட ரகிட ஊ...’’ என ஜாலியாக ‘பாத் டப்’பில் பயணம்போன நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோதான் இணைய உலகில் வைரல். நெட்டிசன்களின் வாழ்த்து - வசவுகளோடு ‘ரிட்டக்கு ரிட்டக்கு டங்கி டங்கி டும்...’ நடைபோட்டுவரும் ‘நாம் தமிழர் கட்சி’யைச் சேர்ந்த மன்சூர் அலிகானிடம் பேசினேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“நிவர் புயல் வெள்ளத்தில், பாட்டும் படகுமாக ரகளை வீடியோ வெளியிட்டிருக்கிறீர்களே... என்ன விசேஷம்?’’

“ச்சும்மா விளையாட்டா போட்ட வீடியோ அது. இப்ப என்ன ‘நிவர்’ வெள்ளத்துல நான் ஜாலியா இருக்கேன்னு குற்றச்சாட்டு சொல்றீங்களா... நான் வசிக்கிற நுங்கம்பாக்கம் பகுதியில் நாலு அடிக்குத் தண்ணீ சூழ்ந்துகிச்சு. அதைப் பயன்படுத்திக்கணும் இல்லையா... அதனால, வீட்டுக்குப் பின்னாடி சும்மா கிடந்த குளியல் தொட்டியில ஏறி உக்காந்து பசங்களைத் தள்ளிவிடச் சொல்லி ஒரு வலம் வந்தேன். அதுலயும் பாட்டுப்பாடி என்னால முடிஞ்ச அளவு விழிப்புணர்வுதான் செஞ்சேன்!’’

“புயல் - வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, இப்படி ஜாலியாகப் படகு ஓட்டி விளையாடுகிறீர்களே... நியாயம்தானா?’’

“வெள்ளத்தில் மக்கள் சிரமப்படுகிறார்கள்தான்... ஆனால், ஆட்சியாளர்களோ ஆளுநரோ சிரமப்படவில்லையே... எதிரி நாட்டுக்காரன் படையெடுத்து வந்துட்ட மாதிரி, இருக்கிற கேட்டையெல்லாம் இழுத்து மூடி, பக்காவா அடைச்சுக்கிட்டு ராஜபோகமா வாழ்ந்துக்கிட்டிருக்கார் ஆளுநர். ‘வூட்டுல கெட, படுத்துக் கெட, கம்முனு கெடனு மக்கள்கிட்ட சொல்லிட்டு, அரசியல்வாதிங்க மட்டும் அவனவன் வெளியே போயி ஆட்டையப் போட்டுக்கிட்டிருக்கான். மக்கள்கிட்ட வாயை மூடி முகக்கவசம் போடச் சொன்னதே போராட்டம் பண்ணாம இருக்கத்தான்... நாட்டு மக்கள் படுகிற சிரமம் ஆளுகிறவர்களுக்கு எங்கே தெரிகிறது...’’

தி.மு.க உலகப் பணக்காரர்களைக்கொண்ட கட்சி! - கொரோனா என்று ஒரு நோயே கிடையாது! - என்னை செருப்பால அடிங்க!

“புயல் நிவாரணப் பணிகளை அரசு சிறப்பாகச் செய்திருப்பதாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனே பாராட்டியிருக்கிறாரே?’’

“கமல்ஹாசன் ஐயா எனக்கு மூத்த நடிகர். அவரு பாராட்டினால் பாராட்டிட்டுப் போகட்டும். அதுக்காக நானும் பாராட்டணுமா? ஒருவேளை அவர் பாராட்டினா 500 கோடி ரூபாய் கிடைக்கலாம். எனக்கு அஞ்சு பைசா கிடைக்காது. அரசியல் உள்குத்துகள் பல இருக்கு. கொரோனா பெயரைச் சொல்லி இன்னைக்கு நாட்டையே `பிக் பாஸ்’ ஷோ ஆக்கிட்டாங்க. இந்தவகையில, மோடிக்கே வழிகாட்டி நம்ம கமல்ஹாசன்தான்!’’ (வாய்விட்டுச் சிரிக்கிறார்).

“கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தான் பெரும்பான்மை அரசாங்கம் மக்களைக் காப்பாற்றிவிட்டதே?’’

“கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காம, உலகம் முழுக்க 10 கோடிப் பேரை கொரோனாவிலிருந்து காப்பாத்திட்டீங்கள்ல... அப்புறம் என்ன வெங்காயத்துக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கிறீங்க? இதுல ஃப்ரீயா தர்றோம்னு விளம்பரம் வேற. சும்மா மக்களை நாசம் பண்ணிக்கிட்டு இருக்காதீங்க. கொரோனான்னு ஒரு நோயே கிடையாது. அது வேற நோய்! கொரோனா டெஸ்ட் எடுக்குறதை முதல்ல நிப்பாட்டுங்க. இந்த பேப்பர், டி.வி-யில கொரோனா நியூஸை நிப்பாட்டுங்க. புரியுதா? அப்புறமும் கொரோனா இருந்தா, என்னைச் செருப்பால அடிங்க. ம்ம்... அடுத்த கேள்விக்கு வாங்க!’’

“முப்பாட்டன் முருகனைத் தமிழக பா.ஜ.க-வினரும் கொண்டாட ஆரம்பித் திருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சிதானே?’’

“கடந்த 10 வருடங்களாக நாங்கள் முப்பாட்டன் முருகனைக் கொண்டாடிவருகிறோம். திருச்செந்தூரில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போது, கோயிலிலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் அமைந்திருந்த மாநாட்டு மேடைக்குக்கூட எங்களை ஊர்வலமாகப் போக அனுமதிக்கலை இந்த அரசு. ஆனால், இப்போ தமிழக பா.ஜ.க-காரங்க ஊரெல்லாம் யாத்திரை போக மட்டும் அனுமதி கொடுக்குறாங்க.’’

“தமிழக பா.ஜ.க-வினரின் ‘வேல் யாத்திரை’ - தி.மு.க-வின் ‘தேர்தல் பிரசாரப் பயணம்’ இவை இரண்டையும் எப்படி ஒப்பீடு செய்வீர்கள்?’’

“இருக்கிற வேலையை எல்லாம் இந்திக்காரனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டு, நம்ம கையில் வேலைக் கொடுத்து யாத்திரை போகச் சொல்றாங்க பா.ஜ.க-காரங்க. இவங்க எல்லோரையும் அப்புறப்படுத்தி விரட்டுவோம். தமிழினத்துக்குக் கடும் துரோகம் இழைச்சிருக்க தி.மு.க., உலகப் பணக்காரர்களைக்கொண்ட கட்சியா இருக்குது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லிக்கிட்டு, அவங்களை முன்னேத்திக்கிட்டாங்க. 50 வருஷத்துல நிறைய சம்பாதிச்சிட்டாங்க. புதுசா வர்றவங்களுக்கு இவங்க வழிவிடணுமா... இல்லையா? ஒட்டுமொத்த தமிழர்களும் கடுங்கோபத்தில் இருக்கோம்!’’

தி.மு.க உலகப் பணக்காரர்களைக்கொண்ட கட்சி! - கொரோனா என்று ஒரு நோயே கிடையாது! - என்னை செருப்பால அடிங்க!

“வருகிற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுவீர்கள்?’’

“சத்தியமா அப்படி எந்த முடிவையும் நான் வெச்சிக்கலை. கட்சித் தலைவர் சீமான் சொன்னால், எந்தத் தொகுதியிலும் போட்டியிடுவேன். ஹெச்.ராஜாவை எதிர்த்து நிக்கச் சொன்னால்... அங்க போய் நிப்பேன். அதுவரைக்கு, நான் உண்டு என் நடிப்பு உண்டுனு நான் பாட்டுக்கு ‘ரகிட ரகிட ரகிட’ன்னு சுத்திக்கிட்டு இருக்கேன். ஆனா, அதுக்கும் இந்த எட்டு மாசமா ஆப்புவெச்சுட்டாங்க!’’

“கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியின்போது, ‘வாக்கு எந்திரத்தில் மோசடி செய்துவிட்டார்கள்’ என்று குற்றம்சாட்டிய நீங்கள், திரும்பவும் தேர்தலில் போட்டியிடுவேன் என்கிறீர்களே?’’

“வாக்கு எந்திரத்தில் மோசடி என்று பேட்டி மட்டும் கொடுக்கவில்லை. 3 லட்சம் ரூபாய் செலவில் வழக்கு தொடுத்து, உச்ச நீதிமன்றம் வரை போயிட்டு வந்துட்டேன். ஜனநாயகம்ங்கிற பேர்ல ஏமாத்திட்டு திரியறாங்க. இதுபத்தி யாரும் கேட்கவும் மாட்டேங்கிறாங்க. வேறு வழியில்லாம நானும் திரும்பவும் போட்டியிடுறேன். நெஞ்சின் நியாயத்தோட களத்துக்குப் போறேன். இதற்காக வன்முறையில் இறங்கி யாரையும் நான் வெட்டவா முடியும்?’’

- த., படங்கள்: பெ.ராகேஷ்