Published:Updated:

‘நான் ஹீரோ; தி.மு.க. வில்லன்!’

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

மேடைதோறும் திருக்குறளைப் பேசினேன். என்னைப் பார்த்து அப்படியே காப்பியடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தமிழின் மாண்பைப் பேசுவது வெறும் அரசியலுக்காக மட்டும்தான்.

‘நான் ஹீரோ; தி.மு.க. வில்லன்!’

மேடைதோறும் திருக்குறளைப் பேசினேன். என்னைப் பார்த்து அப்படியே காப்பியடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தமிழின் மாண்பைப் பேசுவது வெறும் அரசியலுக்காக மட்டும்தான்.

Published:Updated:
சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்
சென்னையில் ஒரே மேடையில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துவைத்த கையோடு, தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கியிருக்கிறார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மிகவும் பரபரப்பாக இருந்த அவரிடம், தமிழகத் தேர்தல் சூழல், சசிகலாவுடனான சந்திப்பு, தி.மு.க எதிர்ப்பு, தம்பிகள் விலகல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பேசினேன்.

‘`சசிகலாவைச் சந்தித்தபோது என்ன பேசினீர்கள்?’’

‘`நாங்கள் பல விஷயங்கள் பேசினோம். ஆனால், அரசியல் பேசவில்லை. இப்போது மட்டுமல்ல, சசிகலா அம்மையாரின் கணவர் நடராசன் மறைவின்போதும் தனிப்பட்ட முறையில் சந்தித்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறேன். தனிப்பட்ட குடும்ப விஷயங்களைத்தான் பேசிக்கொண்டோம்.’’

‘`ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரைச் சந்திப்பதுதான் தூய்மையான அரசியலா?’’

‘`நான் அவரை அரசியல்ரீதியாகச் சந்திக்கவில்லை. தனிப்பட்ட குடும்ப உறவு என்கிற அடிப்படையில் சந்தித்தேன். கலைஞருக்கு எதிராகத் தீவிரமாக அரசியல் செய்தபோதும், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துமனையில் சென்றுபார்த்தேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக கொள்கைரீதியாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோதும், அம்மையார் சுலோசனா சம்பத் இறந்தபோது வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்தேன். அது மனித மாண்பு. எனக்கு மனித வெறுப்பு என்பது கிடையவே கிடையாது. அதேபோல, ‘மாற்றுக் கட்சியினர் குடும்பத் திருமணத்துக்குப் போகக்கூடாது’, ‘துக்க நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாது’ என்பன போன்ற அரசியல் அநாகரிகங்களை வெறுக்கிறேன். புதிய அரசியல் மாண்பை உருவாக்க நினைக்கிறேன்.’’

‘`திருக்குறள் போன்ற தமிழ் அடையாளங்களைச் சமீபகாலமாக மோடியும் அமித் ஷாவும் தூக்கிப் பிடிக்கிறார்களே?’’

‘`தமிழ்நாட்டுக்குள் நுழைவதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் தூக்கிப் பிடிக்கிறார்கள். அதற்குக் காரணமும் நான்தான். மேடைதோறும் திருக்குறளைப் பேசினேன். என்னைப் பார்த்து அப்படியே காப்பியடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தமிழின் மாண்பைப் பேசுவது வெறும் அரசியலுக்காக மட்டும்தான். வாத்தை ‘பேக் பேக்’ என அதன் குரலிலேயே கத்திப் பிடித்துதான் குழம்புச் சட்டிக்குள் கொண்டு போகமுடியும். அதே பாணியைத்தான் பா.ஜ.க-வும் கடைப்பிடிக்கிறது. ஆக்கபூர்வமாகத் தமிழை வளர்த்தெடுக்க மத்திய பா.ஜ.க அரசு ஒன்றுமே செய்யவில்லை. என் மொழிக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை.’’

‘`நீங்கள் தூக்கிப் பிடித்த முருகன், வேல் அடையாளங்களைப் பா.ஜ.க-வினர் கடத்திக்கொண்டு அரசியல் செய்கிறார்களே?’’

‘`என் மூதாதை முருகன் அரசியல் அடையாளம் அல்ல; என் இன அடையாளம். பண்பாட்டு மெய்யியல் கோட்பாட்டு அடையாளம். அவரை அரசியல் அடையாளமாக முன்னிறுத்துவது அபத்தம், கேவலம்.’’

‘நான் ஹீரோ; தி.மு.க. வில்லன்!’

‘`உங்கள் வேல் அடையாளத்தைக் கடத்தும் பா.ஜ.க-வையோ, பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க-வையோ எதிர்க்காமல், தி.மு.க-வை எதிர்ப்பதன் நோக்கம் என்ன?’’

“நான் தி.மு.க-வைத்தான் எதிர்ப்பேன். வில்லன் இல்லாத ஹீரோவுக்கு வேலை இல்லையே. கோட்பாட்டளவில், திராவிடக் கட்சிகளின் தாய் தி.மு.கதான். அதைத்தான் எதிர்க்க முடியும். அதுமட்டுமல்ல, என் தமிழினம் ஈழத்தில் செத்தபோது பதவிக்காக வேடிக்கை பார்த்தது தி.மு.கதான். அந்த வலி எனக்கு இருக்கிறது. தவிர, யாரும் எதிர்க்கக்கூடாத அளவுக்கு தி.மு.க புனிதமான கட்சியும் இல்லை. ஆனால், பா.ஜ.க-வை நான் எதிர்க்கவில்லை என்று சொல்வதை ஏற்கமுடியாது. மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு நான் பா.ஜ.கவை எதிர்த்து அதிகமாகப் பேசியிருக்கிறேனா? அல்லது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிகமாகப் பேசியிருக்கிறாரா?’’

‘`ஆளும்கட்சியான அ.தி.மு.க-விடம் ஏன் மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்கிறீர்கள்?’’

“நவம்பர் 1 தமிழ்நாட்டு நாள் அறிவிப்பு, தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை, காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் போன்ற விஷயங்களை நான் சொல்லித்தான் முதல்வர் நிறைவேற்றினார். அதற்கு என் நன்றியைத் தெரிவித்தேன். ஆனால், அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளையும் நான் கடுமையாக விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை?’’

‘`ஈழத்தில் இறுதிப்போர் முடிந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதாவது சொல்லுங்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா?’’

‘`இருக்கிறார் என்று சொன்னால் என்ன செய்யப்போகிறீர்கள்? இல்லை என்று சொன்னால் என்ன செய்யப்போகிறீர்கள்? காலம் வரும்போது நானே சொல்வேன். அவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கையில்தான் நான் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறேன்.’’

‘`உங்கள் பேச்சால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் உங்கள் மேடைப்பேச்சுகளே கேலிக்கூத்தாவதை உணர்கிறீர்களா?’’

‘` ‘உன்னை விமர்சிப்பவர்களுக்கு நிரூபிக்கப் போராடாதே, உன்னை நம்பியிருப்பவர்களுக்கு உண்மையாக இருக்கப் போராடு’ என்கிறார் லெனின். ‘விமர்சிக்கப்படுவதும் ஒருவகையான பாராட்டுதான்’ என்கிறார் ஹிட்லர். ‘விமர்சனம் என்பது வெறும் சொற்கள்தானே தவிர, நம்மைக் காயப்படுத்தும் கற்கள் அல்ல’ என்கிறார் எங்கள் தலைவர் பிரபாகரன். நான் இந்த மேற்கோள்களைத்தான் கடைப்பிடிக்கிறேன். வேலை வெட்டி இல்லாதவன்தான் என்னைக் கேலி செய்துகொண்டிருப்பான். நான் எதையும் எடுத்துக்கொள்வதில்லை.’’

‘`எந்த ஆண்டு நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று இலக்கு வைத்திருக்கிறீர்கள்?’’

‘`ஏன் அது இந்த ஆண்டாக இருக்கக்கூடாது? ஓட்டுக்குக் காசு கொடுக்காமல், இரண்டு திராவிடக் கட்சிகளாலும் என்னை வெல்ல முடியாது. அவர்களுக்குத்தான் பிரசாந்த் கிஷோர், சுனில் எல்லாம் தேவைப்படுகிறார்கள். என் சொந்த மூளைக்கு வேலை செய்யவே எனக்கு நேரமில்லை. அதேவேளை, நான் வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்ட வீரன். ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்கிற கொள்கையைக் கடைப்பிடிப்பவன்.’’

‘`நாம் தமிழர் கட்சி சார்பாக 2016 தேர்தலில் போட்டியிட்ட 234 வேட்பாளர்களில் தற்போது 178 பேர் கட்சியிலேயே இல்லை என உங்கள் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய ராஜீவ் காந்தி சொல்லியிருக்கிறாரே?’’

‘நான் ஹீரோ; தி.மு.க. வில்லன்!’

‘`கட்சியை விட்டு வெளியில் போனவர் வேறென்ன பேசமுடியும்? கட்சியை விட்டு சிலர் விலகியிருந்தாலும் பலர் புதிதாகச் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிரிந்து செல்பவர்கள் தங்கள் சுயநலனுக்காகச் செல்கிறார்கள். அவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.’’

‘`தம்பிமார்களோடு கருத்து வேறுபாடு, பிணக்கினைப் பேசிச் சரிசெய்திருக்கக்கூடாதா?’’

‘`பிணக்கு, அவர்களின் தன்னலத்தால் உருவானது. கொள்கையை, கோட்பாட்டை, கட்சி நலனை விடுத்து அவர்கள் மட்டுமே மேலோங்கியிருக்க வேண்டும் என நினைத்தார்கள். அதைப் பேசிச் சரிசெய்ய முடியாது. அவர்கள் துரோகிகள். நான் பாய்ச்சிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி தி.மு.க, அ.தி.மு.க-வுக்குச் சென்று வியாபாரம் செய்து பிழைக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்பாக அவர்கள் தி.மு.க, அ.தி.மு.க-வுக்குச் சென்றிருந்தால் அவர்களை யாருக்கும் தெரிந்திருக்காது.’’

‘`தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு ‘சீமானிசம்’ என்ற கொள்கையைப் பரவவிடுவது தவறு என உங்களிடமிருந்து பிரிந்த தம்பிகள் சொல்கிறார்களே?’’

‘`நான் தமிழ்த் தேசியம் பேசாமல் இந்தியிசம், தெலுங்கிசமா பேசுகிறேன். என்மீது பொறாமை பிடித்தவர்கள் அப்படிப் பரப்புகிறார்கள். சீமானிசம் என்பது பிரபாகரனிசத்தைக் கொண்டு செல்வதுதான். இன்னும் சொல்லப்போனால், சீமானிசமே பிரபாகரனிசம்தான். என் அண்ணன் பிரபாகரன் துவக்கை ஆயுதமாகத் தூக்கினார். நான் வாக்கைத் தூக்கியிருக்கிறேன். சீமானிசத்துக்கு என்று தனிப்பட்ட கோட்பாடு ஒன்றும் கிடையாது.’’

‘`தேர்தல் ஜனநாயகத்தில் ஈடுபாடு இருக்கும் உங்களுக்கு கூட்டணி அரசியலில் ஏன் நம்பிக்கை இல்லை?’’

‘`கூட்டணி வைத்தால் எப்படி 117 பெண்களுக்கு இடம் கொடுக்கமுடியும்? ஆதித் தமிழர்களுக்கு பொதுத்தொகுதியில் எப்படி இடம் வழங்கமுடியும்? இன்னும் அரசியல் அங்கீகாரம் கிடைக்காத பல சமூகங்களுக்கு எப்படி அங்கீகாரம் வழங்க முடியும்? என் தனித்துவத்தை ஒருபோதும் இழக்கமாட்டேன். அதேவேளை, ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை உள்ளிட்ட என் கோட்பாட்டை ஏற்று வருபவர்கள் வரட்டும். இந்தத் தேர்தலிலும் சிலர் வந்தார்கள். ஆனால், ‘காலம் கடந்துவிட்டது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். 2026 தேர்தலில் ஒன்றுசேர்வோம்’ எனச் சொல்லியிருக்கிறேன்.’’

‘` ‘ஆடு மாடு மேய்த்தல் அரசு வேலை’ போன்ற நடைமுறைச் சாத்தியமில்லாத எமோஷனல் தேர்தல் வாக்குறுதிகளைச் சொல்லித் தமிழர்களை ஈர்க்கிறார்’ என உங்களை விமர்சிக்கிறார்களே?’’

‘`நடைமுறையில் சாத்தியம் இருப்பதால்தான் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய், 1,500 ரூபாய் கொடுக்கும்போது நான் சொல்கின்ற விஷயங்கள் மட்டும் எப்படி சாத்தியமில்லாத விஷயங்களாகும்? பொருளாதாரம் குறித்துத் தெரியாதவர்கள் ஏதாவது பேசிக்கொண்டி ருக்கிறார்கள். நான் பொருளாதாரம் படித்த மாணவன். நான் சொல்கின்ற விஷயங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.’’

‘`உங்கள் மகனின் காதுகுத்து விழாவைக் கட்சி விழாவாகக் கொண்டாடியது விமர்சிக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘`நாம் தமிழர் கட்சியே ஒரு குடும்பம்தான். என் மகனின் காதுகுத்துக்கு அவனின் சித்தப்பன், பெரியப்பன், மாமா, அத்தைகள் வருகிறார்கள். நான் குடும்ப விழாவாகத்தான் நடத்தினேன். கட்சியின், பண்பாட்டு விழாவாக மாற்றியது என் தம்பி வீரத்தமிழர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன்தான். என் மகனின் காதுகுத்துக்கு, கட்சித் தம்பிகள் வாழ்த்துப் போடத்தான் செய்வார்கள். நிச்சயமாக அது பண்பாட்டுப் புரட்சிதான். காரணம், நான் பல காலம் கழித்து என் குலசாமி கோயிலுக்கு அப்போதுதான் சென்றிருந்தேன். அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை?’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism