Published:Updated:

30 ஆண்டு சிறை வாழ்க்கையில் 5-வது பரோல்; காட்பாடியில் குடும்ப நண்பரின் வீட்டில் தங்குகிறார் நளினி!

நளினி
News
நளினி

பரோலில் வெளிவரும் நளினி இந்த முறை, காட்பாடி பிரம்மபுரம் கெங்கையம்மன் கோயில் தெருவிலிருக்கும் குடும்ப நண்பரான சத்தியவாணி என்பவரின் வீட்டில் தங்குகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவர் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இவர்கள் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்வதற்காகத் தன் மகள் நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவர் தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக் கேட்டு கடந்த மே, ஆகஸ்ட் மாதங்களில் தமிழக உள்துறைச் செயலருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, நீதிமன்றம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

நளினி
நளினி

ஏற்கெனவே, இந்த வழக்கு விசாரணையின்போது, நளினிக்கு பரோல் கோரிய விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ``நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவுசெய்துவிட்டது" என்று தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கூறினார். இதையடுத்து, வழக்கைத் திரும்பப் பெறுவதாக நளினியின் தாயார் பத்மா தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாளை அல்லது நாளை மறுநாள் நளினி பரோலில் வெளிவருவதற்கு வாய்ப்பிருப்பதாக அவரின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்திருக்கிறார். கடைசியாக, 2019-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி ஒரு மாத பரோலில் வெளிவந்திருந்தார் நளினி. அப்போது, லண்டனில் தங்கியிருக்கும் தன் மகள் ஹரித்ராவுக்குத் திருமணம் செய்துவைக்கப்போவதாகக் கூறியிருந்தார். வேலூர் பெண்கள் சிறையிலிருந்து ஆரஞ்சு நிற பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு புன்னகைத்தபடி வெளியே வந்தார் நளினி. சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரத்திலிருக்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த முறை நளினி தங்கியிருந்த வீடு.
கடந்த முறை நளினி தங்கியிருந்த வீடு.

``நல்ல நடத்தையுடன் நடந்துகொள்ள வேண்டும். சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது. அரசியல் கட்சித் தலைவர்கள், எந்தவோர் அமைப்பையும் சந்திக்கக் கூடாது’’ என்வை உட்பட, 12 நிபந்தனைகளைக் கடைப்பிடிக்குமாறு நளினிக்குச் சிறை நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. பரோலில் இருந்த நாள்களில், அவர் மகள் லண்டனிலிருந்து வந்து பார்க்கவில்லை. மீண்டும் சிறைக்குத் திரும்பிய நளினி தொடர்ந்து பரோல் கேட்டுவந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அவருக்கு பரோல் கிடைத்திருக்கிறது. இந்த முறை சத்துவாச்சாரியிலிருக்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கவில்லை. காட்பாடி பிரம்மபுரம் கெங்கையம்மன் கோயில் தெருவிலிருக்கும் அவர் கணவர் முருகனுக்கு வேண்டப்பட்ட குடும்ப நண்பரான சத்தியவாணி என்பவரின் வீட்டில் தங்குகிறார்.

30 ஆண்டுக்கால சிறை வாழ்க்கையில், பரோலில் ஐந்தாவது முறையாக வெளியுலகைப் பார்க்கவிருக்கிறார் நளினி. முதலில் தம்பி திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பரோல் கிடைத்தது. பின்னர் தந்தை மரணித்தபோது அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக இரண்டாவது முறையாக நான்கு மணி நேரம் மட்டுமே சிறப்பு பரோலில் வெளியில் வந்தார். தந்தையின் 14 நாள் காரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மூன்றாவது முறை பரோலில் வந்தவர், ஒரு நாள் இரவு முழுவதும் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். நான்காவது முறையாக 2019-ம் ஆண்டு ஒரு மாத பரோலில் வெளியில் வந்தவர், தாய் பத்மா, சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோருடன் சத்துவாச்சாரியில் தங்கியிருந்தார். அதோடு, தற்போதுதான் வெளியில் வரவிருக்கிறார்.