Published:Updated:

‘புதன்கிழமை நளினி பரோலில் ரிலீஸ்; வேலூரில் தங்குகிறார்?’ - வழக்கறிஞர் தகவல்

புதன்கிழமையிலிருந்து சனிக்கிழமைக்குள் பரோலில் வெளியே வருகிறார். சில சிக்கல்கள் காரணமாக வேலூரிலேயே தங்குவதற்காக முடிவெடுத்திருக்கிறோம்..

நளினி
நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதிகளான முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மகள் ஹரித்ராவின் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

முருகன்
முருகன்

அந்த மனு மீதான விசாரணையில், ஒரு மாதம் மட்டும் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, பரோல் தேதி மற்றும் நளினி தங்கும் இடம், இரண்டு நபர்களின் ஜாமீன் உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறை கேட்டுக்கொண்டது.

நேற்று (13-ம் தேதி) நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, வேலூர் சிறைக்கு வந்தார். சிறையில் உள்ள நளினி, முருகனை தனித்தனியாகs சந்தித்துப் பேசினார். பின்னர், நளினியின் தாய் பத்மா மற்றும் குடும்ப நண்பர் சத்தியவாணி ஆகியோரின் உறுதிமொழி பத்திரத்தை சிறை நிர்வாகத்திடம் வழக்கறிஞர் புகழேந்தி ஒப்படைத்தார்.

‘‘நாலைந்து மாப்பிள்ளைகளின் பொருத்தம் நன்றாக இருக்கிறது. நளினி வெளியே வந்தவுடன் மகளுக்கான மாப்பிள்ளையைத் தேர்வு செய்வார்.’’
வழக்கறிஞர் புகழேந்தி.

நளினி பரோலில் வெளிவந்து தங்குவதற்கான இடத்தையும் தேர்வுசெய்து இருப்பிடச் சான்றிதழை வழக்கறிஞர் கொடுத்திருக்கிறார். காட்பாடி பிரம்மபுரம் அல்லது சென்னை கோட்டூர்புரம் ஆகிய இரண்டு இடங்களைத் தேர்வுசெய்திருப்பதாகவும், அவற்றில் நளினி எங்கு தங்க வேண்டுமென்று சிறை அதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது சம்பந்தமாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் இன்றுகாலை பேசினோம். அவர், ‘‘இந்த வாரப் புதன்கிழமையிலிருந்து சனிக்கிழமைக்குள் நளினி பரோலில் வெளியே வருகிறார். அதில், எந்த நாள் என்பதைச் சிறைத்துறை தான் முடிவுசெய்யும். நளினியைச் சென்னையில் தங்க வைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதனால், வேலூரிலேயே தங்க அனுமதி கேட்டுள்ளோம். முருகன் தற்சமயம் பரோல் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

மகளின் திருமணத்துக்குள் விடுதலையாகிவிடுவேன் என்ற நம்பிக்கையில் முருகன் இருக்கிறார். விடுதலை செய்யப்படாத பட்சத்தில் மகளின் திருமண ஏற்பாடுகளுக்குப் பிறகு, முருகன் பரோலில் வருவார். நல்ல வரன்களைப் பார்த்துவருகிறோம். நாலைந்து மாப்பிள்ளைகளின் பொருத்தம் நன்றாக இருக்கிறது. நளினி வெளியே வந்தவுடன் மகளுக்கான மாப்பிள்ளையைத் தேர்வுசெய்வார்’’ என்றார்.