Published:Updated:

`ரீல் தலைவர் அல்ல; எடப்பாடி ரியல் தலைவர்'- ரஜினி பேச்சை விமர்சித்த அ.தி.மு.க நாளேடு!

முதலமைச்சர் பதவி கற்பனை நாற்காலிகள் அல்ல என்பதனை கமல்ஹாசனுக்கு ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கும் மறைமுக அறிவுரையாகவே இக்கருத்து தோன்றுகிறது.

ரஜினி - எடப்பாடி பழனிசாமி
ரஜினி - எடப்பாடி பழனிசாமி

``எல்லோர் வாழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராவார் எனக் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால், அவர் முதல்வரானார். அதுக்கு அப்புறம் அவருடைய ஆட்சி இருபது நாள் தாங்காது, ஒரு மாசம் தாங்காது, மேக்ஸிமம் நாலு மாசம், அஞ்சு மாசத்துல கவிழ்ந்துடும்னு சொல்லாத ஆளே இல்லை. அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழல. நேற்றும் அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்துகொண்டிருக்கிறது. நாளைக்கும் நடக்கும்" என கமல் 60 விழா மேடையில் இப்படி கூறியவர் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினி
ரஜினி

ரஜினியின் இந்தப் பேச்சுக்கு தற்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நேற்று அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஓ.பி.எஸ் ரஜினியின் கருத்தைக் கண்டிக்கிறேன் என பகிரங்கமாகக் கூறினார். தொடர்ந்து அ.தி.மு.க தரப்பிலிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க கட்சியின் நாளிதழான நமது அம்மாவில் ரஜினியின் பேச்சுக்கு பதில் கொடுத்துள்ளது. வழக்கம்போல குத்தீட்டி பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில், ``எடப்பாடியார் ஆட்சி நான்கு, ஐந்து மாதங்கள்கூட தாங்காது என்றார்கள். ஆனால் இன்று வரை சிறப்பாக நீடிக்கிறது. இதுபோன்ற அதிசயம் நாளையும் நிகழும் என ரஜினிகாந்த் கமல் பிறந்தநாள் விழாவில் பேசியிருக்கிறார்.

`அதிசய' ரஜினி; `தம்பிமார்கள்' எஸ்.ஏ.சி; `சான்ஸ் கொடுங்க' விஜய் சேதுபதி... உலக நாயகனின் `உங்கள் நான்' விழாவில் நடந்தது என்ன?!

ஆக, வினா குறிப்புகளை வியப்புக் குறிகளாக மாற்றி கேள்விகளையும், கேலிகளையும் ஆச்சர்யங்களாக்கி எடப்பாடி நடத்துகிற நல்லாட்சி 2021-லும் தொடரும் என்பதைத்தான் நாளைக்கும் நடக்கப்போகிற அதிசயம் என்பதாக சூசக ஜோதிடத்தை சூப்பர் ஸ்டார் சொல்லியிருக்கிறார் போலும். மொத்தத்தில் முதலமைச்சர் பதவி என்பது தான் எடுக்கும் சினிமாக்களில் முதல் சீனில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டிவிடுகிற கற்பனை நாற்காலிகள் அல்ல என்பதனை கமல்ஹாசனுக்கு ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கும் மறைமுக அறிவுரையாகவே இக்கருத்து தோன்றுகிறது.

ரஜினி
ரஜினி

கூடவே, ``தான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்படியார் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்" என்றும் சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். உண்மைதான் உச்ச நட்சத்திரமே. கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்களும் கன்னித்தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டாராவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனாலும் காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கி கொள்பவர்கள்தான் தலைவர்களாக, அறிஞர்களாக தடம் பதித்து உலக சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள்.

ரஜினி மீது அடுத்தடுத்து அஸ்திரங்கள்... எடப்பாடி 'எழுச்சி'யின் பின்னணி!

அப்படித்தான் எங்கள் எடப்பாடியாரும் படிப்படியாய் உழைத்து, தான் கொண்ட இயக்கத்தின் மீது குன்றாத விசுவாசத்தைப் பதித்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக அதன்பிறகு இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து ஒரு தொண்டனாலும் தலைவனாக முடியும், தூய தமிழ் உலகை ஆளுகிற முதல்வனாக முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். இது சினிமாவில் நடித்துவிட்டு மறு சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என்பதை உணர்த்துகிற வரலாறு.

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

மாமனிதர்கள் சாதனை மறுநொடியில் நிகழ்வது அல்ல. அது, ஊர் உறங்கும் வேளையில் உறங்காது விழித்து ஓயாது பாடுபடும் உழைப்பின் ரகசியம் என்பதற்கு எடப்பாடியார் ஏற்றதோர் சாட்சி. இதை இலைமறைக் காயாக சுட்டிக் காட்டியிருக்கிறது உங்கள் பேச்சு, அப்படித்தானே. எப்படியாயினும் மாற்றாரும் போற்றும் சாதனை சரித்திரத்தை கழகம் நாளையும் படைக்கும் நீங்கள் சுட்டி காட்டுகிற அதிசயம் இதுதான் என்பதை கல்வெட்டும் சாட்சியாய் உரைக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எடப்பாடி ஆட்சி முடிந்தால் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்!”