Published:Updated:

'மாறும் மாவட்டச் செயலாளர்?' - நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நிலவரம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக

திமுக-வின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் கே.எஸ்.மூர்த்தியின் பதவி பறிக்கப்பட்டு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கும் 'மதுரா' செந்தில்குமார் நியமிக்கப்படலாம் என்பதுதான், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக-வில் நடக்கும் ஹாட் டாக்.

'மாறும் மாவட்டச் செயலாளர்?' - நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நிலவரம்

திமுக-வின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் கே.எஸ்.மூர்த்தியின் பதவி பறிக்கப்பட்டு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கும் 'மதுரா' செந்தில்குமார் நியமிக்கப்படலாம் என்பதுதான், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக-வில் நடக்கும் ஹாட் டாக்.

Published:Updated:
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக

அமைப்புரீதியாக திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் அகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதுதான், தி.மு.க-வின் நாமக்கல் மேற்கு மாவட்டம். மேற்கு மாவட்டச் செயலாளராக கே.எஸ்.மூர்த்தி இருக்கிறார். இவர், கடந்த தேர்தலில் பரமத்தி வேலூரில் நின்று, அ.தி.மு.க வேட்பாளர் சேகரிடம் தோல்வியைத் தழுவினார்.

கே.எஸ்.மூர்த்தி (தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்)
கே.எஸ்.மூர்த்தி (தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்)

அன்று தொடங்கியது, அவருக்கான இறங்குமுகம். தற்போது, அந்தச் சறுக்கல், அவர் வகித்துவரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு வ(ளர்)ந்திருப்பதாக, தி.மு.க-வினர் மத்தியில் பரபர பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

'மதுரா' செந்தில்குமார்
'மதுரா' செந்தில்குமார்

இது குறித்து நம்மிடம் பேசிய, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க புள்ளிகள் சிலர், ``முன்னாள் மத்திய அமைச்சர் காந்திசெல்வனின் ஆதரவாளர் கே.எஸ்.மூர்த்தி. கடந்த 2016 - 21 வரை பரமத்தி வேலூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார். ஆனால், எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது, சட்டமன்றத்துக்குள் செல்ல முடிந்த அவரால், தி.மு.க ஆட்சியமைத்த தேர்தலில் பரமத்தி வேலூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். அதற்குக் காரணம், கட்சிக்காரர்களுக்கே அவர்மீது இருந்த அதிருப்திதான். கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது அப்போதைய அ.தி.மு.க அமைச்சர் தங்கமணியோடு, கே.எஸ்.மூர்த்தி ரகசிய டீலிங்கில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அதனால்தான், 2021 சட்டமன்றத் தேர்தலில் பரமத்தி வேலூரில் தோல்வியைத் தழுவினார். அதோடு, தி.மு.க மேற்கு மாவட்டத்தில் வரும் குமாரபாளையம் தொகுதியையும், தி.மு.க மாவட்டச் செயலாளராக வெற்றிபெற வைக்காமல், அ.தி.மு.க தங்கமணியிடம் கோட்டைவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மீதமுள்ள திருச்செங்கோடு தொகுதியில் தி.மு.க கூட்டணி கட்சியைச் சேர்ந்த கொங்கு ஈஸ்வரன் வென்றார். ஆனால், அ.தி.மு.க கோட்டையாக இருந்த நாமக்கல்லில், அமைப்புரீதியாக தி.மு.க கிழக்கு மாவட்டத்தில் வரும் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும், அந்த மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தி.மு.க-வை வெற்றிபெறவைத்தார். இது, தி.மு.க தலைமையிடம் ஒப்பீட்டளவில் கே.எஸ்.மூர்த்திக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இருந்தாலும், 'எம்.எல்.ஏ-வாக முடியாவிட்டால் என்ன, அமைச்சர் பதவியைவிட வலுவான மாவட்டச் செயலாளர் பதவி இருக்கிறதே, அதைவைத்து அரசியல் செய்யலாம்' என்றுதான் அவர் தெம்பாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. அதுபோலவே, பரபரப்பாகச் செயல்பட ஆரம்பிச்சார். ஆனால், அதற்கும் வேட்டு வைக்கும்விதமாக, சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைந்தது.

வெப்படை செல்வராஜ்
வெப்படை செல்வராஜ்

மேற்கு மாவட்ட தி.மு.க எல்லைக்குள் குமாரபாளையம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு என மூன்று நகராட்சிகள் உள்ளன. இவற்றில், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், தி.மு.க 14 இடங்களையும், அ.தி.மு.க 10 இடங்களையும், சுயேச்சைகள் 9 இடங்களையும் கைப்பற்றினர். ஆளுங்கட்சியான தி.மு.க தரப்பில் சுயேச்சைகளிடம் பேசி, தி.மு.க நகராட்சியைக் கைப்பற்ற கே.எஸ்.மூர்த்தி முயல்வார் என்று தலைமையே நினைத்தது. ஆனால், 31-வது வார்டில் நின்று வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் என்பவர், 7 தி.மு.க, 7 சுயேச்சைகள், 3 அ.தி.மு.க கவுன்சிலர்களை 'வளைத்து', நகராட்சியைக் கைப்பற்றினார்.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள், மற்ற இரண்டு நகராட்சிகளிலும் கே.எஸ்.மூர்த்திக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. மாவட்டச் செயலாளராக, பள்ளிப்பாளையம் நகராட்சித் தலைவர் பதவிக்கு, தன் ஆதரவாளரான அமுதா கலையரசன் பெயரையும், திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் பதவிக்கு திருச்செங்கோடு நகரப் பொறுப்பாளர் தாண்டவன் பெயரையும் சிபாரிசு செய்தார். ஆனால், அவர் பேச்சையும் மீறி திருச்செங்கோடு நகராட்சித் தலைவராக சுரேஷ்பாபு என்பவரும், பள்ளிப்பாளையம் நகராட்சித் தலைவராக, 'பட்டாஸ்' செல்வராஜும் தன்னிசையாக கவுன்சிலர்களை வளைத்து, பதவியேற்றுக்கொண்டனர்.

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்

இதனால், கே.எஸ்.மூர்த்தி பதவிக்கு இன்னும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், மாவட்டச் செயலாளர் பதவிக்கு இவருக்கு எதிராக பள்ளிப்பாளையம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் வெப்படை செல்வராஜ், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் 'மதுரா' செந்தில்குமார், மேற்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் இறையமங்கலம் சுரேஷ்குமார் ஆகியோர் மோதினர். இருந்தாலும், 'பதவியைத் தக்கவைத்துக்கொள்ளலாம்' என்று கே.எஸ்.மூர்த்தி தெம்பாக இருந்தார். இதற்கிடையில், நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், முதல்வர் குடும்பத்தினர் மூலம் நாமக்கல்லை ஒரே மாவட்டமாக அறிவிக்க வைத்து, அதற்கு மாவட்டச் செயலாளராக ஆகலாம் என்று காய்நகர்த்தினாராம்.

அதற்காக, சமீபத்தில் தி.மு.க மேற்கு மாவட்டப் பகுதியில் காவிரியில் வெள்ளம் வந்து மக்கள் பாதிக்கப்பட்டபோது, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மக்களைச் சந்திப்பது, நலத்திட்டங்களை வழங்குவது என்று தனது 'ராஜ்யசபா எம்.பி' பதவியை முன்வைத்துச் செயல்பட்டார். அதை கே.எஸ்.மூர்த்தி ரசிக்கவில்லை. தலைமை வரை புகார் அனுப்பினார். ஒன்றும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான், வரும் 23-ம் தேதி நாமக்கல் மேற்கு மாவட்டத்துக்குத் தேர்தல் நடக்கவிருப்பதாக தலைமை அறிவித்தது. அதற்காக, கே.எஸ்.மூர்த்தி, வெப்படை செல்வராஜ், 'மதுரா' செந்தில்குமார் மூவரும் சென்னையில் முகாமிட்டனர். தலைமை 'ஆபரேஷன் கொங்கு' என்ற அசைன்மென்ட்டைக் கையில் எடுத்திருக்கிறதாம். அதனால், துடிப்பான, உதயநிதி வயதில் உள்ளவர்களுக்குப் பதவி கொடுக்கலாம் என்று முடிவெடுத்ததாகத் தெரிகிறது. அதனால், 'மதுரா' செந்தில்குமாரை மட்டும் அப்ளிகேஷன் கொடுக்கச் சொன்னார்களாம். இதைவைத்துப் பார்த்தால், 'மதுரா' செந்தில்குமாரை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக அறிவிக்க 'டிக்' பண்ணிவிட்டார்களென்றே தெரிகிறது. 25-ம் தேதி அவர் பெயர் அறிவிக்கப்படுவது ஒன்றுதான் பாக்கி என்கிற தகவலும் வருகிறது. இதனால் சோகமான கே.எஸ்.மூர்த்தி, ஊருக்குத் திரும்பிவிட்டாராம். இதில் என்ன விஷயமென்றால், 'மதுரா' செந்தில்குமாரே, கே.எஸ்.மூர்த்தி ஆதரவாளராக இருந்தவர்தான். தன் குரு காந்திசெல்வன் இப்போது அரசியலில இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதைப்போலத்தான், கே.எஸ்.மூர்த்தி நிலைமையும் மாறப்போகிறது" என்றார்கள்.

கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்)
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்)

இது குறித்து, கே.எஸ்.மூர்த்தி தரப்பில் பேசினோம். ``எல்லாம் கட்டுக்கதைகள். கட்சிக்காக அண்ணன் எப்படியெல்லாம் உழைத்தார் என்பது பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கே தெரியும். அதனால், அண்ணனின் விசுவாசமும், கட்சிமீதான பற்றுதலும் தலைமைக்கு நன்றாகவே தெரியும். தொடர்ந்து அண்ணனையே கட்சித் தலைமை மாவட்டச் செயலாளராக நீட்டிக்கவிருக்கிறது. மற்றபடி, நீங்கள் சொல்லும் அத்தனை தகவல்களும் அரசியல் எதிரிகள் கிளப்பும் வதந்திகள்" ஏன்றார்கள்.