Published:Updated:

உள்ளாட்சிப் பிரதிநிதிகளோடு ஓ.பி.எஸ் அணியில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ... தங்கமணி `ஷாக்’

ஓ.பி.எஸ் அணியில் இணைந்த சந்திரசேகரன் ( நா.ராஜமுருகன் )

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுத்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது குற்றம்சாட்டிய, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகளோடு ஓ.பி.எஸ் அணியில் இணைந்து, தங்கமணிக்கு 'ஷாக்' கொடுத்திருக்கிறார்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளோடு ஓ.பி.எஸ் அணியில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ... தங்கமணி `ஷாக்’

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுத்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது குற்றம்சாட்டிய, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகளோடு ஓ.பி.எஸ் அணியில் இணைந்து, தங்கமணிக்கு 'ஷாக்' கொடுத்திருக்கிறார்.

Published:Updated:
ஓ.பி.எஸ் அணியில் இணைந்த சந்திரசேகரன் ( நா.ராஜமுருகன் )

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் கடந்த 2016 - 21 வரை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் சந்திரசேகரன். அதோடு, அ.தி.மு.க கொல்லிமலை ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்துவந்தார். இந்த நிலையில், அ.தி.மு.க நாமக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கும், இவருக்கும் கடந்த ஆட்சியில் ஏழாம் பொருத்தமாக இருந்தது. தனக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் தன்னிச்சையாக நடக்கிறார் என்று சந்திரசேகரன் மீது, தங்கமணி கடுகடுப்பாக இருந்ததோடு, சந்திரசேகரனைக் கட்சியில் ஓரங்கட்ட முயன்றதாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் சந்திரசேகருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருந்தது தங்கமணிதான் என்று சந்திரசேகரன் தரப்பு எள்ளும் கொள்ளுமாக வெடித்தது. தனது ஆதரவாளரான சந்திரன் என்பவருக்கு தங்கமணி சீட் பெற்றுக்கொடுத்தார். இதனால், கோபமடைந்த சந்திரசேகரன், 'தங்கணியா, நானா என்று பார்த்துவிடுகிறேன்' என்று கர்ஜித்தப்படி, சுயேச்சையாகக் களமிறங்கினார். இதற்கிடையில், அ.தி.மு.க தலைமை, கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக, சந்திரசேகரன் வகித்து வந்த ஒன்றியச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு மட்டுமின்றி, கட்சியைவிட்டே கட்டம்கட்டி அறிவிப்பு வெளியிட்டது.

தங்கமணி
தங்கமணி
நா.ராஜமுருகன்

இதனால், தங்கமணி தரப்பு மகிழந்ததாகச் சொல்லப்பட்டாலும், இன்னொரு பக்கம் சந்திரசேகரனோ அதற்கெல்லாம் அசரவில்லை. சுயேச்சையாகக் களமிறங்கிய அவர், பிரசாரத்தில், 'அடிமையாக என்னை வைக்கப் பார்த்த தங்கமணிக்கு நான் என்றும் அடிமையாக இருக்க முடியாது. எனக்கு ஏன் சீட் தரப்படவில்லை என்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய சேந்தமங்கலம் தொகுதிக்கு ரோடு போட வேண்டியிருக்கு. இந்த நிலையில், எஸ்.சி.சி.பி.ஆர் திட்டத்தின் கீழ் ரோடு போட நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ. 22 கோடி நிதி வந்தது. 'எனது தொகுதிக்கு ரூ. 2 கோடியைத் தாங்க' என்று அதிகாரிகள்கிட்ட கேட்டேன். அது தங்கமணி காதுக்குப் போனது. உடனடியாக மிரட்டல் தோரணையில், 'அதெல்லாம் கொடுக்க முடியாது. அந்த எம்.எல்.ஏ-வை முடிஞ்சதைப் பாத்துக்கச் சொல்லு' என்று சொன்னார். அதனால்தான், எனக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது' என்று பேசினார்.

இந்த நிலையில், சுயேச்சையாகத் தேர்தலை சந்தித்த அவர், 11,371 வாக்குகளைப் பெற்று, அ.தி.மு.க வேட்பாளர் சந்திரன், தி.மு.க வேட்பாளர் கே.பொன்னுசாமியிடம் 10,493 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கக் காரணமாயிருந்தார்.

தொடர்ந்து, இதன் உள்விவகாரங்களைப் பற்றி அறிந்த சிலர் பேசும்போது, "உட்கட்சிப் பிரச்னைக்கு பிறகு தி.மு.க-வுக்குத் தாவ சந்திரசேகரன் முயன்றார். ஏனென்றால், சந்திரசேகரனும் லேசுப்பட்ட ஆளில்லை. பதவி கிடைக்கலைன்னா, யாரையும் எதிர்ப்பார், எந்தக் கட்சிக்கும் தாவுவார்னு சொல்வாங்க. தி.மு.க-தான் அவருக்குப் பூர்வீகம். தி.மு.க-வில் மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார். தி.மு.க-வில் இருந்த சந்திரசேகன், கடந்த 1996 - 2001 வரை இதே சேந்தமங்கலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு, 2001-ல் கொல்லிமலை ஒன்றிய சேர்மனானார். தொடர்ந்து, 2006-ல் அவருக்கு சேர்மன் சீட் மறுக்கப்பட, தி.மு.க தலைமை மீது முறுக்கிக்கொண்டு, சுயேச்சையாகக் களம் கண்டு, சேர்மனானார். அதன் பிறகு, அ.தி.மு.க-வில் இணைந்த அவருக்கு, 2011-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் சேர்மன் பதவி தரப்பட, 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தார். அதன் பிறகு, அவருக்கு 2016-ல் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சீட் கிடைத்தது. வெற்றியும் பெற்றார். அதோடு, கொல்லிமலை ஒன்றியச் செயலாளராகவும் ஆனார். ஆனால், தனக்குள்ள செல்வாக்கை வைத்து தன்னிச்சையாகச் செயல்படும் இவரின் குணத்தால், அப்போது அமைச்சராக இருந்த தங்கமணிக்கும், இவருக்கும் எல்லா விஷயங்களிலும் ஆகாமல் போனது. நாமக்கல் மாவட்டத்தில் எல்லோரும் தனது ஆளுகையின் கீழ் இருக்க, சந்திரசேகரன் மட்டும் தனி ஆவர்த்தனம் செய்வது தங்கமணிக்குப் பிடிக்கவில்லை.

சந்திரசேகரன்
சந்திரசேகரன்
நா.ராஜமுருகன்

அதனால், கட்டம்கட்டி, அவருக்குக் கடந்த தேர்தலில் சீட் இல்லாமல் பார்த்துக்கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. இதனால், சுயேச்சையாக நின்று, சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க-வை தோல்வி அடைய வைத்த சந்திரசேகரன், அதன் பிறகு ஆளுங்கட்சியான தி.மு.க-வில் இணைந்து தங்கமணியைக் கடுமையாக எதிர்க்க நினைத்தார். அதற்காக, பல ரூட்டுகளிலும் மெனக்கெட்டார். ஆனால், நாமக்கல் தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளரான கே,ஆர்.என்.ராஜேஸ்குமார், 'தன்னிச்சையாக' செயல்படும் குணம்கொண்டவரான சந்திரசேகரன், தி.மு.க-வுக்குள் வருவதை விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால், தனது பவர்ஃபுல் 'லாபி' மூலம், தி.மு.க-வுக்குள் வலது காலை எடுத்து வைக்க முயன்ற சந்திரசேகரன் முயற்சிக்கு, முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனாலும், அசராத சந்திரசேகரன், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற அடிப்படையில், தங்கமணி ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமியின் எதிர்முகாமில் இருக்கும் ஓ.பி.எஸ் அணியில் இணைந்து, தங்கமணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் தங்கமணிக்கு என்ன அதிர்ச்சி என்றுதானே கேட்கிறீர்கள்... தான் மட்டும் போகாமல், அ.தி.மு.க-வைச் சேர்ந்த உள்ளாட்சிப் பதவிகளில் இருப்பவர்கள் பலர் உள்ளிட்ட 200 பேரோடு ஓ.பி.எஸ் அணியில் இணைந்திருக்கிறார்.

'தங்கமணியை அரசியலில் ஒழித்துக் கட்டும்வரை ஓயமாட்டேன்' என்று தனது ஆதரவாளர்களிடம் சூளுரைத்திருப்பதாகச் சொல்றாங்க. இந்த நிலையில், ஓ.பி.எஸ் அணியில் இணைந்த சூட்டோடு சூடாக, சமீபத்தில் நடைபெற்ற ஓ.பி.எஸ் அணியின் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகரன், ``சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க-வில் சரியான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால், அ.தி.மு.க ஒரு தொகுதியை இழந்தது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகக் கூடாது எனத் தெளிவாக செயல்பட்டவர், முன்னாள் அமைச்சர் தங்கமணி. இப்போது, ஓ.பி.எஸ் அணியில் ஏராளமான அ.தி.மு.க-வினர் இணைந்துவருகின்றனர்.

புதிய நிர்வாகிகள் நியமன ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகரன்
புதிய நிர்வாகிகள் நியமன ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகரன்
நா.ராஜமுருகன்

அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில், சேந்தமங்கலம், கொல்லிமலையைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எடப்பாடி அணியினரை, ஓ.பி.எஸ் அணியில் இணைப்பேன்' என்று பேசி, தங்கமணிக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே, அ.தி.மு.க கோட்டையாக இருந்த நாமக்கல்லை, கடந்த தேர்தலில் மொத்தமுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இரண்டை மட்டும் அ.தி.மு.க கைப்பற்றியன் மூலம், தி.மு.க கோட்டையாக விட்டுவிட்ட பரிதவிப்பில் தங்கமணி இருக்கிறார். இந்த நிலையில், சந்திரசேகரன் வேறு ரிவெஞ்ச் எடுத்து, தன்னைப் பழிவாங்க பலரையும் அணி மாற்றி வருவதால், கலக்கத்தில் இருக்கிறார்" என்றார்கள்.

இது குறித்து, தங்கமணி தரப்பில் பேசினோம்.

"சந்திரசேகரன் ஒரு பச்சோந்தி. தனக்குப் பதவி கிடைக்கலைன்னா, எந்த எல்லைக்கும் போவார். தனக்குப் பதவி கொடுத்த அ.தி.மு.க-வுக்கு கடந்த தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் குழிபறித்தவர்தான் சந்திரசேகரன். தி.மு.க-வுக்கு போக முயன்றவரை, தி.மு.க-வுக்கு முன்பு அவர் செய்த துரோகத்தால், தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.

சேந்தமங்கலம்
சேந்தமங்கலம்
நா.ராஜமுருகன்

இதனால், 'நானும் ரெளடி'ங்கிற வடிவேல் பட டயலாக்போல், 'நாங்களும் அ.தி.மு.க-வில் ஓர் அணியினர்' என்று சொல்லிக்கொள்ளும் ஓ.பி.எஸ் அணியில் சேர்ந்திருக்கிறார். அவர் பாச்சாவெல்லாம் எங்க அண்ணன்கிட்ட பலிக்காது" என்றார்கள்.