Published:Updated:

``எலே மக்கா, ஊருக்கு வரலயாவே?" - பாசம் பொழியும் நாங்குநேரி அ.தி.மு.க!

டிக்கெட் செலவு போக, ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் தரவும் அ.தி.மு.க. தரப்பு தயாரா இருக்காங்க. தீபாவளி நேரம்ங்கறதுனால, நாங்குநேரி தொகுதி அப்பாவி வாக்காளர்கள் இதற்கு உடன்படவே வாய்ப்பு அதிகம்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

திருநெல்வேலி மாவட்டம் இட்டமொழியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சென்னை சிறுசேரியிலுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். அக்.14-ம் தேதி அவருக்கு ஒரு போன் வந்தது.

“சார், ஓட்டு போட நாங்குநேரி வாரீயளா?”

“ஆமா சார். வாறேன்.”

“அப்படின்னா, நீங்க கோயம்பேடு வந்துடுங்க. நம்ம ஆளுங்க டிக்கெட் போட்டு கொடுப்பானுவ, மத்த விஷயத்த எல்லாம் கோயம்பேட்டுல பேசிக்கலாம்”.

“சார், நான் ஏற்கெனவே ட்ரெய்ன்ல டிக்கெட் போட்டுட்டேன். முதல்ல நீங்க யாரு... என் நம்பரு உங்களுக்கு எப்படிக் கெடைச்சுது?”

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்

“நான் அ.தி.மு.க-காரன்தான் தம்பி. உங்க நம்பர தொகுதிலதான் கேட்டு வாங்கினோம். எப்படி வந்தாலும் பரவாயில்ல, மறக்காம ஊருக்கு வந்து ஓட்டுப் போடுங்க. இரட்டை இலைய மறந்துடாதீங்க”.

இப்படி முடிகிறது அவர்களது உரையாடல். அதேவேளையில், அம்பத்தூரிலுள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் களக்காடு இளைஞர் ஒருவருக்கு போன் போகிறது.

“எலே மக்கா, ஊருக்கு வரலயாவே?”

“இல்ல அண்ணாச்சி, தீபாவளிக்கு குடும்பத்தோட வரலாம்னு இருக்கோம்”.

“என்னவே நீயி. நான் டிக்கெட் போடச் சொல்றேன். ஒருவாரத்துக்கு முன்னாடியே குடும்பத்த கொண்டுவந்து விட்டுட்டு, நீர் திரும்ப சென்னைக்குப் போய்ட்டு வாரும். செலவ நாங்க பார்த்துக்கிடுறோம்”.

``சரிதான் அண்ணாச்சி. ஆனா, தீபாவளி செலவெல்லாம் இருக்குதுல”.

``அட, நீர் கோயம்பேடு வாருமய்யா. எல்லாத்தையும் பேசிக்கலாம்”.

இவ்விரு உரையாடல்களிலும் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நம்மிடையே கூறுகையில், ``டிக்கெட் செலவுபோக, ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் தரவும் அ.தி.மு.க. தரப்பு தயாரா இருக்காங்க. சில நாங்குநேரி தொகுதிகாரங்களுக்கு உளவுத்துறையில இருந்தும் போன் வருது. தீபாவளி நேரம்ங்கறதுனால, அப்பாவி மக்கள் இதற்கு உடன்படவே வாய்ப்பு அதிகம்” என்றனர்.

அதிமுக தொண்டர்கள்
அதிமுக தொண்டர்கள்

தேர்தல் சமயத்தில் வெளியூரில் பணிபுரியும் தொகுதி வாக்காளர்களுக்கு, கட்சிக்காரர்கள் போன் போட்டு அழைப்பதும், வாக்குசேகரிப்பதும் வழக்கமான நடைமுறைதான். இம்முறை டிக்கெட் போட்டுத் தருவதில் தொடங்கி, கோயம்பேட்டை பணவிநியோக மையமாக அ.தி.மு.க. மாற்றி வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்.18, 19-ம் தேதிகளில் சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் தனியார் ஆம்னி பஸ்களைக் கண்காணித்தாலே பல தில்லுமுல்லுகளைத் தேர்தல் ஆணையம் தோண்டி எடுக்கலாம் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க தரப்பில் பேசியபோது, ``வெளியூரில் பணியாற்றும் வாக்காளர்களிடம் வாக்குசேகரிப்பது அனைத்துக் கட்சிகளும் செய்யும் வேலைதான். ஆனால், நாங்கள் டிக்கெட் போட்டுத் தருகிறோம், ஓட்டுக்குப் பணம் தருகிறோம் என்று பிதற்றுவது எல்லாம் தி.மு.க-வின் வேலை. இதற்கு ஆதாரம் ஏதும் உண்டா? தி.மு.க-வினர்கூடத்தான் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகப் புகார் எழுகிறது. இதைப்பற்றித் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்” என்று கொந்தளித்தனர்.

நாங்குநேரி தேர்தல் பிரசாரத்தில் கோஷ்டி சண்டை! - அ.தி.மு.க நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதி

டூ வீலர்கள், கார்களை மட்டும் மடக்கி மடக்கிச் சோதனையிடுவதைவிட, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மீதும் தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நாங்குநேரி தொகுதியில் உள்ள நேர்மையான வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.