Published:Updated:

`ஒரு சமூகத்தினரைப் புறக்கணிக்கிறது பா.ஜ.க அரசு!' - நெல்லையில் நாராயணசாமி காட்டம்

நாராயணசாமி
நாராயணசாமி

`இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக ஒரு மதத்தைச் சேர்ந்த மக்களை மட்டும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு அச்சப்பட வைக்கிறது.'

நெல்லையில் மக்கள் குடியுரிமை இயக்கம் சார்பாகக் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமிய அமைப்புகள் பலவும் அதில் பங்கேற்றனர். அதில் பங்கேற்றுப் பேச வந்த புதுவை முதல்வர் நாராயணசாமி, நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ``பாரதிய ஜனதா அரசு ரவுடிகளை ஏவி விட்டு டெல்லியில் 53 பேரைக் கொன்றுள்ளது. இந்தியா அமைதியான நாடு. மதச்சார்பற்ற நாடு. அதைச் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

அதனால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறி வரக்கூடிய கிறிஸ்துவர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என அந்த நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்படும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று திருத்தச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பட்டியலில் குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் சேர்க்காமல் திட்டமிட்டுத் தவித்துள்ளனர்.

குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படாது என்பது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. வெளிநாடுகளில் இருந்து வெளியேறி வந்த அனைத்து மதத்தினரையும் ஏன் சேர்க்கவில்லை என்பதுதான் கேள்வி. அனைத்து மதத்தினரையும் சேர்த்திருந்தால் இந்தப் போராட்டங்களே வந்திருக்காதே? மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தச் சட்டத்தில், திட்டமிட்டு சில மதங்களை மட்டும் புறக்கணித்ததால் அந்த மதத்தினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

நாராயணசாமி
நாராயணசாமி

அதைப் போக்க வேண்டிய மத்திய அரசு கடமை தவறிவிட்டது. அதன் காரணமாகவே நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதைச் சரிப்படுத்த வேண்டிய மத்திய அரசு, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மூலம் வன்முறையை உருவாக்கிவிட்டது. அதனால் டெல்லியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தி.மு.க-வுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. எங்களுக்குள் எந்தவித அதிருப்தியும் இல்லை" என்று நாராயணசாமி தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு