Published:Updated:

`சசிகலாவுக்காகக் கட்டிய வீடு அது!' - ஐ.டி சோதனை முடிவு தெரியாத சோகத்தில் நடராசன் உறவுகள்

நடராசன்
நடராசன்

நடராசன் தன் மனைவி சசிகலாவுடன் வசிக்க வேண்டும் என்பதற்காகப் பார்த்துப் பார்த்து ஆசையாக அந்த வீட்டைக் கட்டினார். ஆனால், அரசியல் சூழ்நிலையால் ஒருநாள்கூட நடராசனுடன் அந்த இல்லத்தில் அவரால் வசிக்க முடியவில்லை.

தஞ்சாவூரில் சசிகலா கணவர் நடராசன் வீட்டில் சில வருடங்களுக்குமுன் சோதனை நடத்திய வரிமானவரித் துறை அதிகாரிகள் மாடியில் இருந்த நடராசன் அறையில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி, அந்த அறைக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றனர். `தற்போது அந்த வழக்கின் நிலை என்னவென்று தெரியவில்லை. சசிகலா சிறையில் இருப்பதால், அவரின் உறவினர்களும் அறையைத் திறக்க வைப்பதற்கான சட்ட வேலைகளில் இறங்கவில்லை' என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.

நடராசன்
நடராசன்

தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ளது சசிகலா கணவர் நடராசனின் பிரமாண்ட இல்லம். சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு நடராசன், திவாகரன், இளவரசி மகன் விவேக் ஆகியோரின் இல்லங்களிலும் முக்கிய உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் எனப் பல இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒரேநேரத்தில் நடந்த இந்த திடீர் சோதனை சசிகலா குடும்பத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்தது.

ஐ.டி சோதனை நடந்த சமயத்தில் நடராஜன் சென்னையில் இருந்தார். சோதனைக்கு வந்த அதிகாரிகள் நடராசன் இல்லத்தின் மாடியில் உள்ள அவரது அலுவலக அறையிலும் சோதனையிட்டனர். அதில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாகக் கூறி அந்த அறைக்கு சீல் வைத்தனர். பின்னர் உடல்நலக்குறைவால் நடராசன் இறந்து விட்டார். இந்தநிலையில் வருமான வரித்துறை சோதனை நடந்து சுமார் மூன்று வருடங்கள் நெருங்க இருக்கும் நிலையில், அந்த அறை இன்னும் சீல் வைத்தபடியே பூட்டிக் கிடப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் உறவினர்கள் சிலர்.

நடராசன் இல்லம்
நடராசன் இல்லம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா உறவுகள் சிலர், `` வி.ஐ.பி-க்கள் வசிக்கும் பகுதியான தஞ்சாவூர் அருளானந்த நகரையொட்டியுள்ள தெருவில் நடராசன் தன் மனைவி சசிகலாவுடன் வசிக்க வேண்டும் என்பதற்காகப் பார்த்துப் பார்த்து ஆசையாக அந்த வீட்டைக் கட்டினார். ஆனால், அரசியல் சூழ்நிலையால் ஜெயலலிதாவுடன் போயஸ்கார்டன் இல்லத்திலேயே தங்கியிருந்த சசிகலாவால் ஒருநாள்கூட நடராசனுடன் அந்த இல்லத்தில் வசிக்க முடியவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றார். அதன்பிறகு சசிகலாவின் நெருங்கிய உறவினர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நடராசன் வெளியூரில் இருந்ததாலும் ஐ.டி சோதனைக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தார். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தப்படி ஒன்றும் கிடைக்கவில்லை.

நடராசன்
நடராசன்

இதையடுத்து அந்த வீட்டின் மாடிக்குச் சென்ற அதிகாரிகள் அங்கு இருந்த நடராசன் அறையிலும் சோதனையிட்டதுடன் சீல் வைத்துவிட்டுச் சென்றனர். இந்தநிலையில், நடராசன் இறந்துவிடவே சிறையில் இருந்த சசிகலா இறுதிச் சடங்குக்காக பரோலில் வந்தார். தனது கணவர் ஆசையாகக் கட்டிய வீட்டில் பத்து நாள்கள் தங்கினார். வீடு முழுக்க நடராசனுடன் சசிகலா இருக்கும் பெரிய பெரிய போட்டோக்கள் மாட்டப்பட்டிருந்ததைப் பார்த்து, `என் மீது அவருக்கு எவ்வளவு பிரியம்?' எனக் கண் கலங்கினார்.

சில தினங்கள் கழித்து நடராசனின் அறை சீல் வைக்கப்பட்டிருக்கும் தகவலை சிலர் சசிகலாவிடம் கூறியிருக்கின்றனர். `அதை நான் பார்த்துக் கொள்கிறேன்' எனக் கூறியிருக்கிறார். அந்த வீட்டிலேயே நடராசன் அதிக நேரம் இருந்த இடம் அந்த அறைதான். கடந்த மூன்று வருடங்களாக சீல் வைத்த நிலையில் பூட்டியே கிடக்கிறது.

 நடராசன் இல்லம்
நடராசன் இல்லம்

இந்த வீட்டின் நிலை என்னவாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. இதைக் கவனத்தில் கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை சசிகலா துரிதப்படுத்த வேண்டும்" என்கின்றனர்.

இதற்குப் பதில் கொடுக்கும் நடராசனுக்கு நெருங்கிய வட்டாரத்தினர், ` வருமானவரித்துறை சோதனை தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. வழக்கின் முடிவுக்குப் பிறகுதான் அந்த அறையைத் திறப்பார்கள்' என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு