அரசியல்
அலசல்
Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ராஜஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜஸ்தான்

ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்தப்படலாம் என்பதால், கட்சியைப் பதிவுசெய்வதுதான் எங்களது முதல் திட்டம்

மாடுகளை வைத்து ‘மல்லுக்கட்டு’ப் போராட்டம்!

குஜராத்தின் பல்வேறு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களுக்குள், ஏராளமான மாடுகள் நுழைந்திருக்கும் சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சில இடங்களில் மாடு முட்டியதால் சிலர் காயமடைந்த சம்பவங் களும் நடந்திருக்கின்றன. பல்வேறு அறக்கட்டளைகள் நடத்து கிற ‘மாடுகளைப் பராமரிக்கும் மையங்களுக்கு’ குஜராத் அரசு நிதி ஒதுக்காததால், கோபமடைந்த அறக்கட்டளை நிர்வாகிகள், மாடுகளை விடுவித்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, அரசுக்குச் சொந்தமான கட்டடங்களிலும், முக்கியச் சாலைகளிலும் ஆயிரக்கணக்கான மாடுகளை செப்டம்பர் 25-ம் தேதி அன்று விடுவித்தனர். இந்த அறக்கட்டளைகளின்கீழ் 1,750 மாட்டுத் தொழுவங்களும், 4.5 லட்சம் மாடுகளும் இருக்கின்றன. இந்தப் போராட்டங் களினூடாக, `எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க மாட்டோம்’ என்று மாடுகள் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருப்பது பா.ஜ.க அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

குலாம் நபி ஆசாத்தின் புதிய கட்சி!

50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் பயணித்த குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் 26 அன்று அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அப்போதே தான் பா.ஜ.க-வில் இணையப்போவதில்லை என்றும், புதுக்கட்சித் தொடங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார். செப்டம்பர் 26-ம் தேதி, `ஜனநாயக சுதந்திர கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, கட்சிக் கொடியையும் அறிமுகப் படுத்தினார். ``ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்தப்படலாம் என்பதால், கட்சியைப் பதிவுசெய்வதுதான் எங்களது முதல் திட்டம்’’ என்று கூறியிருக்கிறார் குலாம் நபி ஆசாத்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

82 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா?

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்ததையடுத்து, ராஜஸ்தான் அரசியலில் பல்வேறு திருப்புமுனைகள் அரங்கேறியிருக்கின்றன. கட்சித் தலைவராகத் தான் தேர்வானாலும், ராஜஸ்தான் முதல்வராகவும் தொடர அனுமதிக்குமாறு தலைமையிடம் கோரியிருந்தார் கெலாட். ஆனால் அதற்கு, `ஒரு நபருக்கு ஒரு பதவி’ என்ற கட்சியின் கொள்கையை முன்வைத்து, ராகுல் மறுப்பு தெரிவித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், 2020-ம் ஆண்டு அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டை, ராஜஸ்தான் மாநில முதல்வராக்க ராகுல் விரும்புவதாகவும் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கெலாட்டுக்கு ஆதரவான 82 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அவைத்தலைவரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்திருப்பதாகவும் பரபரப்புச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தச் சிக்கல்களைச் சரிக்கட்ட, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் மல்லி கார்ஜுன கார்கேவும், அஜய் மாகேனும் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதையடுத்து, ``கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பேச்சுவார்த்தைக்கே தயாராக இல்லை’’ என்று அஜய் மாகேன் தெரிவித்திருப்பது பேசு பொருளாகியிருக்கிறது. அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமைந்திருக்கின்றன!