Election bannerElection banner
Published:Updated:

``என் தந்தை நாலரை கோடி இதயங்களில் இருக்கிறார்!"- அப்பாவின் சமாதியை இடிக்கும் ஒடிசா முதல்வர்

பிஜு பட்நாயக் சமாதி
பிஜு பட்நாயக் சமாதி

தன் தந்தை பிஜு பட்நாயக்கினுடைய சமாதியை மக்களுக்காக அகற்றுவதாக அறிவித்து ஆச்சர்யப்படுத்துகிறார் ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக்.

தமிழகத்தில் மெரினா என்றால் கடல் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ அங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்கள் நம் நினைவுக்கு வரும். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி எனத் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அதிலும் சமீப காலங்களாக அவ்விடத்தில் நினைவிடம் அமைப்பதற்கான சர்ச்சைகள், வழக்குகள், பராமரிப்பு பஞ்சாயத்துகள், அலங்கார ஆச்சர்யங்கள், மிஸ்ஸான மின்கட்டணங்கள், சமாதியில் சபதங்கள், தர்மயுத்த தியானங்கள் எனப் பல விவகாரங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

பிஜு பட்நாயக் சமாதியில் நவீன்
பிஜு பட்நாயக் சமாதியில் நவீன்
Vikatan

தமிழ்நாடு இப்படித் தலைவர்களின் சமாதிகள், சிலைகள் என அரசியல் செய்துகொண்டிருக்க, தன் தந்தை பிஜு பட்நாயக்கினுடைய சமாதியை மக்களுக்காக அகற்றுவதாக அறிவித்து ஆச்சர்யப்படுத்துகிறார் ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக். இந்த ஆச்சர்யங்களினால்தான் ஒடிசாவின் சட்டமன்றத் தேர்தலில் ஐந்தாவது முறையும் வெற்றிபெற்று, சுமார் இருபது ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருக்கிறார் நவீன் பட்நாயக்.

`காட் ஃபாதர்’ பிஜு பட்நாயக்

நவீனின் தந்தை பிஜு பட்நாயக், 1961லிருந்து 1963 வரையும், 1990-லிருந்து 1995 வரையும் இருமுறை ஒடிசாவின் முதல்வராக இருந்தவர். மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர். விமான நிலையம் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை பலவற்றைத் தந்தை பிஜுவின் பெயரால்தான் தொடங்கினார் நவீன் பட்நாயக். அவ்வளவு ஏன், இருபது ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருக்கும் நவீனின் கட்சிப் பெயர் கூட பிஜு ஜனதா தள் தான். ஏறத்தாழ ஒடிசாவில் ஒரு காட் ஃபாதர் போல மதிக்கப்படுபவர் பிஜு பட்நாயக்.

பிஜு பட்நாயக்
பிஜு பட்நாயக்
kalingatv.com

இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஒடிசாவில் பிஜுவின் முக்கியத்துவம் என்னவென்று. 1997-ம் ஆண்டு அவரது மரணத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலிக்காகத் திரண்டனர். ஒடிசா முழுவதும் பெரும் இழப்பில் துவண்டு போனது. பூரியில் உள்ள ஸ்வர்கத்வார் என்னும் இடத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டு புனித நதிகளில் அவரது அஸ்தி கரைக்கப்பட்டது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஸ்வர்கத்வாரில் பிஜு பட்நாயக் நினைவு சமாதியும் அமைக்கப்பட்டது. அப்போது அவர் முதலமைச்சராகக் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வர்கத்வார் = சொர்க்கத்தின் நுழைவாயில்

இந்துக்களின் மிகப் புனிதமான எரியூட்டும் இடமாக ஸ்வர்கத்வார் விளங்குகிறது. சொர்க்கத்தின் நுழைவாயில் எனப் பொருள்படும் இந்த இடத்தில், ஒருவரைத் தகனம் செய்தால், அவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது மக்கள் நம்பிக்கை, வங்காள விரிகுடா கரையில் அமைந்திருக்கும் ஸ்வர்கத்வாரில் ஆயிரக்கணக்கான இந்துக்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. இன்றுவரை அவ்விடத்தில் சமாதி அமைக்கப்பெற்ற ஒரே தலைவர் பிஜு பட்நாயக் மட்டுமே.

ஸ்வர்கத்வார்
ஸ்வர்கத்வார்
Vikatan

இந்நிலையில், பல்வேறு மக்கள் திரளும் இவ்விடத்தின் கட்டுமானத்தைப் பலப்படுத்தி, சுத்தப்படுத்தி, ஃபானி புயலால் ஏற்பட்ட அழிவுகளைப் புனரமைத்து அவ்விடத்தில் புதிய தகன மேடைகளும், ஆயிரக்கணக்கான மக்கள் எளிதில் புழங்குவதற்குரிய வசதிகளும் அமைக்க முதல் கட்டமாக ஐந்து கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார் நவீன் பட்நாயக். அந்த சமயத்தில் ஒரு சிலர் `இந்த இடத்தில் நவீனின் தந்தையின் சமாதி இருக்கிறதே, அது புதிய வசதிகள் அமைக்க இடையூறாக இருக்காதா’ என விமர்சனம் செய்தனர். நவீன் பட்நாயக், அறிவிப்போடு நிற்கவில்லை. மக்களின் பயன்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதற்காக தன்னுடைய தந்தையின் சமாதியை அங்கிருந்து நீக்கி, அந்தப் பகுதிகளையும் மக்கள் பயன்பாட்டிற்குத் தயார் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ``நாலரைக் கோடி ஒடிய மக்களின் இதயத்தில் என் தந்தை பிஜு பட்நாயக்கிற்கு இடம் இருக்கிறது. ஆகவே, அவருக்கென மக்கள் அளித்த இடமும் அம்மக்களுக்கே பயன்படவேண்டும்" என்று கூறியிருக்கிறார். ஒரு தலைவனின் நினைவுகள் புற அடையாளங்களால் உயிர்த்திருக்க வேண்டியதில்லை என்று உணர்த்தியிருக்கிறார் நவீன், என மக்கள் அவரைக் கொண்டாடி வருகிறார்கள்.

ஸ்வர்கத்வார் புதிய கட்டுமானத்தின் திட்டப்படம்
ஸ்வர்கத்வார் புதிய கட்டுமானத்தின் திட்டப்படம்
Vikatan

அப்பாவின் மீது அலாதிப் பிரியம் கொண்டவர் நவீன் பட்நாயக். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு அன்று, அப்பாவின் சமாதிக்குத் தவறாது சென்று மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இனி அது சாத்தியமில்லை. தன் உணர்வுகளைவிட மக்களின் நலன் முக்கியம் என்பதே நவீனினுடைய செங்கோல் ஆட்சியின் சூட்சுமம். பிஜு பட்நாயக்கின் சமாதி அவ்விடத்தில் பறைசாற்றிய அதே கம்பீரத்தை, அதன் இல்லாமையும் பறைசாற்றும் எனும்போது நிகழ்ந்திருப்பது ஓர் அதிசயத்தக்க மாற்றமே.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு