Election bannerElection banner
Published:Updated:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் அதிகாரத்தை கபளீகரம் செய்த சட்டத் திருத்தம்-பின்னணி என்ன?

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

ஒன்றியப் பிரதேசங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றங்களைக் கொண்டிருந்தாலும் முழு மாநில அந்தஸ்தைப் பெற முடியாது. பகுதி மாநிலமாகவே இயங்க முடியும் என்பதே சட்டபூர்வமான நிலை.

- ஆர்.எஸ்.ஜே

நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 22, திங்கட்கிழமை அன்று `தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்தச் சட்டம் 2021’ நிறைவேற்றப்பட்டது. டெல்லி அரசின் அதிகாரத்துக்குள் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டிவந்த சூழலில், இந்தச் சட்டத் திருத்தம் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் 15-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லி அமைச்சர்களும், ஆம் ஆத்மி கட்சி மக்களவை உறுப்பினர்களும் போராட்டங்கள் நடத்தியிருந்தனர். சட்டத் திருத்தம் தொடர்பாக கெஜ்ரிவால், ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து, மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களிடம் வெற்றிகரமாக இந்தச் சட்டத்திருத்தம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க மக்களை ஏமாற்றிவிட்டது” என ட்வீ ட் செய்திருக்கிறார்.

தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் 1991 என்பது என்ன?

இந்தியத் தலைநகராக இருக்கும் டெல்லி ஒரு யூனியன் பிரதேசம். ஒன்றியப் பிரதேசம் எனக் குறிப்பிடலாம்.

மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சரை மாநில அரசின் நிர்வாகியாகத் தேர்ந்தெடுப்பார்கள். அந்தச் சட்டமன்றத்துக்கு சட்டங்கள் இயற்றும் உரிமை உண்டு. மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் அதிகாரத்திலும்தான் மாநிலங்கள் இயங்கும். ஒன்றியப் பிரதேசங்களோ ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவையாக இருந்தன.

மோடி - கெஜ்ரிவால்
மோடி - கெஜ்ரிவால்

1962-ம் ஆண்டில் புதுச்சேரி, இந்தியாவுடன் இணைக்கப்பட்டப்போதும் ஒன்றியப் பிரதேசமாகவே இணைக்கப்பட்டது. 1963-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒன்றியப் பிரதேசங்களின் அரசு சட்டம், மாநில அரசுகளைப்போல் மக்களால் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றங்கள் சில கட்டுப்பாடுகளுடன் ஒன்றியப் பிரதேசங்களிலும் இயங்கும் வாய்ப்பையளித்தது.

புதுச்சேரியிலும் சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக துணைநிலை ஆளுநர் ஒன்றியப் பிரதேச தலைமை நிர்வாகியாக நியமிக்கப்படுவார் என்பதே ஒன்றியப் பிரதேசங்களின் அரசு சட்டம் கொண்டிருந்த கட்டுப்பாடாக இருந்தது. புதுச்சேரிக்கு மேலவையில்லா சட்டமன்ற முறைக்கான வாய்ப்பு கிட்டியதுபோல் இந்தியாவின் எல்லா ஒன்றியப் பிரதேசங்களுக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அத்தகைய வாய்ப்பு பிறகு இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே கிட்டியது. அவற்றில் முதன்மையானது டெல்லி.

டெல்லிக்கு சட்டமன்றத் தேர்வுமுறையை உண்டாக்க கொண்டு வரப்பட்டதே ‘தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம்’ ஆகும். 1991-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி டெல்லியில் சட்டமன்றம் இருக்கலாம். மொத்தமாக 70 சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட சட்டமன்றமாக இருத்தல் வேண்டும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒன்றியப் பிரதேசங்களின் அரசு சட்டத்தின்படி டெல்லியிலும் ஒன்றிய அரசின் பிரதிநிதி நிர்வாகத் தலைமையாக இருப்பார். அந்தப் பிரதிநிதிதான் துணைநிலை ஆளுநர்.

டெல்லி: `கொரோனா வைரஸின் இரண்டாம் அலை; பாதிப்பில் புதிய உச்சம்!’ - அரவிந்த் கெஜ்ரிவால்

ஒன்றியப் பிரதேசங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றங்களைக்கொண்டிருந்தாலும் முழு மாநில அந்தஸ்தைப் பெற முடியாது. பகுதி மாநிலமாகவே இயங்க முடியும் என்பதே சட்டபூர்வமான நிலை.

சட்டமன்றத்தைக்கொண்ட மூன்றாவது ஒன்றிய பிரதேசமாக சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் சேர்ந்தது. 2019-ம் ஆண்டில் பாஜக ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட ‘ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்’, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தையே இரண்டாக்கி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றிய பிரதேசங்களாக ஆக்கியது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பா.ஜ.க அரசுக்கும் என்ன மோதல்?

அரவிந்த் கெஜ்ரிவால் 2011-ம் ஆண்டு ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ என்கிற போராட்ட இயக்கத்தில் பங்கேற்றவர். ஊழலை ஒழிப்பதற்கான ஜன் லோக்பால் சட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டுமென்பதே போராட்டத்தின் ஒற்றை கோரிக்கையாக இருந்தது. அப்போது இருந்த காங்கிரஸ் ஆட்சி முன்வைத்த ஜன் லோக்பால் சட்ட வரைவில் போராட்ட இயக்கம் அதிருப்திகொண்டது. விளைவாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி என்கிற கட்சியை 2012-ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் தொடங்கினார். 2013-ம் ஆண்டின் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. கட்சியின் பிரதான திட்டமாக ஜன் லோக்பால் சட்ட நிறைவேற்றம் இருந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

70 சீட்டுகளில் 28 சீட்டுகளில் மட்டும் வென்ற ஆம் ஆத்மி கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையில் கூட்டணி ஆட்சியை டெல்லியில் அமைத்தது. ஆனால், ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்காததால் பதவியைவிட்டு விலகினார் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்படாததற்கு காங்கிரஸும் பா.ஜ.க-வுமே காரணமென குற்றம்சாட்டினார். இயற்கை எரிவாயுக்கான விலையை நிர்ணயிப்பதில் ஊழல் நடப்பதாகச் சொல்லி முகேஷ் அம்பானி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மீது காவல்துறையில் புகாரளித்தார். தொடர்ந்து பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடியின் மீதும் குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி வைத்தது. 2015-ம் ஆண்டு நடந்த டெல்லி தேர்தலில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழல் எதிர்ப்பு சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்ததிலிருந்து டெல்லி அரசு நிர்வாகத்துக்கும், ஒன்றியப் பிரதேச பிரதிநிதியான துணைநிலை ஆளுநருக்கும் தொடர் பிரச்னைகள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக மத்திய பா.ஜ.க அரசு `டெல்லியின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எந்த மத்திய அரசு அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை’ என அறிவிப்பாணையை வெளியிட்டது. அது அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்கியது. அறிவிப்பாணையை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தை நாடினார் கெஜ்ரிவால். லஞ்ச ஒழிப்புத்துறைக்கு காவலர்களைக் கைதுசெய்யும் அதிகாரம் இருப்பதாகக் கூறிய நீதிமன்றம், மத்திய அரசின் அறிவிப்பாணையை சந்தேகப்படுத்தும் விஷயமாக இருப்பதாகவும் குறிப்பிட்டது. துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தைப் பொறுத்தவரை அவரே டெல்லிக்கு நிர்வாகத் தலைமை என்றும் குறிப்பிட்டது நீதிமன்றம்.

டெல்லி, மும்பையில் கட்டப்படும் `ட்ரம்ப் பங்களாக்கள்...' என்ன நடக்கிறது?

மின்சாரம், தண்ணீர் முதலிய சேவை வழங்குவதில்கூட துணை நிலை ஆளுநரின் தலையீடு இருப்பதாக போராட்டங்களை நடத்தினார் அர்விந்த் கெஜ்ரிவால். துணைநிலை ஆளுநருக்கும் டெல்லி முதல்வருக்கும் இடையேயான அதிகாரம் பற்றிய சிக்கல் 2017-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. அரசியல் சாசன அமர்வின் ஆய்வுக்குப் பிறகு 2018-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாதென்றும், மாநில அமைச்சர்குழுவின் கருத்தையும் உதவியையும் சார்ந்தே செயல்பட வேண்டுமென்றும் தீர்ப்பு தெளிவாக்கியது. அமைச்சர்களின் எல்லா முடிவுகளும் துணைநிலை ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட வேண்டுமென்றாலும், அவரின் ஒப்புதல் வேண்டும் என அர்த்தமில்லை என்றும், எல்லா முன்னெடுப்புகளையும் தடுத்துக்கொண்டிருக்கும் வேலையைச் செய்பவராகவும் துணைநிலை ஆளுநர் இருக்கக் கூடாது எனவும் தீர்ப்பு கூறியது.

டெல்லி
டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் கிடைத்த வெற்றியாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்பட்ட சூழலில் இன்னொரு தீர்வைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தது டெல்லி அரசு. சில அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் உள்ள அதிகாரத்தைப் பற்றிய வழக்கு. ஆனால் அந்த வழக்கை எடுத்து விசாரித்த இரு நீதிபதி அமர்வில் உடன்பாடு எட்டப்படவில்லை. டெல்லியின் எல்லா அரசு நியமனங்களும் மத்திய அரசின் கீழ்தான் வரும் என்பதில் இருவருக்கும் முரண் இருக்கவில்லை. ஆனால் ஏற்கெனவே வந்திருந்த சாசன அமர்வின் தீர்ப்புப்படி டெல்லி அரசு நிறுவனங்களில் நியமனங்களைச் செய்யும் அதிகாரம் டெல்லி அரசுக்கே இருப்பதாக ஒரு நீதிபதியும், டெல்லி அரசுக்குக் கீழ் நேரடியாகச் செயல்படும் நிர்வாகம் இல்லையென ஆன பின் மத்திய அரசுக்கே அதிகாரம் இருக்குமென இரண்டாம் நீதிபதியும் இருவேறு கருத்துகளை முன்வைத்தனர். விளைவாக வழக்கு மூன்று நீதிபதி அமர்வுக்கு அனுப்பப்பட்டது. விசாரணை முடிவடையவில்லை.

தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்தச் சட்டம் 2021 சொல்வது என்ன?

டெல்லி நிர்வாகத்திலிருக்கும் குழப்பத்தைச் சரிசெய்யவே சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. டெல்லியின் அன்றாட நிர்வாகம், முடிவுகள், விசாரணைகள் முதலியவற்றில் சட்டமன்றத்தின் பங்கை சட்டத்திருத்தம் இல்லாமலாக்கியிருக்கிறது. இதன் அர்த்தம் டெல்லியிலிருக்கும் அதிகார வர்க்கம் டெல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்துக்கு பதிலளிக்கத் தேவையில்லை. மேலும் தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ‘அரசாங்கம்’ என்கிற வார்த்தை ‘துணைநிலை ஆளுநரைக் குறிக்கும்’ என சட்டத் திருத்தம் வரையறுத்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு