Election bannerElection banner
Published:Updated:

25 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு கெட்அவுட் சொன்ன ஐபேக்?! - கிராஸ் செக் செய்யும் ஸ்டாலின்

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தற்சமயம் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் உட்பட 99 தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். விருப்ப மனு நிகழ்வின்போது இந்த 99 பேரும் மீண்டும் சீட் கேட்டு விருப்ப மனு அளித்தனர்.

-தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் எனத்ய் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. எனினும், கழகங்களின் கூட்டணிக் கணக்குகள் இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக தி.மு.க-வில் விருப்ப மனுக்களைப் பெற்று, நேர்காணலையும் தொடங்கிவிட்டது தி.மு.க தலைமை.

தற்சமயம் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் உட்பட 99 தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். விருப்ப மனு நிகழ்வின்போது இந்த 99 பேரும் மீண்டும் சீட் கேட்டு விருப்ப மனு அளித்தனர். இவர்களது தொகுதிகளைக் கேட்டு இன்னும் பலர் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். ஏற்கெனவே, தொகுதிவாரியாக ஐவர் மற்றும் மூவர் பட்டியல் எனப்படும் உத்தேச வேட்பாளர் பட்டியலைத் தலைமைக்குக் கொடுத்துவிட்டது ஐபேக்.

ஐபேக் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்ததால், முழுமையாக அதை நம்பாமல் அந்தப் பட்டியலை ஆய்வு செய்ய ஸ்டாலின் தனியாகக் குழு அமைத்து, அவர்கள் தொகுதிவாரியாக பயணப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில், எப்படி புதியவர்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்ததோ ஐபேக், அதுபோல பதவியில் இருக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் யார் தேறுவார்கள் என்பது குறித்த ஒரு ரகசியப் பட்டியலையும் ஸ்டாலினிடம் அளித்திருக்கிறது ஐபேக்.

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

இது குறித்து தி.மு.க தலைமைக்கும், ஐபேக்குக்கும் பாலமாக விளங்கிவரும் முக்கியப் புள்ளி ஒருவர் நம்மிடம் மனம் திறந்தார். “கடந்த 2020 பிப்ரவரியில் ஒப்பந்தமானபோதே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இம்முறை சீட் ஒதுக்கக் கூடாது, மக்கள் செல்வாக்கு இல்லாத சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது, சீனியர் நிர்வாகிகளை இனிமேல் கட்சிப் பணியாற்ற நிர்பந்திக்க வேண்டும் என எக்கச்சக்க கண்டிஷன்களை அடுக்கினார் பிரசாந்த் கிஷோர்.

அதன் பிறகு கொரோனா பரவல் தொடங்கியதும், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் தொடங்கி, இறுதியாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ வரை ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப திட்டங்களை வகுத்துக் கொடுத்தது ஐபேக். இதற்கிடையே மண்டலம், மாவட்டம், தொகுதிவாரியாக அவ்வப்போது சர்வேக்களையும், வேட்பாளர் தேர்வையும் நடத்தியது. அதில் ஒரு பகுதியாக சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் பற்றியும் ஓர் ஆய்வு மேற்கொண்டது ஐபேக். அதில், தற்போதிருக்கும் 99 எம்.எல்.ஏ-க்களில் 25 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என ரகசிய நோட் ஒன்றை தலைமைக்குத் தட்டிவிட்டிருக்கிறது ஐபேக்.

அதில் 5 வகையான காரணங்களோடு 25 பேரின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது,

1. வயது முதிர்வு

2. உட்கட்சிப் பிரச்னை

3. தொகுதியில் மக்கள் பணிகள்

4. வேறு நபர்களுக்குப் போகும் தொகுதி

5. கூட்டணிக் கட்சிகளுக்குப் போகும் தொகுதி எனப் பிரித்திருக்கிறது!” என்றவர், அந்தப் படியலில் உள்ளவர்கள் பற்றி விவரித்தார்.

வயது முதிர்வு

``தி.மு.க.வில் தலைவர், பொதுச்செயலாளர் உட்பட பேரன்ட் பாடி நிர்வாகிகள் அத்தனை பேரும் 60 வயதைக் கடந்தவர்கள்தான். 80 வயதான மதுரை முத்துராமலிங்கத்துக்குக்கூட மாவட்டப் பொறுப்பாளர் கொடுத்தவர்தான் ஸ்டாலின். எனினும், சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும்மென்றால் முதியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்கிறது ஐபேக். ஏனெனில், கொரோனா பரவல் இரண்டாவது அலை அடிக்கத் தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதித்தோரின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

வேட்பாளர் நேர்காணல்
வேட்பாளர் நேர்காணல்

தேர்தல் ஆணையமே வீடு வீடாகப் பிரச்சாரம் செய்ய ஐந்து நபர்கள்தான் செல்ல வேண்டும், முதியவர்கள் தபால் வாக்கு செலுத்துவது நல்லது என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், முதியவர்களுக்கு சீட் கொடுத்தால் அவர்கள் பிரசாரம் செய்வது சிரமம். பிரசாரத்தின்போதோ, தேர்தல் முடிந்த பின்னரோ ஒருவேளை கொரோனா நோய் தாக்கினால், மீண்டு வருவது சிரமம். தேவையில்லாமல் இடைத்தேர்தல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் தி.மு.க-வை எச்சரித்திருக்கிறது. இனி இந்த கேட்டகரியில் வருபவர்கள் குறித்துப் பார்ப்போம்.

1) ரங்கநாதன் - வில்லிவாக்கம்

2) சீத்தாபதி - திண்டிவனம்

3) ஆண்டி அம்பலம் - நத்தம்

4) ராமச்சந்திரன் - ஒரத்தநாடு

5) டி.பி.எம்.மொய்தீன் கான் - பாளையங்கோட்டை

6) ரகுபதி - திருமயம்

இவ்வாறு இதில் 6 பேர் இருக்கிறார்கள்.

உட்கட்சிப் பிரச்னை!

இந்த கேட்டகரியில் வருபவர்களைப் பொறுத்தவரை தி.மு.க-விலுள்ள - தொகுதியிலுள்ள நிர்வாகிகளே அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது பொருள். லோக்கல் உடன்பிறப்புகளை மதிக்காமல் நடந்துகொள்வது, சந்திக்க வரும் நிர்வாகிகளை, தொண்டர்களை அலைக்கழிப்பது, உதவி தேடி வரும் கட்சியினரை உதாசீனப்படுத்துவது என்று பல விஷயங்கள் இதில் அடங்கி இருக்கின்றன. இது மட்டுமன்றி, அத்தொகுதி அடங்கிய மாவட்டச் செயலாளர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தவர்கள் என்பதும் இதில் அடங்கும். இதில் உள்ளவர்கள் யாரெனில்,

7) ஆர்.டி.சேகர் - பெரம்பூர்

8) ரவிச்சந்திரன் - எழும்பூர்

9) புகழேந்தி - மதுராந்தகம்

10) ஈஸ்வரப்பன் - ஆற்காடு

11) கே.வி.சேகரன் - போளூர்

12) நீலமேகம் - தஞ்சாவூர்

இவ்வாறு இந்த கேட்டகரியில் ஆறு எம்.எல்.ஏ-க்கள் வருகிறார்கள். இவர்கள் போக, தொகுதியில் மக்கள் பணிகளைச் சரியாக செய்யாமல் கெட்ட பெயர் வாங்கியிருக்கும், வேளச்சேரி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ வாகை சந்திரசேகருக்கு இந்தமுறை சீட் கொடுக்கக் கூடாது என்றும் ஐபேக் குறிப்பிட்டிருக்கிறது.

இது தவிர, அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ எம்.கே.மோகன் வயது முதிர்வு காரணமாகவும், அதேநேரம் அவரது மகன் கார்த்தி போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும் காரணத்தாலும் சிட்டிங் லிஸ்ட்டிலிருந்து வெளியேறுகிறார்.

பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ இ.கருணாநிதிக்கு தொகுதியிலோ, உட்கட்சியிலோ எந்தப் பிரச்னையும் இல்லை என்றபோதும், அங்கு போட்டியிடப் பலர் முட்டி மோதிவருகிறார்கள். தொகுதியில் தலித் மக்களும் இஸ்லாமியர்களும் அதிகம் வசிப்பதால், அந்த இரு சமூகத்தில் ஒருவருக்கே சீட் எனச் சொல்லப்படுகிறது. பொதுத் தொகுதியாக இருந்தபோதிலும், முன்பொருமுறை ஜெயலலிதா தன்சிங் என்ற தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றிகண்டார். இதன்படி, இ.க.வுக்கு சீட் வாங்கிக் கொடுத்த கருணாநிதியின் முன்னாள் உதவியாளர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த நித்யா சீட் கேட்கிறார். பல்லாவரம் சேர்மனாக இருந்த நிஸார் சீட் கேட்கிறார். எனவே, போட்டி அதிகம் என்பதால், இ.க.வுக்கு இம்முறை இங்கு சீட் இல்லை.

செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆர்.டி.அரசு இருக்கிறார். கூட்டணியிலுள்ள வி.சி.க.. இத்தொகுதியை ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி உரிமையாளர் பனையூர் பாபுவுக்காகக் கேட்டுவருவதால், ஆர்.டி.அரசுவுக்கு, தி.மு.க அரசு அமையும்பட்சத்தில் அதில் பங்கெடுக்க வாய்ப்பில்லை.

ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக வில்வநாதன் இருந்துவருகிறார். மாவட்டச் செயலாளரான நந்தகுமார், தான் எம்.எல்.ஏ-வாக இருக்கும் அணைக்கட்டுத் தொகுதியிலிருந்து ஆம்பூருக்கு இடம்பெயர்கிறார். கம்மவ நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். தொகுதிக்கு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியபோதும், வன்னியர் சமூகம் டாமினேட் செய்யும் தொகுதி அணைக்கட்டு. போராடி வன்னியர் இடஒதுக்கீட்டை பா.ம.க பெற்றுவிட்டதால், கண்டிப்பாக இம்முறை இங்கு அக்கட்சி போட்டியிடும் என்பதால், ஆம்பூர் தொகுதிக்குச் செல்கிறார். ஐபேக்கும் தொகுதி மாறுவதை ஆமோதித்திருப்பதால், ஆம்பூர் சிட்டிங் எம்.எல்.ஏ.-வில்வநாதானைப் பெட்டி படுக்கையை எடுக்கச்சொல்லிவிட்டது.

அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க.விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதால், இதன் சிட்டிங் எம்.எல்.ஏ-வான மகாராஜனுக்கு சீட் நஹி என்று சொல்லிவிட்டார்கள். 'இரண்டு ஆண்டுகள்தானே எம்.எல்.ஏ-வாக இருந்தேன், நல்ல ரிப்போர்ட்டா கொடுக்கக் கூடாதா?’ என எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், ஐபேக் ஒப்புக்கொள்ளவில்லையாம்.

மைலம் தொகுதியை வி.சி.க கேட்பதால், அத்தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ மாசிலாமணிக்கு இம்முறை சீட் யோகம் இல்லை.

அ.தி.மு.க-வில் இருந்துவந்த சீனியர் மா.செ-வான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் வயது முதிர்வு கேட்டகரியிலும், உட்கட்சி பிரச்னை கேட்டகரியிலும் வருகிறார். இதுமட்டுமன்றி, இம்முறை இவரது மகனான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ் இத்தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். மேலும், இவருக்கும், அமைச்சர் கே.டி.ஆருக்கும் இருக்கும் ரகசிய டீல் பற்றி ஐபேக் ஆதாரபூர்வமாக ஸ்டாலினிடம் வத்திவைத்துவிட்டதால், இனி இவர் மாஜி எம்.எல்.ஏ-தான் என்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதேபோல் ஆலங்குலம் தொகுதியையும், விருதுநகர் தொகுதியையும் காங்கிரஸ் கட்சி கட்டாயமாகக் கேட்டு நிற்கிறது. அவர்களுக்கு அந்தத் தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக ஐபேக் குறிப்பிட்டிருப்பதால், ஆலங்குலம் சிட்டிங் எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணாவுக்கும், விருதுநகர் சிட்டிங் எம்.எல்.ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கும் இம்முறை சீட் இல்லை.

இதேபோல், தளி தொகுதியையும், ராஜபாளையம் தொகுதியையும் கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்கிறது. தாராளமாகக் கொடுக்கலாம் என ஐபேக்கும் சொல்லிவிட்டதால், தளி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷுக்கும், ராஜபாளையம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ தங்கபாண்டியனுக்கும் சீட் இல்லை.

சி.பி.ஐ வருவதால் வெளியேற்றப்படும் ஒய்.பிரகாஷ், ஓசூர் தொகுதியைக் கண்டிப்பாக கேட்டுவருகிறார். தொகுதி மாறுவதால் பாதிப்பில்லை என்று ஐபேக் சொல்லிவிட்டதால், ஓசூர் சிட்டிங் எம்.எல்.ஏ எஸ்.ஏ.சத்யாவுக்கு இம்முறை கண்டிப்பாக சீட் இல்லை.

இவ்வாறு மேற்கண்ட 25 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு இம்முறை கண்டிப்பாக சீட் கொடுக்கவே கூடாது என்று நோட் போட்டிருக்கிறது ஐபேக். ஒருவேளை மீறி மறுபடியும் சீட் கொடுத்தால், வெற்றி தோல்விக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூலாகச் சொல்லிவிட்டதாம்! இந்த ரிப்போர்ட் குறித்து இறுதியாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பட்டும்படாமல் சொல்லிவிட்டார். அதாவது, ‘தற்போதைய எம்.எல்.ஏ-க்கள், மா.செ-க்களில் சிலருக்கு சீட் இருக்காது. அதற்கு பதில் ஆட்சியமைந்ததும் வாரியத் தலைவர்கள் பதவி தேடி வரும்’ என்று பேசியிருந்தார். ஒருவேளை ஐபேக் வேண்டுமென்றே இதில் சிலரை நுழைத்திருக்கிறதோ என்பதை அறிய கிராஸ் செக் செய்துகொண்டிருக்கிறார் தலைவர் ஸ்டாலின்” என்பதோடு முடித்துக்கொண்டார் அந்த முக்கியப்புள்ளி!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு