Published:Updated:

மோடியின் ஹூஸ்டன் நிகழ்ச்சியில் நேருவைப் புகழ்ந்து பேசிய அமெரிக்கத் தலைவர்!

அமெரிக்காவில் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் பங்கேற்ற ஹௌடி மோடி நிகழ்ச்சியின் மற்றொரு சுவாரஸ்ய தகவல் இது.

modi howdi
modi howdi

இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளின் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி, அமெரிக்காவில் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் பங்கேற்ற ஹௌடி மோடி நிகழ்ச்சி. சுமார் 50,000 இந்திய வம்சாவளி அமெரிக்காவினர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கான சுவாரஸ்ய செய்திகளாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Modi in Houston
Modi in Houston
PIB

மோடிக்காக வைக்கப்பட்ட பேனர்கள் தொடங்கி, மோடி ட்ரம்ப் இருவரும் இணைந்து ஒரு சிறுவனுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வரை அத்தனையும் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்கு நடந்த நிகழ்ச்சியின் மற்றொரு சுவாரஸ்யத் தகவல் இது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை கட்சித் தலைவரான ஸ்டெனி ஹொயேர் மோடியை வரவேற்றுப் பேசினார், அப்போது, ``அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் அதன் பாரம்பர்யத்தைப் பெருமையாகப் போற்றும் நாடு. அதேசமயம் காந்தியடிகளின் கோட்பாடுகளின் படியும், மதச்சார்பற்ற ஜனநாயகமாக வளர்வதற்கான நேருவின் பரந்த பார்வையின் படியும், அதன் பன்முகத்தன்மை மீதான மதிப்பும், மனித உரிமைகளும் ஒவ்வோர் இந்தியரையும் பாதுகாக்கும்படி இந்தியா தன்னுடைய எதிர்காலத்தைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது " என்று ஆரம்பித்து நேருவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

`இங்கே மோடி சர்க்கார்... அங்கே ட்ரம்ப் சர்க்கார்!' - ஹூஸ்டனில் வாக்கு சேகரித்த பிரதமர்

அதுமட்டுமன்றி, இந்தியா சுதந்திரமடைந்த அன்று நள்ளிரவு நேரு ஆற்றிய உரையில், ``ஒவ்வொரு இந்தியனின் கண்ணில் வழியும் கண்ணீரையும் துடைக்க வேண்டும், அது முடியும் வரை நம்முடைய பணி ஓயப்போவதில்லை" என்று பேசியதையும் நினைவு கூர்ந்து பேசினார். நேருவின் இந்த வார்த்தைகளும், ஆபிரகாம் லிங்கன் கூறிய, `யாருக்கும் தீங்கு நினையாது, அனைவரிடமும் கருணையுடன் இருப்பது வேண்டும்' என்ற வார்த்தைகளையும் உண்மையாக்கவே இந்த ஹூஸ்டன் கூட்டம் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

Steny Hoyer
Steny Hoyer
AP

நேருவைப் பற்றி ஸ்டெனி ஹொயேர் பேசும்போது அருகில் நின்றிருந்த மோடி, மிகவும் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார். ஆளும் பா.ஜ.க, காஷ்மீர் பிரச்னை முதல் அனைத்திற்கும் நேருவைக் காரணம் கூறி குறை சொல்வதுண்டு. இந்நிலையில், மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் நேருவைக் கொண்டாடி ஒரு முக்கிய தலைவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.