Published:Updated:

`ஜாமீன் மனு தள்ளுபடி; 13 நாள் நீதிமன்றக் காவல்!' - சேலம் சிறையில் நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கடந்த 29-ம் தேதி நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் அவதூறாகப் பேசியதாக நெல்லை கண்ணன் மீது புகார் செய்யப்பட்டது. அதனால் அவர் மீது குற்றம் செய்யத் தூண்டுதல், அவதூறாகப் பேசுதல், இரு பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் விதமாகப் பேசுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஏற்கெனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

மருத்துவமனையில் உடல் பரிசோதனை
மருத்துவமனையில் உடல் பரிசோதனை

இந்த நிலையில், அவர் மீது நேற்று மேலும் இரு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதன்படி, 153 (ஏ) இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுதல், 506 (1) கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரு பிரிவுகளும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

நெஞ்சுவலி காரணமாக மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் அங்கிருந்து சென்னைக்குச் செல்லும் வழியில் பெரம்பலூரில் உள்ள லாட்ஜில் ஓய்வுக்காகத் தங்கியிருந்தார். அப்போது நெல்லை போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து அழைத்து வரப்பட்ட அவருக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மூன்று மணி நேரம் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன்
நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன்

பின்னர், நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நெல்லை கண்ணன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். எதிர் தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். நெல்லை கண்ணனை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பாபு உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவுப்படி நெல்லை கண்ணன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாளையங்கோட்டை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை அங்கிருந்து சேலம் சிறைக்கு மாற்றினர். இது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் நெல்லை கண்ணன்
மருத்துவமனையில் நெல்லை கண்ணன்

நிர்வாக காரணங்கள் காரணமாக அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சேலத்துக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இதயக் கோளாறு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்படும் அவரை அலைக்கழிக்கும் வகையில் சேலத்துக்கு மாற்றியிருப்பதாக உறவினர்கள் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில், நெல்லை கண்ணன் சார்பாக நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு