Published:Updated:

`அவரது பேச்சு மன உளைச்சலை ஏற்படுத்தியது!'- கி.வீரமணி மீது 6 பிரிவுகளில் நெல்லை போலீஸ் வழக்கு

பி.ஆண்டனிராஜ்

இந்துக்கள் வழிபடும் கடவுளான கிருஷ்ணரை அவதூறாகப் பேசியது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது நெல்லை மாநகரில் உள்ள காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கி.வீரமணி
கி.வீரமணி

இந்துக்களின் கடவுளும் பகவத்கீதையின் நாயகனுமான பகவான் கிருஷ்ணர் குறித்து தி.க தலைவர் கி.வீரமணி அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதற்கு, இந்து அமைப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள். அத்துடன், கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டன.

பகவான் கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி அவதூறாகப் பேசியதால், எனக்கு மிகுந்த மனவருத்தமும் வேதனையும் ஏற்பட்டது.
சீதாபதி, தலைவர், ஸ்ரீராதா தாமோதரர் வழிபாட்டு மையம்

இந்த நிலையில், நெல்லையில் உள்ள ஸ்ரீராதா தாமோதரர் வழிபாட்டு மையத்தின் தலைவர் சீதாபதி என்பவர், நெல்லை ஜே.எம் கோர்ட்டில் வழக்கு தாக்கல்செய்தார். அதில், ``தி.க தலைவர் கி.வீரமணி பேச்சின் ஒலிப்பதிவைக் கேட்டேன். அதில், அவர் கிருஷ்ணரைப் பற்றி அவதூறாகப் பேசியிருந்தார். அவரது பேச்சு எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனால், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.

Vikatan

நெல்லை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கி.வீரமணி பேசியது தொடர்பாக விசாரித்து, மனுதாரரின் கோரிக்கையில் உண்மை இருக்குமானால், அவர்மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிபதி பழனிகுமார் உத்தரவிட்டார். அதனடிப்படையில், தச்சநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர், இன்று கி.வீரமணி மீது வழக்குப் பதிவுசெய்தார்.

தி.க தலைவர் கி.வீரமணி
தி.க தலைவர் கி.வீரமணி

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் (153), இரு தரப்பினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுதல் (153 ஏ), திட்டமிட்டு மன உணர்வுகளைப் புண்படுத்தும்படி செயல்படுதல் (295 ஏ), அவதூறான கருத்துகளைப் பரப்புதல் (293), திட்டமிட்டு அவதூறுகளையும், மோசமான கருத்துகளையும் பரப்புதல் (505/1), தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தவறான கருத்துகளைப் பரப்புதல் (66 ஏ) ஆகிய பிரிவுகளில், அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்ரீராதா தாமோதரர் வழிபாட்டு மையத்தின் தலைவர் சீதாபதியின் வழக்கறிஞர்கள் குணசேகரன், உதயமணிகண்டன், பிரகாஷ் ஆகியோரிடம் பேசினோம். ``பகவத் கீதையின் நாயகனான கிருஷ்ணனின் வழிபாட்டைப் பின்பற்றும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் இணைந்து சீதாபதி செயல்பட்டுவருகிறார். அந்த இயக்கத்தைப் பின்பற்றும் பக்தர்கள், உலகின் பல நாடுகளில் இருக்கும் நிலையில், கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி அவதூறாகப் பேசியிருக்கிறார்.

பகவான் கிருஷ்ணன்
பகவான் கிருஷ்ணன்

அவரது பேச்சு வாட்ஸ்அப் மூலம் பரவியதால், கிருஷ்ண வழிபாட்டைப் பின்பற்றும் பலரும் அதிருப்தி அடைந்தார்கள். தவறான கருத்துகளைத் தெரிவித்ததன் மூலம் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் அவர்மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால், காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது’’ என்றார்.

Vikatan

இந்த விவகாரம் தொடர்பாக, திராவிடர் கழகத்தின் நெல்லை மாவட்டச் செயலாளர் த.ராஜேந்திரனிடம் பேசியபோது, `கிருஷ்ணர் குறித்து எங்கள் தலைவர் கி.வீரமணி தவறாக எதையும் கூறவில்லை. அவர் பேசியவை அனைத்தும் அவருடைய சொந்தக்கருத்து கிடையாது. கிருஷ்ணர் குறித்து ஏற்கெனவே புராணங்களில் இருப்பவற்றை மட்டுமே அவர் எடுத்துச் சொன்னார்.

திட்டமிட்டு யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது அய்யா கி.வீரமணியின் நோக்கம் கிடையாது.
த.ராஜேந்திரன், நெல்லை மாவட்டத் தலைவர், தி.க

இதிகாசங்களில், அவர் பெண்கள் சூழ இருந்ததாகவும் கோபியர்களால் கொஞ்சப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஓவியங்களில்கூட பல இடங்களிலும் வரைந்து வைத்திருக்கிறார்கள். அதையே பேசியிருக்கிறார்.

Vikatan

யாரையும் இழிவுபடுத்திப் பேசவேண்டும் என்பது கி.வீரமணியின் நோக்கம் அல்ல. அவர், அவதூறாக எதையும் பேசவில்லை. ஆன்மிகவாதிகளின் பேச்சிலும் எழுத்திலும் உள்ளவற்றையே அவர் தெரிவித்திருந்தார். அதனால், நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறுவார்.

Vikatan

தற்போது, பொது இடங்களில் இதுபோன்ற விவகாரங்களைப் பேச அனுமதி கிடைப்பதில் நிறைய சிக்கல் இருக்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இத்தகைய விவரங்களை விளக்கமாக எடுத்துப் பேச வாய்ப்பு கிடைக்கும். வழக்கை சட்டப்படி சந்திப்போம்’’ என்றார்.