Published:Updated:

எங்க ஏரியா... உள்ளே வராதே!

பிரதீப் குமார் கியாவாலி
பிரீமியம் ஸ்டோரி
பிரதீப் குமார் கியாவாலி

கூர்க்கா தேசத்தின் கூக்குரல்

எங்க ஏரியா... உள்ளே வராதே!

கூர்க்கா தேசத்தின் கூக்குரல்

Published:Updated:
பிரதீப் குமார் கியாவாலி
பிரீமியம் ஸ்டோரி
பிரதீப் குமார் கியாவாலி
கிராமங்களில் ஒரே பொதுச்சுவரின்மீது இரண்டு பக்கங்களிலும் வீடு கட்டிக்கொண்டு அருகருகே வாழும் குடும்பங்கள் உண்டு. ‘இரண்டு பேரும் தனித்தனியாக சுவர் கட்டுவது வீண் செலவு. இடத்தையும் அடைக்கும்’ எனப் பங்காளிகள் இப்படி எல்லையைப் பங்கிட்டுக்கொண்டு வசிப்பார்கள். ‘நமக்குள் எந்தக் காலத்திலும் எல்லைத் தகராறு வரப்போவதில்லை’ என்ற நம்பிக்கையில் வாழ்க்கை ஓடும்.

இந்தியாவுக்கும் நேபாளத்துக்குமான உறவும் இப்படியானதுதான். 1950-ம் ஆண்டு போடப்பட்ட நல்லுறவு ஒப்பந்தத்தின்படி நேபாளத்தவருக்கு இங்கே உள்ளே வர, தங்க, பணிபுரிய விசா உள்ளிட்ட எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இமயமலையின் அடிவாரத்தில், இந்தியாவுக்குள் நெற்றிப்பட்டை மாதிரி நீளும் நேபாளத்தை அண்டை நாடாக இந்தியா எப்போதும் நினைத்ததில்லை. ஆனால், திடீரென்று எல்லையில் 335 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைச் சொந்தம் கொண்டாடி, தங்கள் நாட்டின் அரசியல் சட்டத்தையே திருத்தும் அளவுக்கு நேபாளம் இப்போது போக, திகைத்து நிற்கிறது இந்தியா.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லை தொடங்கும் இடத்தில், சீன எல்லையை ஒட்டிய ஒரு முக்கோணப் பகுதியே இப்போதைய சர்ச்சையில் சிக்கியுள்ள நிலப்பரப்பு. காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய மூன்று பகுதிகளையும் சேர்த்து நேபாளம் சொந்தம் கொண்டாடுகிறது. ‘மகாகாளி நதிக்குக் கிழக்கே இருக்கும் பகுதிகள் நேபாளம். மேற்கே இருப்பவை இந்தியப் பகுதி’ என்பது பிரிட்டிஷ் காலத்திலேயே பேசித் தீர்க்கப்பட்ட விஷயம். ஆனால், அந்த நதி இமயமலையில் எங்கு உற்பத்தியாகிறது என்பதை இரண்டு நாட்டு அதிகாரிகளும் வெவ்வேறு இடங்களைக் காண்பித்து சிக்கலை வளர்த்தனர்.

 நாராவனே - ராஜ்நாத் சிங்
நாராவனே - ராஜ்நாத் சிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘இந்தப் பகுதிகள் நேபாளத்துக்குச் சொந்தம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பத்திரப் பதிவு ஆவணங்கள், வரி ரசீதுகள் உள்ளன. 1958-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இந்தக் கிராமங்களின் மக்களுக்கு நேபாளத்தில் ஓட்டு இருந்தது. 1961 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இவர்கள் நேபாள மக்களாகக் கணக்கிடப்பட்டனர். 1962-ம் ஆண்டு இந்தியா-சீனா போர் வந்தபோது, தங்கள் ராணுவத்தினரை இங்கே நிறுத்திக்கொள்ள இந்தியாவுக்கு அனுமதி தந்தோம். இந்தியாவின் பாதுகாப்பு கருதி நாங்கள் தந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி, நிரந்தரமாக இந்தப் பகுதியை இந்தியா சொந்தம் கொண்டாடுகிறது’ என்பது நேபாளத்தின் புகார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவுக்கும் நேபாளத்துக்குமான 1,751 கிலோமீட்டர் எல்லையில் எங்கேயும் சர்ச்சை எழுந்ததில்லை. ஆனால், இந்த விவகாரம் மட்டும் ஒரு முள்ளாக உறுத்திக்கொண்டே இருந்தது. இதைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும்படி நேபாளம் பலமுறை கேட்டது. ‘இவர்கள் எங்கே போய்விடப் போகிறார்கள்’ என்கிறரீதியில் இந்தியா அலட்சியம் செய்தது. இடைப்பட்ட இந்த ஆண்டுகளில் நேபாளத்துக்கு சீனா பெருமளவில் கடன் கொடுத்ததையோ, நேபாள ஆட்சியாளர்கள் பலரும் சீனாவுக்கு நெருக்கமாக மாறியதையோ இந்தியா கண்டுகொள்ளவில்லை. விளைவு... கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலைமை மிக மோசமாக மாறியது.

எங்க ஏரியா... உள்ளே வராதே!

லிபுலேக் கணவாய் வழியாக இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தைத் தொடர்வதற்கு 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன. அப்போதே, ‘லிபுலேக் எங்கள் பகுதி. அதன்வழியே வியாபாரம் செய்வதற்கு நீங்கள் எப்படி ஒப்பந்தம் செய்யலாம்’ என நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு முன்னர் இப்படி அது எதிர்ப்பு தெரிவித்ததே இல்லை.

லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களைப் பிரித்த பிறகு 2019, நவம்பரில் இந்தியா புது வரைபடத்தை வெளியிட்டது. அப்போதும், ‘காலாபானி உள்ளிட்ட எங்கள் பகுதிகள் இந்தியாவின் பகுதிகளாகக் காட்டப் பட்டுள்ளன’ என்று நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தநிலையில், கைலாஷ் மானசரோவர் பயணத்தை எளிதாக்குவதற்காக இந்தியா அமைத்திருக்கும் புதிய சாலையை மே 8-ம் தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்துவைத்தார். இந்த 80 கி.மீ சாலையில் சுமார் 17 கிலோமீட்டர் அளவுக்கு நேபாளப் பகுதியில் இந்தியா சாலை போட்டிருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. நேபாளத்துக்கான இந்தியத் தூதரை நேரில் அழைத்து அந்த நாடு கண்டனம் தெரிவித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனே நம் ராணுவத் தளபதி நாராவனே ஒரு சர்ச்சை யைக் கிளப்பினார். சீனாவை நேரடியாகக் குறிப்பிடாமல், ‘‘ஓர் அந்நிய சக்தியின் தூண்டுதலால் நேபாளம் பிரச்னை எழுப்புகிறது’’ என்றார். நேபாளத்தில் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘‘எங்களை யாரும் தூண்டவில்லை. எங்களுக்குச் சொந்தமான நிலத்துக்கு நாங்கள் உரிமை கோருகிறோம்’’ என்றார் நேபாள பிரதமர் ஷர்மா ஒளி. கூடவே அவர், ‘‘சீன வைரஸைவிட இந்திய வைரஸ் ஆபத்தாகப் பரவுகிறது’’ என்று வேறு ‘குத்தினார்.’ கொரோனா பற்றிச் சொன்னதாக அவர் சமாளித்தாலும், உண்மையில் இது கொரோனா குறித்த கமென்ட் இல்லை என்பது டெல்லிக்குப் புரிந்தது.

பிரதீப் குமார் கியாவாலி
பிரதீப் குமார் கியாவாலி

இந்தச் சூழலில்தான் காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா உள்ளிட்ட தாங்கள் உரிமை கோரும் பகுதிகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு, புதிய வரைபடம் ஒன்றை நேபாளம் தயாரித்தது. இதை நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடமாகக் குறிப்பிடும் அரசியல் சட்ட திருத்தத்துக்கு ஜூன் 13-ம் தேதி நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதற்கான வரலாற்று ஆதாரங்களைத் திரட்ட, ஒன்பது பேர் கொண்ட நிபுணர்குழு ஒன்றையும் நேபாளம் அமைத்துள்ளது.

இவ்வளவு வேகமாகவும் கடுமையாகவும் நேபாளம் நடந்துகொள்ளும் என இந்தியா எதிர்பார்க்கவில்லை. அதனால், ‘வெளியுறவு செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குத் தயார்’ என இந்தியா பச்சைக்கொடி காட்டியது. ஆனால், நேபாளம் சமாதானத்துக்கு இறங்கி வரவேயில்லை. ‘‘எங்களை இந்தியா அலட்சியம் செய்கிறது’’ என்று குற்றம் சாட்டிவிட்டு அரசியல் சட்டத்தைத் திருத்தியது.

சரி, ஏன் இத்தனை வேகம்? நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், மாவோயிஸ்ட் கட்சியும் இணைந்து அங்கு கூட்டணி ஆட்சி நடத்து கின்றன. இந்தக் கூட்டணி யில் விரிசல் ஏற்பட்டதால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஷர்மா ஒளி பதவி விலக வேண்டிய நெருக்கடியில் இருந்தார். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்கு ஒரு பிடிமானம் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் கைலாஷ் மானச ரோவர் சாலை திறக்கப்பட, இந்தியாவுக்கு எதிராக அவர் கொடிபிடித்தார். ‘ஒரே தேசம்... ஒரே குரல்’ என தேசபக்தியைத் தூண்டிவிட்டு அரசியல் செய்தார். தேசபக்தி அரசியல்தான் எல்லா நாடுகளிலும் தீயாகப் பற்றிக்கொள்ளுமே! அங்கேயும் பற்றிக்கொண்டது.

நேபாளத்துக்கு பெட்ரோல், மருந்து, உணவு என எல்லாமே இந்தியாவிலிருந்தே போகின்றன. சுமார் 60 லட்சம் நேபாளிகள் இந்தியாவில் பணிபுரிகிறார்கள். வீரத்துக்குப் பெயர் பெற்ற இந்திய ராணுவத்தின் கூர்க்கா ரெஜிமென்ட்டில் சுமார் 40 ஆயிரம் வீரர்கள் இருக்கிறார்கள். வரலாறு, பண்பாடு, மதம், நிலம் என எல்லாவகையிலும் நேபாளத்துடன் இந்தியாவுக்கு இரண்டறக் கலந்த உறவு உண்டு.

இந்த உறவில் கசப்பு எங்கே தொடங்கியது? கடந்த 2015-ம் ஆண்டு நேபாள அரசை எதிர்த்து எல்லை மக்களில் ஒரு பிரிவினர் போராடினர். அப்போது நேபாளத்துக்கு இந்தியாவிலிருந்து பொருள்கள் போவது தடை செய்யப்பட்டது. ‘இந்தப் போராட்டத்தை தூண்டிவிட்டது இந்தியா’ என நேபாள மக்கள் மத்தியில் வெறுப்பு உருவானது. அந்த நேரத்திலும் அங்கு ஷர்மா ஒளியே பிரதமர். அந்த வெறுப்பே இப்போதும் மிக மோசமாக வளர்ந்து நிற்கிறது.

இதற்கு உடனடித் தீர்வு இல்லை. அதே நேரத்தில், இந்தப் பிரச்னையை வளரவிடுவதும் இந்தியாவுக்கு நல்லதல்ல. நேபாளத்தில் சீனா செலுத்தும் ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டு, சாமர்த்தியமாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது இந்தியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism