Published:Updated:

இந்திய அரசியலில் `நெப்போட்டிஸம்' - ஆபத்து யாருக்கு?

நெப்போட்டிஸம்
நெப்போட்டிஸம்

'நெப்போட்டிஸம்' எனும் சொல், பாலிவுட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்தியாவில் கலை, வர்த்தகம், அரசு வேலை, குடிமைப்பணிகள், ராணுவம், நீதித்துறை, அரசியல் என அனைத்திலும் வாரிசுகளின் கை ஓங்கியே இருக்கிறது.

'நெப்போட்டிஸம்' (Nepotism) என்கிற வார்த்தைக்குத் தகுதி அடிப்படையில் இன்றி, சொந்தபந்தங்களுக்கு உயர் பதவிகள் கொடுத்தல் என விளக்கமளிக்கிறது, கூகுள். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி வெளியானதும், இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட ஒரு வார்த்தைதான் நெப்போட்டிஸம். பாலிவுட்டில் பெரும் நட்சத்திரங்களின் வாரிசுகளும் உறவுகளும் மட்டுமே கோலோச்சுகின்றனர். சுயம்புவாக ஒருவர் உருவாக பெரும் போராட்டம் செய்ய வேண்டியிருக்கிறது என நாடு முழுக்க கண்டனங்கள் எழுந்தன. தகுதியைத் தாண்டி, 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் வாய்ப்புகள் ஒருவருக்குக் கிடைப்பதும், கிடைத்த வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் சூழல் அமைவதும்கூட, வாரிசுகளுக்கு மட்டுமே எளிதாக இருக்கிறது.

அரசியல்
அரசியல்

ஆனால் 'நெப்போட்டிஸம்' எனும் சொல், பாலிவுட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்தியாவில் கலை, வர்த்தகம், அரசு வேலை, குடிமைப்பணிகள், ராணுவம், நீதித்துறை, அரசியல் என அனைத்திலும் வாரிசுகளின் கை ஓங்கியே இருக்கிறது.

அதேசமயம், அரசு வேலைகளுக்கு கடினமான தேர்வுகளைச் சந்திக்க வேண்டும், சினிமாவில் வாய்ப்புகளைத் தாண்டி மக்கள் மனதில் இடம் பெறக் கடின உழைப்பு வேண்டும், வாரிசானாலும் கலைஞனாகத் திறமை வேண்டும். ஆனால் அரசியல் வாரிசுகளுக்கு, பெரும்பாலும் இவையெல்லாம் தேவையாக இருப்பதில்லை. இன்னாரின் பிள்ளை என்ற அடையாளம் அவர்களை முதல் அடியிலேயே உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிடுகிறது. சமயங்களில் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களைக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்தியாவில் கட்சி பேதமின்றி தொன்றுதொட்டு இருக்கும் வாரிசு அரசியல் நமது தேசத்தின் பெரும் ஆபத்து.

பெரும்பாலும் தேர்தல் சமயங்களில் இந்த வாரிசு அரசியல் பிரச்சாரத்தில் சில கட்சிகள் மாட்டிக்கொள்வதுண்டு. நாம் அதிகம் அறிந்த வகையில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியும், மாநில அளவில் தி.மு.கவும் வாரிசு அரசியலுக்காகத் தொடர்ந்து விமர்சிக்கப்படும் கட்சிகள். ஆனால், பா.ஜ.க எனும் தேசியக் கட்சி தொடங்கி ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் என இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் வாரிசு அரசியல் பிரதானமாக இருக்கிறது.

வாரிசு அரசியல்...
வாரிசு அரசியல்...

இந்தியாவின் தற்போதைய மாநில முதலமைச்சர்களில் 5 பேர் முன்னாள் முதல்வர்களின் மகன்கள். சுமார் 10 பேர் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள், பலரது வாரிசுகள் அடுத்தடுத்து கட்சிக்கும் ஆட்சிக்கும் தயாராகி நிற்கிறார்கள். 2019-ம் ஆண்டு 'IndiaSpend' எனும் நிறுவனம், இந்தியப் பாராளுமன்றத்தில் உள்ள அரசியல் வாரிசுகளைப் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது.

1952 -ம் ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராக இருந்த 4,807 பேரின் குடும்பப் பின்னணியை ஆராய்ந்தது இந்த நிறுவனம். காங்கிரஸ், பா.ஜ.க எனும் இரண்டு தேசியக் கட்சிகளும் சுமார் 20 ஆண்டுகளாகக் குறைந்தது 10 சதவிகிதம் நேரடி வாரிசுகளை மக்களவை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கிறது என்கின்றன ஆய்வு முடிவுகள். குறிப்பாக, குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் தாய்-தந்தை மற்றும் கணவன்-மனைவி முன்னாள் மக்களவை உறுப்பினர்களாக இருந்ததை ஒட்டி மட்டுமே எடுக்கப்பட்ட கணக்கு இது. இந்த நேரடி வாரிசுகளின் எண்ணிக்கை தவிர, மற்ற உறவுமுறைகளில் வரும் அரசியல்வாதிகள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால், ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் போராடும் இட ஒதுக்கீடு விகிதத்துக்குச் சமமாக இந்த வாரிசுகளின் விகிதம் கூடும். இந்த ஆய்வின்படி, 2014-ம் ஆண்டு மக்களவையில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் 130 பேர் அரசியல் வாரிசுகள்.

1997-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலை விமர்சித்து கட்சியிலிருந்து வெளியேறியவர்தான் மம்தா பானர்ஜி. ஆனால், இன்று அவரது சகோதரரின் மகன் அபிஷேக் பானர்ஜி அவரது அரசியல் வாரிசாக முன்னிறுத்தப்படுகிறார். அதேபோல உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி, அவரது சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்த்தான் தன்னுடைய வாரிசு என முன்னிலைப்படுத்துகிறார்.

இப்படி தமிழகத்தில் கருணாநிதி குடும்பம், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு குடும்பம், ஜெகன்மோகன் ரெட்டி குடும்பம், தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் குடும்பம், மகாராஷ்டிராவில் பவார் குடும்பம், மத்தியப்பிரதேசத்தில் சிந்தியா குடும்பம், உத்தரப்பிரதேசத்தில் யாதவ் குடும்பம் என இந்தியா முழுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் அதிகமாகக் காணப்படுகிறது.

மகாராஷ்டிராவில், தற்போதைய அரசின் அமைச்சரவையில் 50 சதவிகிதம் பேர், ஏதோ ஒரு வகையில் உறவினர்கள். இப்படி நமது தேசத்தில், ஒரு மனிதனின் அரசியல் வாழ்க்கைக்கு அடிப்படைத் தகுதியாக மாறிவிட்டிருக்கிறது குடும்பப் பெயர். தகுதியில்லாத, அனுபவமில்லாத ஒரு குடும்ப நபருக்கு பெரும் பொறுப்புகள் கொடுத்து அதிகார நாற்காலியில் உட்கார வைப்பதற்கு கட்சித் தலைமைகளும் தயங்குவதில்லை. மக்களும் கண்டுகொள்வதில்லை. ஆனால், மக்களிடம் இந்த வாரிசு அரசியலுக்கு எதிரான ஒரு மனநிலை எப்போதும் இருப்பதுண்டு.

நாடாளுமன்ற மக்களவை
நாடாளுமன்ற மக்களவை

வாரிசு அரசியல் என்றதும் காங்கிரஸ் கட்சியின் நீண்ட நேரு - காந்தி குடும்ப அரசியல்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால், பா.ஜ.க-வில்கூட ஏராளமான வாரிசுகள் உண்டு என்பதுதான் உண்மை நிலை. அதேசமயம், பா.ஜ.க தலைவர்களான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என உறுதியோடு இருந்தனர். பா.ஜ.க, அதன் தலைமையில் எப்போதும் இப்படி வாரிசுகள் அற்ற ஒரு நபரை அமரவைக்கிறது. மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக ஒரு பிம்பம் அந்த தலைவரைச் சுற்றி கட்டமைக்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் மோடியின் தாயும், சகோதரர்களும் குஜராத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது நாம் அறிந்தது.

Vikatan

கடந்த இருமுறையும் மோடியின் பா.ஜ.க அரசு மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்றது. பா.ஜ.க-வின் தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸுக்கு எதிரான பலமான ஆயுதமாக வாரிசு அரசியல் செய்வதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அது பா.ஜ.க-விற்கு நல்ல பலனையும் அளித்தது. ஆனால், இது மத்திய அரசியலின் நிலவரம் மட்டுமே, மாநிலங்களில் இன்றளவும் வாரிசுகள்தான் அதிக பலன் பெறுகிறார்கள்.

2019 மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றது ஒரே ஒரு இடத்தில்தான். துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார், தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். முதல் முறை போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார், குறுகிய காலத்தில் அந்தத் தொகுதியில் அடைந்த பிரபல்யத்துக்கு அவர் இன்னாரின் மகன் என்பதும் முக்கியக் காரணம். இது ஒரு உதாரணம் மட்டுமே.

ஜனநாயகம்
ஜனநாயகம்

இப்படி, இந்தியா முழுக்க பெரும் அரசியல் பின்னணியுள்ள வாரிசுகள் மிக எளிதாக அரசியல் படிகளில் ஏறிவிடுகிறார்கள். அந்தக் கட்சியினர் ஏற்றுக்கொள்கின்றனர், மக்களும் ஆதரவு அளிக்கிறார்கள். அதை எப்படி விமர்சிக்க முடியும் என்கிற குரல்களும் வாரிசு அரசியல்குறித்த விவாதங்களின்போது முன்வைக்கப்படும் முக்கியமான கருத்து. ஆனால், பிற தொழில்களில் வாரிசுகள் பலன் பெறுவது பெரும்பாலும் பணம், புகழ் சார்ந்தது. ஆனால் அரசியல், மக்களின் நலன் சார்ந்தது. அசாத்திய அதிகாரங்கள் கொண்டு பல லட்சம் மக்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுக்கும் ஒரு இடத்துக்கு வாரிசு அடையாளங்களைவிட, திறமையான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது அத்தியாவசியம். அதுவே ஜனநாயகத்தின் அடிநாதமும் கூட.

'நெப்போட்டிஸம்' ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கி இந்திய மக்களுக்கு ஆபத்து விளைவிக்ககூடியது. ஜனநாயகத்தின் அடிப்படை என்பது, தங்களின் தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களிடம் வழங்குவதே. திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுப்பதே மக்களின் கடமை. ஆனால், அந்த வேட்பாளர்கள் எல்லாம் வாரிசு எனும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்கள் திறமையை எங்குத் தேடுவது?

விடை தேடுவோம்...

அடுத்த கட்டுரைக்கு