Published:Updated:

தென்காசி, திருநெல்வேலிக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள்... பரபரக்கும் தென்மாவட்ட தி.மு.க!

தி.மு.க - அறிவாலயம்
தி.மு.க - அறிவாலயம்

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில், ஏற்கெனவே இருந்தவர்களோடு சேர்த்து, சில புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருக்கிறது.

திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க செயலாளராக அப்துல் வஹாப் இருக்கிறார். அதுபோல, திருநெல்வேலி மேற்கு மாவட்டத்துக்கு சிவபத்மநாபனும், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்துக்கு ஆவுடையப்பனும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். வருவாய்த் துறைரீதியாக திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, புதிதாக தென்காசி மாவட்டத்தை தமிழக அரசு உருவாக்கியது. இதைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்புரீதியாக தென்காசி மாவட்டத்துக்கு எனத் தனியாக ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை தி.மு.க-வில் வலுப்பெற்றுவந்தது.

சமீபத்தில், தென்மண்டலக் கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசித்தபோது, மாவட்டப் பிரிப்பு தொடர்பாக நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிந்திருக்கிறார். இதன்படி, புதிய மாவட்டச் செயலாளர்களுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வந்துவிடும் என்கிறது அறிவாலய வட்டாரம். இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர் வீதம் மாவட்டங்கள் பிரிக்கப்படவிருப்பதாகக் கூறுகிறார்கள்.

ஆவுடையப்பன்
ஆவுடையப்பன்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளரான ஆவுடையப்பனை நீக்கிவிட்டு, அவர் மகன் பிரபாகரனுக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்படவிருக்கிறதாம். அம்பாசமுத்திரம், ஆலங்குளம் தொகுதிகள் அடங்கிய மாவட்டத்துக்கு பிரபாகரன் பொறுப்பாளராக இருப்பார் என்கிறார்கள். வருவாய்த் துறைரீதியாக ஆலங்குளம் தொகுதி தென்காசி மாவட்டத்திலும், அம்பாசமுத்திரம் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்துக்குள் வந்தாலும், அமைப்புரீதியாக அதை பிரபாகரன் நிர்வகிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்கிறது அறிவாலய வட்டாரம். ஆவுடையப்பனை உயர்மட்டக்குழு உறுப்பினராக நியமிக்கவும் முடிவாகியிருக்கிறது.

இட ஒதுக்கீடு: `நாங்கள் எதிர்க்கட்சி; அரசியல்தான் செய்வோம்!’ - முதல்வருக்கு ஸ்டாலின் பதில்

மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப்பை மாற்றும் திட்டம் ஏதுமில்லை. அவர் கட்டுப்பாட்டின் கீழ், திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிகள் கொண்டுவரப்படவிருக்கின்றன. நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு கிரஹாம் பெல்லின் பெயர் `டிக்’ செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மாவட்டப் பொறுப்பாளர் பதவியை எட்டிப் பிடிக்க திருநெல்வேலி எம்.பி-யான ஞானதிரவியம் கடுமையாக முட்டி மோதுகிறார் என்கிறார்கள்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது திருநெல்வேலி தொகுதியில் சீட் கேட்டு ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலமாக கிரஹாம் பெல் முட்டி மோதினார். ஆனால், ஞானதிரவியத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போதே, `வருத்தப்படாதீங்க. தேர்தலை ஒட்டி மாவட்டங்களை அமைப்புரீதியாகப் பிரிக்க வேண்டியிருக்கும். மாவட்டப் பொறுப்பாளர் பதவி உங்களுக்கு தரப்படும்’ என்று கிரஹாம் பெல்லை செனடாப் சாலை சமாதானப்படுத்தியதாம். இதனடிப்படையில்தான் கிரஹாம் பெல்லின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடையநல்லூர், தென்காசி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக சிவபத்மநாபன் நியமிக்கப்படவிருக்கிறார். தி.மு.க வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியனுடன் அவருக்கு இருக்கும் மோதல், அறிவாலயத்தில் பஞ்சாயத்து கூட்டும் அளவுக்கு சென்றது. `என் தகுதி என்ன... சிவபத்மநாபன் தகுதி என்ன? அவரிடமெல்லாம் என்னால் வேலை பார்க்க முடியாது’ என்று ஸ்டாலினிடமே நேரடியாகச் சீறிவிட்டுப் புறப்பட்டார் அய்யாதுரை பாண்டியன். இதில் கடுப்பான கட்சித் தலைமை, தேர்தல் முடியும் வரை சிவபத்மநாபனை அமைதி காக்கும்படி கூறியிருக்கிறதாம். வரும் சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் ஐடியாவில் அய்யாதுரை பாண்டியன் இருக்கிறார். அதற்காக, இப்போதிருந்தே அந்தத் தொகுதியில் தேர்தல் வேலையையும் ஆரம்பித்துவிட்டார். இந்தச் சூழலில், அந்தத் தொகுதியின் மாவட்டப் பொறுப்பாளராக சிவபத்மநாபனை நியமிக்க அறிவாலயம் முடிவெடுத்திருப்பது தென்காசி அரசியலை தகிக்கவைக்கும் என்கிறார்கள்.

வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தனித் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டப் பொறுப்புக்கு, சிட்டிங் தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமாரின் பெயர் இறுதி செய்யப்பட்டிருக்கிறதாம். ஆக, பிரபாகரன், கிரஹாம் பெல், தனுஷ் எம்.குமார் ஆகியோருக்கு புதிய பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது. அப்துல் வஹாப், சிவபத்மநாபன் ஆகியோர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பு வெளிவந்துவிடும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு