Published:Updated:

`அழகிரி தமிழகத்தின் ஒவைசியா... பின்னணியில் பா.ஜ.க?’ - தனிக்கட்சி தகவலால் தகிக்கும் மதுரை

மு.க.அழகிரி
மு.க.அழகிரி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

வருகின்ற சட்டமன்ற தேரதலுக்குள் அண்ணன் அழகிரி அரசியல் நிலைபாட்டை அறிவிப்பார், அவரை நம்பியுள்ள ஆதரவாளர்கள் நினைத்தது போல் அது இருக்கும்...!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்கவுள்ளார் என்ற தகவலால் அவ்வப்போது காணாமல் போய்விடும் அவர் மீண்டும் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி
ஈ.ஜெ.நந்தகுமார்

வருகின்ற 20 -ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடத்தும் மு.க.அழகிரி, தன் அரசியல் நிலைபாட்டை அப்போது அறிவிப்பார் என்று கிளம்பிய செய்தியால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருகின்ற 21 -ம் தேதி உள்துறை அமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான அமித் ஷா தமிழகம் வரும் நிலையில், அதற்கு முன்தினம் அழகரி ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக வரும் தகவல் பலவித யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

தி.மு.க-விலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 7 வருடங்களுக்கு மேலாகி விட்டது. கருணாநிதி உயிரோடு இருந்தபோதும், மறைந்த பின்பும் மீண்டும் கட்சியில் இணைய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன.

அழகிரி எவ்வளவுதான் இறங்கி வந்தாலும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் விளைவாக கடந்த தேர்தல்களில் தி.மு.க-வுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆனால், அவர் சொன்னது எதுவும் அரசியலில் நடக்கவில்லை. அதனால் அழகிரியின் செல்வாக்கு அவ்வளவுதான் என்ற முடிவுக்கு தி.மு.க-வினர் வந்தனர்.

ஆனால், அவரை நம்பியுள்ள தீவிர ஆதரவாளர்கள், அண்ணன் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பி இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் பா.ஜ.க-விலுள்ள முக்கிய நிர்வாகிகள் அழகிரியை சந்தித்து பேசி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்றும் அதற்கு தங்கள் ஆதரவு இருக்கும் என்றும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி
ஈ.ஜெ.நந்தகுமார்

'அழகிரியை பா.ஜ.க-வில் இணைக்க அழைப்பு விடுக்காமல் தனிக்கட்சி தொடங்க ஏன் ஊக்குவிக்கிறார்கள்' ... என்பதை விசாரித்தபோது பல தகவல்களை தி.மு.க-வினர் கூறுகிறார்கள்.

`இது பா.ஜ.க-வின் அரசியல் தந்திரம். பீகார் தேர்தலை போன்று தி.மு.க-வுக்கு ஒரு ஒவைசியாக அழகிரியை முன்னிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. வருகின்ற தேர்தலில் தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க-வின் நிலையோ மிக மோசமாக உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி தொடர வேண்டும், தி.மு.க ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என நினைக்கும் பா.ஜ.க., அதற்கு தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெறுவதை தடுக்க அழகிரியை கட்சி ஆரம்பிக்க வைத்து, வேட்பாளர்களை நிறுத்தி தி.மு.க வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்.

இதற்காக அழகிரியை கிளப்பி விட்டுள்ளார்கள். இதே போன்ற வாக்கு சிதறடிப்புதான் பீகாரில் நடந்தது. அங்கு ஒவைசியை பா.ஜ.க ஆதரிக்கவில்லை. அதுவே இயல்பாக அமைந்தது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க-வின் வெற்றியை தடுக்க அழகிரியை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு பா.ஜ.க வந்துள்ளது'' என்கின்றனர்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

இந்த நிலையில் அழகிரி கட்சி தொடங்கினால் மகிழ்ச்சி என்று பா.ஜ.க பொதுச்செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அழகிரியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் மண்டலத்தலைவருமான இசக்கிமுத்துவிடம் பேசினோம், "அண்ணன் பா.ஜ.க ஆதரவு நிலை எடுக்கப்போவதாக சொல்வதெல்லாம் பொய். நாங்கள் எப்போதும் கலைஞரின் வழியில் செல்கிறவர்கள். எப்படியும் வருகின்ற சட்டமன்ற தேரதலுக்குள் அண்ணன் அரசியல் நிலைபாட்டை அறிவிப்பார், அவரை நம்பியுள்ள ஆதரவாளர்கள் நினைத்தது போல் அது இருக்கும்'' என்றார்.

இது சம்பந்தமாக கருத்து கேட்க அழகிரியை தொடர்பு கொண்டும் அவர் தொடர்பை ஏற்கவில்லை!

அடுத்த கட்டுரைக்கு