Published:Updated:

`பெயர்ந்த தரைத்தளம்; பள்ளத்தில் விழுந்த தொண்டர்கள்!' - அமைச்சர் செல்லூர் ராஜு நிகழ்ச்சி சலசலப்பு

அமைச்சர் செல்லூர் ராஜு நிகழ்ச்சியில் இடிந்த தரைத்தளம்
அமைச்சர் செல்லூர் ராஜு நிகழ்ச்சியில் இடிந்த தரைத்தளம்

சரியான அடித்தளம் இல்லாமல், கழிவு நீர் குழாய்க்கு மேலே கட்டப்பட்டதால் கூட்டத்தினரின் பாரம் தாங்காமல் தரைத்தளம் இடிந்து பள்ளம் ஏற்பட்டது.

அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்ட நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்ட ரவுண்டானாவின் தரை தளத்தில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில், அங்கு நின்று கொண்டிருந்த அ.தி.மு.கவினர் விழுந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜு நிகழ்ச்சியில் பெயர்ந்து விழுந்த தரைத்தளம்
அமைச்சர் செல்லூர் ராஜு நிகழ்ச்சியில் பெயர்ந்து விழுந்த தரைத்தளம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பல ரவுண்டானாக்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில், தமிழர்களின் பெருமையை எடுத்துச்சொல்லும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் அமைச்சர் செல்லூர்ராஜுவின் வீடு அமைந்துள்ள செல்லூரிலும் ஒரு ரவுண்டானா கட்டப்பட்டுள்ளது. அதில், கபடி வீரர்களின் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த ரவுண்டானாவை அமைச்சர் செல்லூர் ராஜு, மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆய்வு செய்தார்.

அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் செல்லூர் ராஜு, ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை நகரத்தில் பல திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் போக்குவரத்துக்கு உதவும் வகையில் அழகிய வடிவில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் செல்லூரில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கபடி வீரர்கள் அதிகம் உள்ளதால், இந்த ரவுண்டானாவில் கபடி வீரர்களின் சிலை அமைக்கப்பட உள்ளது'' என்று பேசிக்கொண்டிருந்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜு
அமைச்சர் செல்லூர் ராஜு

அந்த நேரம் அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், ரவுண்டானாவின் மீது நின்று கொண்டிருந்தனர். சரியான அடித்தளம் இல்லாமல், கழிவு நீர் குழாய்க்கு மேலே கட்டப்பட்டதால் கூட்டத்தினரின் பாரம் தாங்காமல் தரைத்தளம் இடிந்து பள்ளம் ஏற்பட்டது. இதில் கட்சியினர் உள்ளே விழ, பின்பு அருகில் நின்றவர்கள் அவர்களை கையைப்பிடித்து தூக்கி விட்டனர்.

இச்சம்பவம் அமைச்சருக்கு மட்டுமில்லாமல் மாநகராட்சி அதிகாரிகள், கட்சியினர் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் கட்டப்பட்ட ரவுண்டானா திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்தது. இதில், யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை.

அடுத்த கட்டுரைக்கு