Published:Updated:

'கே.எஸ்.அழகிரிக்கு எதிராக புதிய அணி?' - காங்கிரஸில் வலுக்கும் உட்கட்சி பூசல்!

கருத்தரங்கில் பேசிய கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக புதிய அணி உருவாகியிருக்கிறது. இந்திராகாந்திக்கு தலைவர்கள் தனித்தனியாக மரியாதை செலுத்தியதையடுத்து, அந்த கட்சியில் நீடித்து வரும் உட்கட்சி பூசல் புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது.

'கே.எஸ்.அழகிரிக்கு எதிராக புதிய அணி?' - காங்கிரஸில் வலுக்கும் உட்கட்சி பூசல்!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக புதிய அணி உருவாகியிருக்கிறது. இந்திராகாந்திக்கு தலைவர்கள் தனித்தனியாக மரியாதை செலுத்தியதையடுத்து, அந்த கட்சியில் நீடித்து வரும் உட்கட்சி பூசல் புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது.

Published:Updated:
கருத்தரங்கில் பேசிய கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பிரச்னைக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. இதனால் சத்தியமூர்த்தி பவனில் அவ்வப்போது ஆக்க்ஷன் காட்சிகளைப் பார்க்க முடியும். ஆனால் 2019-ம் ஆண்டு தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்ட பிறகு கோஷ்டி பூசல் சற்று குறைந்தது. இதனால் அவருக்கு கட்சியினர் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவர் என்ற 'இமேஜ்' உருவானது.

இதனைத் தன்னை காக்கும் அரணாக அழகிரி பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 15-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரான ரஞ்சன் குமார் குழுவினருக்கும், ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் படுகாயமடைந்தனர்.

சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்
சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

இது சாதாரண நிர்வாகிகள் நியமன சண்டை இல்லை. கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் விரைவில் முடியவிருப்பதால் அதை பிடிக்க ரூபி மனோகரன் தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், மறுபுறம் கே.எஸ்.அழகிரி பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாததாலும் தான் இந்த மோதல் ஏற்பட்டதாக கதர் சட்டைகள் பேசி வருகிறார்கள்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பிரச்னையாக கே.எஸ்.அழகிரிக்கு எதிராக புதிய அணி உருவாகியிருக்கிறது. நவம்பர் 19-ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு அழகிரி கிளம்பியதும், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் கூட்டாக வந்து இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு சத்தியமூர்த்தி பவனில், 'இந்தியாவின் வளர்ச்சியில் இந்திரா காந்தியின் பங்கு' என்ற தலைப்பில் கே.எஸ்.அழகிரி தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில், செல்வப்பெருந்தகை குழுவினர் பங்கேற்கவில்லை. அழைப்பிதழில் அவர்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி
பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி

முன்னதாக கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், "கட்சிக்குள் கைகலப்பு நடந்தது உட்கட்சி விவகாரம்" என்று முடித்துக்கொண்டார்.

பின்னர் பேட்டியளித்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை, "கட்சிக்குள் உட்கட்சி பூசல் எதுவும் கிடையாது. நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்சி. இந்த கட்சியில் ரெளடிகள் கிடையாது. ரெளடிகளை வைத்து கட்சி நடத்துவது பாஜக. வழக்குகள் இருப்பது தான், பாஜக-வில் இருப்பதற்குக் குறைந்தபட்சம் தகுதி. ஆனால், ஒரு புதிய கலாசாரம் இரண்டு நாட்களுக்குமுன் காங்கிரஸில் தலை எடுத்தது. அதற்குக் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

பேட்டியளித்த செல்வப்பெருந்தகை குழுவினர்
பேட்டியளித்த செல்வப்பெருந்தகை குழுவினர்

பிறகு தலைவர்கள் தனித்தனியாக மரியாதை செலுத்தியது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், "கே.எஸ்.அழகிரிக்கு எதிராக செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு புதிய அணி உருவாகியிருக்கிறது. இவர்கள் ரூபி மனோகரனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தலைவர் பதவியைப் பிடிப்பதற்குத் தான் தற்போது இந்த அணி உருவாகியிருக்கிறது.

இந்த அணி அழகிரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் கருத்தரங்கைப் புறக்கணித்து விட்டது. இதை மறைப்பதற்காக அழகிரி தனது ஆதரவாளர்களிடம் கூறி 200க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து 'கெத்து' காட்டியிருக்கிறார். இவ்வளவு நாள்களாக எதிர்ப்பு இல்லை என்று இருந்தது. தற்போது ரஞ்சன் குமாருக்கு, அழகிரி ஆதரவு தெரிவிப்பதால் தான் பிரச்னை பெரிதானது.

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

அதாவது அழகிரி மாவட்ட தலைவர்களை கட்டாயப்படுத்தி ரூபி மனோகரனுக்கு எதிராகக் கையெழுத்து வாங்கினார். அங்கு வந்தவர்கள் அனைவரும் இவரின் ஆதரவாளர்கள் மட்டுமே அல்ல. வெவ்வேறு தலைவர்களின் ஆதரவாளர்கள். அவர்களை கட்டாயப்படுத்தியதால் தான் மற்ற தலைவர்கள் கொதித்தெழுத்திருக்கிறார்கள். முன்னதாக ரூபி மனோகரன் மற்றும் ரஞ்சன் குமார் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கூறினோம். ஆனால் அழகிரி மறுத்துவிட்டார். மற்ற தலைவர்களின் ஆதரவாளர்களை கட்டாயப்படுத்தியதால் தற்போது சிக்கலில் சிக்கியிருக்கிறார்" என்றார்.