Published:Updated:

`40 : 60 ஃபார்முலா; ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்!'- மகாராஷ்டிர அரசியலில் என்ன நடக்கிறது?

சரத் பவார் புதிய கூட்டணி அரசு குறித்து மழுப்பல் பதில் கூறினாலும் இந்த விஷயத்தில் இன்னொரு ட்விஸ்ட் நடந்துள்ளது.

சோனியா - பவார்- தாக்கரே
சோனியா - பவார்- தாக்கரே

ஒரே கொள்கை , ஒரே சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளான பா.ஜ.க-வும் சிவசேனாவும் இரண்டாவது முறையாக பகையாளிகளாக மாறியுள்ளன. இதன்விளைவு மாநிலத்தில் 15 நாள்களுக்கு மேலாக அரசியல் சாசனப்படி ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட எந்தக் கட்சியும் ஆட்சியமைக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின்போது சிவசேனாவுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் வெற்றி பெற்றால் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் அம்மாநிலத்தை ஆட்சி செய்ய வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மகாராஷ்டிர அரசியல்
மகாராஷ்டிர அரசியல்

ஒப்பந்தத்தின்படி தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்த சிவசேனா ஒருகட்டத்தில் பா.ஜ.க கூட்டணியை முறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் காங்கிரஸுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. பிடிவாதம், சர்ச்சை கருத்துகள், கூட்டணி மாற்றம் தினம் ஒரு திருப்பமாக சென்றுகொண்டிருக்கின்ற நிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சோனியா காந்தியைச் சந்தித்து மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.

`சிவசேனா முதல்வர்; என்.சி.பி துணை முதல்வர்!' - மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்

இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிவசேனாவை ஆதரிக்க வேண்டும் என்றால் அக்கட்சி தனது கடுமையான இந்துத்துவ நிலைப்பாட்டை கைவிட வேண்டும் எனவும் பல பிரச்னைகளில் மதச்சார்பற்ற நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால் 50 நிமிடங்கள் வரை நடந்த இந்தச் சந்திப்பின் முடிவில் இதை மறுத்த சரத் பவார், ``அரசாங்கம் அமைப்பது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. தவறான யூகங்களைப் பேசுவது ஒத்த எண்ணம் கொண்ட எங்கள் நட்புக் கட்சிகளை வருத்தப்படுத்துகிறது" எனப் பேசினார்.

சரத் பவார்
சரத் பவார்

சரத் பவார் புதிய கூட்டணி அரசு குறித்து மழுப்பல் பதில் கூறினாலும் இந்த விஷயத்தில் இன்னொரு ட்விஸ்ட் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, ``நான் அமித் பாயிடம் (அமித் ஷா) மத்தியஸ்தம் செய்தால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறினேன். அதற்கு அவர், 'கவலைப்பட வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும். பா.ஜ.கவும் சிவசேனாவும் இணைந்து அரசாங்கத்தை அமைப்பார்கள்' எனப் பதிலளித்தார்'' என்று கூறினார். இப்படிக் கூறிய மறுநாளே இன்னொரு தகவலையும் தெரிவித்தார்.

`அமித்ஷா ஒப்புக்கொண்டார்; தாக்கரே உடைத்தார்!’- மகாராஷ்ட்ரா குழப்பத்துக்கு காரணம் சொல்லும் காங்கிரஸ்

``நான் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துடன் இக்கட்சிகள் இடையே சமரசம் ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து பேசினேன். பா.ஜ.க மூன்று ஆண்டுகளும், சிவசேனா இரண்டு ஆண்டுகளும் ஆட்சியைப் பகிர்ந்துகொள்ளலாம் என்ற யோசனையைச் சொன்னேன். அதற்கு பா.ஜ.க ஒப்புக்கொண்டால், சிவசேனா இதைப் பற்றி ஆலோசிக்கும் என சஞ்சய் ராவத் பதில் கூறியுள்ளார்.

ராம்தாஸ் அத்வாலே
ராம்தாஸ் அத்வாலே

சிவசேனா தனது அதிகாரப் பகிர்வு கோரிக்கையை 40-60 ஆகக் குறைக்கத் தயாராக இருக்கிறது. இந்த விஷயத்தை பா.ஜ.க தலைமைக்கு எடுத்துச் சென்று அவர்களுடன் ஆலோசிப்பேன்" எனக் கூறியுள்ளார். இப்படி தொடர் திருப்பங்களால் மகாராஷ்டிர அரசியல் நிலைதடுமாறி கொண்டிருக்கிறது.

Vikatan