Published:Updated:

“கூட்டணி எதற்கு... பதவி யாருக்கு?”- அடுத்த அதகளத்திற்குத் தயாராகும் அறிவாலயம்!

அப்போது மூத்த தலைவர் ஒருவர், “கூட்டணிக் கட்சிகளையும் இந்தப் போராட்டத்தில் அழைக்கலாமே...” என்று கேட்டதும், அருகில் இருந்த மற்றொரு முன்னாள் அமைச்சர், "அவர்களால் நமக்கு என்ன பயன்?" என்று கேட்டு அதிரவைத்துள்ளார்.

DMK meeting
DMK meeting

“அன்பழகன் உடல் நலிவுற்று இருப்பதால், அவர் பணிகளை மேற்கொள்ள புதிய நிர்வாகி அவசியம். தலைவர் உடல் நலிவுற்றிருந்தபோது நீங்கள் செயல் தலைவராக இல்லையா?” என்று ஸ்டாலினிடம் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள், தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள்.

MK stalin
MK stalin

அண்ணா அறிவாலயத்தில், கடந்த திங்கள்கிழமை (நேற்று) தி.மு.க-வின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி-க்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எதற்காக இந்தக் கூட்டம் என்பதே கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கும் ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால், இந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றுவது தொடர்பாக இந்தக் கூட்டம் என்று அறிவாலயத்திற்குள் என்ட்ரி கொடுத்த பிறகுதான் பலருக்கும் தெரிந்துள்ளது.

இதுதொடர்பாக பேசியவர்கள், ``கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது மூத்த தலைவர் ஒருவர், “கூட்டணிக் கட்சிகளையும் இந்தப் போராட்டத்தில் அழைக்கலாமே...” என்று கேட்டதும், அருகில் இருந்த மற்றொரு முன்னாள் அமைச்சர், "அவர்களால் நமக்கு என்ன பயன்? கூட்டம் நடத்துவதும் நம் செலவு, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு செய்வதும் நம் பொறுப்பு, அவர்களால் நமக்கு என்ன பலன் கிடைத்தது? ஆட்சியைக்கூட நம்மால் பிடிக்க முடியவில்லை” என்று கடும் டென்ஷனில் சொல்லியுள்ளார். அப்போது, "உங்கள் ஆதங்கம் புரிகிறது. சரி, இப்போது அமைதியாக போராட்டத்தை நடத்தி முடிக்கலாம்” என்று ஸ்டாலின் அனைவரையும் அமைதிப்படுத்தினார்'.

MK stalin
MK stalin

இதற்கிடையில், கடந்த சில நாள்களாகவே தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்கள், அன்பழகன் உடல்நிலை பற்றியும் பொதுச்செயலாளருக்கு மாற்று குறித்தும் பேசிவந்துள்ளார்கள். தற்போது, தி.மு.க-வின் பொருளாளராக இருக்கும் துரைமுருகன்தான் சீனியர் நபராக இருக்கிறார். அவருக்கும் கட்சியின் அதிகாரம் மிக்க பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியின்மீது விருப்பமுள்ளது. ஆனால், 'அன்பழகனை எடுத்துவிட்டு அங்கு யாரும் பதவியேற்க வேண்டாம்' என்று ஸ்டாலின் நினைக்கிறார். எனவே, இணை பொதுச்செயலாளர் என்கிற புதிய பதவியை உருவாக்கலாம் என்று தி.மு.க-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஸ்டாலினுக்கு ஆலோசனை கூறியுள்ளனர். உதயநிதி தரப்பும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

இணை பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு துரைமுருகனைக் கொண்டுவந்தால், பொருளாளர் பதவியை இப்போது அறிவிக்கப்படாத கட்சியின் பொருளாளராகச் செயல்படும் எ.வ.வேலுவிற்கு வழங்கலாம் என்று ஒரு டீம் கூறியுள்ளது. ஆனால், சீனியரான டி.ஆர்.பாலுவுக்கு பொருளாளர் பதவியைக் கொடுத்துவிட்டு, முதன்மைச் செயலாளர் பதவியை வேலுக்கு வழங்கலாம் என்று ஒரு சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.

stalin - duraimurugan - d.r.balu
stalin - duraimurugan - d.r.balu

விரைவில் தி.மு.க-வின் பொதுக்குழுவைக் கூட்ட உள்ளார்கள். அதற்கு முன்பாக, இந்தப் பதவிகளுக்கான பகிர்ந்தளிப்பு வேலைகளை தி.மு.க தலைவர் செய்து முடித்துவிட உள்ளார். அதே நேரம், துரைமுருகன் தனது மகன் விஷயத்தில் தலைமையிடம் கேட்காமலேயே சில முடிவுகளை எடுத்தது, ஸ்டாலினுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைச் சாதகமாக்கி, துரைமுருகனுக்கு எதிராகச் சிலர் பற்றவைக்கும் வேலையையும் செய்துவருகிறார்கள். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், போராட்ட அறிவிப்பைவேறு தி.மு.க வெளியிட்டுள்ளது. விரைவில், அந்தக் கட்சிக்குள் நிர்வாகரீதியான மாற்றம் வரப்போகிறது'' என்கிறார்கள்.