Published:Updated:

`விசாரணையை ஏன் தொடரக் கூடாது?' - ராஜேந்திர பாலாஜி வழக்கில் நீதிமன்றம் புது உத்தரவு!

ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி ( ஆர்.எம்.முத்துராஜ் )

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில், 'லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல்கட்ட விசாரணை அடிப்படையில் வழக்கை முடித்துவிடலாமா. விசாரணையை ஏன் தொடரக் கூடாது என்று, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

மதுரையைச் சேர்ந்த மகேந்திரன், ''அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இப்புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லாததால் விசாரணை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் முன்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள் 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருத்தங்கல் பேரூராட்சி துணைத் தலைவராக இருந்த காலம் முதல் தற்போது வரை அவரின் வருமானம் மற்றும் சொத்துகள் பற்றி விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.'

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

6 மாதங்களுக்குப் பின், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தமிழக பொதுத்துறை செயலர் சார்பில் சீலிட்ட கவரில் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யத் தமிழக பொதுத்துறைச் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், 'குறிப்பிட்ட காலத்தில், அவருடைய சொத்து மதிப்பு குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அப்போது நீதிபதிகள், ''முதல் கட்ட விசாரணை அடிப்படையில் வழக்கை முடித்துவிடலாமா. விசாரணையை ஏன் மேற்கொண்டு தொடரக் கூடாது'' என்று கேள்வி எழுப்பியவர்கள், வழக்கை ஜனவரி 23-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். இதன் மூலம் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு முடிவு தெரியாமல் முடியாது என்று சொல்லப்படுகிறது.