Published:Updated:

நேற்று எம்.ஆர்.வி., எஸ்.பி.வி., நாளை சி.வி.பி-யா ?! - திமுக அரசின் அடுத்த மூவ்?!

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

தி.மு.க அமைப்புச் செயலாளர் பாரதியும், அறப்போர் இயக்கமும் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, நேற்று எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சென்னை, கோவை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. சென்னை எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் ஒருநாள் முழுவதும் சிறைப் பிடிக்கப்பட்ட வேலுமணியிடம் துருவித் துருவி கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். `ரெய்டு, விசாரணை மூலம் உடனடியாக எதுவும் கிட்டவில்லை என்றாலும், தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்கிறார்கள் அதிகாரிகள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அதிகாரிகள், ``முதலில் சின்ன மீன்களைப் பிடிக்கலாம் என்றுதான் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடமிருந்து ரெய்டைத் தொடரச் சொன்னது ஆட்சி மேலிடம். ஆகஸ்ட் 7-ம் தேதி `என்னைத் தொட முடியாது... சவால்விடும் வேலுமணி’ என்ற தலைப்புடன் ஜூனியர் விகடன் இதழ் வெளியானதும் இதற்கு மேலும் அவரை விட்டுவைக்க வேண்டாம் என்று உடனடியாக ஆக்‌ஷனில் இறங்கச் சொன்னார்கள். இரு தினங்கள் வேலுமணி நெட்வொர்க்கை ஆராய்ந்துவிட்டு, 10-ம் தேதி களத்தில் இறங்கினோம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கைவைத்ததற்கே பல முன்னாள் மாண்புமிகுக்கள் ஆடிப்போய்விட்டனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கே.டி.ராஜேந்திர பாலாஜி
எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கே.டி.ராஜேந்திர பாலாஜி

அடுத்து, கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வழக்கு மறுவிசாரணை நடத்த அனுமதி கிடைத்தது. கே.டி.ஆர்-தான் அடுத்த குறி என அனைவரும் நினைத்திருந்தனர். அவரே அப்படி நினைத்துத்தான் டெல்லிக்குச் சென்று சரண்டர் ஆனார். ஆனால், நேரடியாக வேலுமணி மீதே கைவைத்துவிட்டதால், அடுத்தகட்டத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் தி.மு.க மேலிடத்துக்குத் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல, ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டு, அந்த வழக்குகளை விசாரிக்கவே தனி நீதிமன்றங்களை அமைத்து, ஒரு வருடத்துக்குள் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் ஆணை. அதற்கேற்ப அடுத்து யாரைக் கைகாட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்.

ரெய்டு பின்னணி: ``இரவில் வந்த போன்கால்; பரபரப்பான வேலுமணி!”
சி.விஜயபாஸ்கர் - பி.தங்கமணி
சி.விஜயபாஸ்கர் - பி.தங்கமணி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க அரசின் அடுத்த மூவ் என்ன என்பது குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம். ``எடப்பாடி முதல்வராகப் பொறுப்பேற்ற 2017, பிப்ரவரி முதல் நான்கு ஆண்டுகள் அவருடைய ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்பது மக்களுக்கே தெரியும். எனினும், `மிஸ்டர் கிளீன்’ என்பதுபோல முன்னாள் முதல்வர்களும், முன்னாள் அமைச்சர்களும் தங்களை வெளிக்காட்டிக்கொண்டனர். தற்போது தி.மு.க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மூலம் அவர்களது இமேஜ் `கிளீன் போல்ட்’ ஆகிவிட்டது. அடுத்தகட்ட மூவ் என்னவென்பது குறித்து ரகசியம் காக்கப்படுகிறது. எனினும், ஏற்கெனவே ஐ.டி ரெய்டில் சிக்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான் குறி எனத் தெரிகிறது. ஏனெனில், கொங்கு மண்டலத்தில் இரு முன்னாள் அமைச்சர்கள் மீது கைவைத்தாகிவிட்டது. தொடர்ந்து அதே பகுதியைக் குறிவைத்தால் சரிவராது என்பதால், டெல்டா பக்கம் வருவார்கள் என்று தோன்றுகிறது. கொங்குப் பக்கமே அடுத்த மூவ் இருக்கும் என்றால் அது பி.தங்கமணியாக இருக்க வாய்ப்பிருக்கிறது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு