Published:Updated:

`காங்கிரஸ் தலைவரின் பேத்தியை மணக்கும் குமாரசாமி மகன்! -திருமணத்தை விஞ்சிய நிச்சயதார்த்த விருந்து

நிகில் - ரேவதி
நிகில் - ரேவதி

2016-ம் ஆண்டு இவர் `ஜாக்குவார்’ படம் மூலம் சினிமா துறைக்கு வந்தவர். இதன்பின் தந்தையின் தயாரிப்பிலேயே `சீதா ராமா கல்யாணா' என்ற படத்திலும் நடித்தார்.

அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வரும் காலம் மாறிப்போய், இப்போது அவர்கள் சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர். அந்தவகையில் சில மாநிலங்களில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் சினிமாவில் கோலாச்சி வருகின்றனர். தமிழகத்தில் இதற்கு உதயநிதி ஸ்டாலினை உதாரணமாகச் சொல்லலாம். அவர் அரசியலில் காலடி எடுத்துவைக்கும் முன்பே தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்தார்.

மகனுடன் குமாரசாமி
மகனுடன் குமாரசாமி

உதயநிதியைப் போலவே கர்நாடகாவில் அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியும் சினிமா நடிகர். 2016-ம் ஆண்டு இவர் `ஜாக்குவார்’ படம் மூலம் சினிமா துறைக்கு வந்தவர். இதன்பின் தந்தையின் தயாரிப்பிலேயே `சீதா ராமா கல்யாணா' என்ற படத்திலும் நடித்தார். குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு நிகில் அரசியலிலும் நுழைந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடகாவின் முக்கியத் தொகுதியான மாண்டியா தொகுதியில் ஜே.டி.எஸ் சார்பில் களமிறங்கினார். அவரின் எதிர் வேட்பாளராக களமிறங்கியவர் கன்னட சூப்பர் ஸ்டார் அம்பரீஷின் மனைவி சுமலதா. காங்கிரஸ் உடன் ஏற்பட்ட மோதலில் சுயேச்சையாகக் களமிறங்கிய சுமலதாவுக்கு மொத்த கன்னட திரையுலகமும் ஆதரவு தர நிகில் மண்ணைக் கவ்வினார்.

தேவேகவுடாவுடன் நிகில்
தேவேகவுடாவுடன் நிகில்

தேர்தலில் தோல்வியுற்றாலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் அவருக்கு முக்கியமான பதவி கொடுக்கப்பட்டது. ஜே.டி.எஸ்-ஸின் இளைஞரணித் தலைவராக நிகிலை அவரின் தாத்தாவும் கட்சித் தலைவருமான தேவேகவுடா நியமித்தார். இதன்பின் அரசியல், சினிமா என்று மாறி மாறி இயங்கி வரும் நிகில் தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

ஆம்.. அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ரேவதி என்பவருடன் அவருக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் எடியூரப்பா, டி.கே.சிவகுமார், பரமேஸ்வரா என்று கர்நாடக அரசியலின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நிகில் - ரேவதி
நிகில் - ரேவதி

இதற்காக, திருமணத்தை மிஞ்சும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு தடபுடல் விருந்து நடந்து வருகிறது. சுமார் 6,000 பேர் வரை இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். விருந்தினர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

தனது சொந்தத் தொகுதியான ராமநகராவில் திருமணத்தை நடத்தவிருப்பதாக குமாரசாமி அறிவித்துள்ளார். ``ஹாசன் எனது பிறப்பிடம் என்றாலும், ராமநகரா எனக்கு அரசியல் பிறப்பைக் கொடுத்த இடம். நிகிலின் திருமணம் எனது குடும்பத்தில் நடக்கும் ஒரே ஒரு நல்ல விழா. இந்த விழாவில் ராமநகரா மற்றும் மாண்டியா மக்களை அழைத்து விருந்தளிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக அங்கே நடத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

நிகில் - ரேவதி
நிகில் - ரேவதி

எது எப்படியோ, அரசியலில் காங்கிரஸ், ஜே.டி.எஸ்ஸும் பிரிந்துவிட்டாலும், தற்போது இந்தத் திருமணம் மூலம் இரு கட்சியும் உறவினர்களாக மாறியுள்ளார் என்கின்றனர் கர்நாடக மக்கள்.

ஆம்.. கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் வீட்டு வசதி அமைச்சருமான கிருஷ்ணப்பாவின் பேத்திதான் மணமகள் ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு