ஆளுங்கட்சியான தி.மு.க-வில் தற்போது உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கட்சிப் பதவிகளுக்கு விருப்பம் தெரிவித்த உறுப்பினர்கள் வேட்புமனுத் தாக்கலில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர தி.மு.க கிளைக் கழகத்துக்கான உட்கட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது.

இதனால், கூடலூர் நகர தி.மு.க அலுவலகத்தில் கட்சியினர் கூட்டம் அலைமோதியிருந்தது. அப்போது திடீரென, கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியிருக்கிறது. வாக்குவாதத்தில் தொடங்கி கைகலப்பில் முடிந்திருக்கிறது வேட்புமனுத் தாக்கல். திடீரென தி.மு.க அலுவலகத்தில் இருந்து வரும் கூச்சலைக் கேட்ட மார்கெட் வணிகர்கள் அங்கு சென்று கைகலப்பைத் தடுத்திருக்கிறார்கள். வணிகர்களும், கட்சி நிர்வாகிகள் சிலரும் பஞ்சாயத்து பேசி சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த கைகலப்புக் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், ``வேட்புமனுக்களைப் பெறுவதை கட்சி உறுப்பினர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். அதற்கு நகரச் செயலாளர் ராஜேந்திரன் வீடியோ எடுக்க வேண்டாம் என்று எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதை வீடியோ எடுத்தால் என்ன தவறு என தி.மு.க கவுன்சிலர் சத்தியன், சந்தானம் ஆகிய இருவரும் கேள்வி எழுப்பினர். இது வாக்குவதாமாக மாறி கடைசியில் கைகலப்பில் முடிந்தது. ஆனால், இது வீடியோ எடுத்ததால் வந்தப் பிரச்னை இல்லை.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தலைமைக்கு எதிராக சில நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்தனர். இதனால் கோஷ்டி மோதல் இருந்து வந்தது. எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்ற நிலை இருந்தது. அது தற்போது வீடியோ ரூபத்தில் வெடித்திருக்கிறது. தலைமை தலையிட்டு நீலகிரி தி.மு.க-வில் கோஷ்டி பூசலைத் தடுக்காவிட்டால் கட்சிக்குத் தான் பின்னடைவு ஏற்படும்" என்றார்.