Published:Updated:

ஊரடங்கில் தலைகாட்டவில்லை; கேள்வியெழுப்பிய நீலகிரி மக்கள்! - 80 டன் அரிசியை அனுப்பிய ஆ.ராசா

நிவாரண உதவி
நிவாரண உதவி

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 80 டன் அரிசியை நீலகிரி எம்.பி ஆ. ராசா வழங்கியிருக்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போதுவரை 14 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 9 பேர் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். ஒரு பெண் உட்பட 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இத்தகைய அசாதாரண சூழலில் அரசும், அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.

ஆ.ராசா
ஆ.ராசா

மலை மாவட்டமான நீலகிரியிலும் பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள பழங்குடிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய உதவிகள் கிடைக்காத நிலை இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

`அந்த 12 பேரை தமிழகத்துக்குள் அனுமதித்திருக்கக் கூடாது!’- ஊட்டியில் ஆ.ராசா ஆவேசம்

நீலகிரி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் புத்திசந்திரன், தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், கூடலூர் தி.மு.க எம்.எல்.ஏ திராவிட மணி, ஊட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ கணேஷ் ஆகியோர் மக்களைச் சந்தித்து, மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.

நிவாரண உதவி
நிவாரண உதவி

நீலகிரியைப் பொறுத்தவரை தி.மு.க-வைவிட அ.தி.மு.க நிர்வாகிகள் களமிறங்கி வேலை செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றுவருவதாக தி.மு.க நிர்வாகிகளே புலம்பித் தீர்க்கின்றனர். இதற்கு ஏற்றாற்போல் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் ஊரடங்கால் டெல்லியில் இருந்தார்.

தற்போதுவரை தொகுதிப் பக்கம் அவர் எட்டிப் பார்க்கவில்லை. இரண்டாவது முறையாக நீலகிரி எம்.பி-யாக இருந்தும் மக்களுக்கு உதவாதது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்திவந்தது. இங்கிருந்து கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கையால் தற்போது நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு 80 டன் அரிசியை வழங்கியுள்ளார்.

ஆ.ராசா
ஆ.ராசா

இதுகுறித்து நீலகிரி தி.மு.க நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில் ``கடந்த 2009-ல் ஏற்பட்ட பெருமழை வெள்ள சேதத்தில் ராசா வழங்கிய நிவாரணத்தையும் மீட்புப் பணியையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. `இந்த ஊரடங்கிலும் ராசா நம்மைக் கைவிட மாட்டார்' என ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் நம்பியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மாவட்டச் செயலாளர் முபாரக் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் இடையே நிலவும் கோஷ்டி மோதல் அனைவரும் அறிந்தது. மக்கள் எங்களிடம், ` ராசா எங்கே?' எனக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இந்தநிலையில், எம்.பி ராசா சார்பில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு 80 டன் அரிசியை வழங்கவுள்ளார்.

ஊரடங்கில் தலைகாட்டவில்லை; கேள்வியெழுப்பிய நீலகிரி மக்கள்! - 80 டன் அரிசியை அனுப்பிய ஆ.ராசா

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு தலா 10 டன் வீதம் 30 டன் அரிசி நேற்று வந்து சேர்ந்தது. இதை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட நிர்வாகிகள் மூலம் வழங்கவுள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு