Published:Updated:

மிரட்டப்படுகிறாரா நீலகிரி கலெக்டர்? - நெருக்கும் ஆளுங்கட்சியினர்!

2009-லிருந்தே யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு வழக்கு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலிருந்து வந்த ஓர் உத்தரவு, சூழலியல் ஆர்வலர்கள், வன உயிர்கள் பாதுகாப்பில் அக்கறை உள்ளோரிடையே சூடான விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. அந்த உத்தரவில், யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முனைப்பு காட்டிவந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை, பணியிட மாற்றம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதேசமயம், இன்னசென்ட் திவ்யாவை நீலகிரியிருந்து மாற்றுவதற்கு நடக்கும் காய்நகர்த்தல்களில், ஆளும் தரப்பின் பலமான மிரட்டலும், ரிசார்ட் அதிபர்களின் சதுரங்க வேட்டையும் மிகுந்திருப்பதாக அதிரவைக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

ரிசார்ட்டுகளுக்கு சீல்... அதிரடித்த ஆட்சியர்!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தின் 113-வது ஆட்சியராகவும், ஐந்தாவது பெண் கலெக்டராகவும் ஜூலை, 2017-ல் பொறுப்பேற்றார் இன்னசென்ட் திவ்யா. ஆட்சியராகப் பொறுப்பேற்றதும் நீலகிரியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், இரவு பகலாக மலைகளைக் குடைந்துவந்த பொக்லைன் இயந்திரங்களை இயக்கவும் தடைவிதித்து அதிரடித்தார். காட்டுமரக் கொள்ளைக்கு ‘செக்’ வைத்தது, பிளாஸ்டிக் தடையைக் கடுமையாக்கியது என இன்னசென்ட் திவ்யாவின் அக்கறையான நிர்வாகச் செயல்பாடுகள் நீலகிரி மாவட்ட மக்களிடம் வரவேற்பைப் பெற்றன. ஆனால், வரைமுறையில்லாமல் கட்டப்பட்டுவந்த ரிசார்ட்டுகளுக்குக் கடிவாளம் போடும் வகையில், அவற்றுக்கான அனுமதியை அவர் கடுமையாக்கியதை ரிசார்ட் அதிபர்கள் தரப்பு ரசிக்கவில்லை.

இந்தச் சூழலில்தான், சீகூர் யானைகள் வழித்தடத்தில் விதிமுறைகளை மீறி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் 39 ரிசார்ட்டுகளுக்கு, முதல் கட்டமாக சீல் வைக்க உச்ச நீதிமன்றம் 2018-ல் உத்தரவு பிறப்பித்தது. அதை அப்படியே அமல்படுத்தினார் இன்னசென்ட் திவ்யா. அதோடு, யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலிகளை அகற்றவும் செய்தார். திவ்யாவின் நிர்வாக நடவடிக்கைகள், அன்றைய ஆளும் தரப்புக்குக் குடைச்சலாக இருந்தாலும், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்திருந்த ‘யானைகள் வழித்தடப் பாதுகாப்பு’ தொடர்பான வழக்கு ஒன்றில், ஆட்சியர் இடமாற்றத்துக்குத் தடைவிதித்திருந்ததன் காரணமாக, அவரை அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசால் மாற்ற முடியவில்லை. மற்றொரு பக்கம், ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில், சீகூர் பீடபூமி யானைகள் வழித்தடத்தின் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள கட்டடங்கள் குறித்த ஆய்வுகள் படபடத்தன. இந்தக் குழுவின் விசாரணைக்கு, நீலகிரி ஆட்சியர் என்கிற வகையில் தொடர்ந்து உதவிவந்தார் இன்னசென்ட் திவ்யா.

மிரட்டப்படுகிறாரா நீலகிரி கலெக்டர்? - நெருக்கும் ஆளுங்கட்சியினர்!

ஏன் திவ்யாவை மாற்றத் துடிக்கிறது அரசு?

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், நிர்வாகக் காரணங்களுக்காக இன்னசென்ட் திவ்யாவைப் பணியிடமாற்றம் செய்வதற்கு அனுமதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. ‘யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, முழுமையாகப் பணிகள் நிறைவடையாத நிலையில், அதில் பல பூதாகரப் பிரச்னைகள் எழுந்துவரும் வேளையில், தமிழக அரசு ஏன் அவசர அவசரமாக இன்னசென்ட் திவ்யாவைப் பணியிட மாற்றம் செய்யத் துடிக்கிறது... அதுவும் நீதிமன்றப் படிவரை ஏறிச் சென்று மாற்றவேண்டிய அவசியம் என்ன?’ என்று அப்போதே சந்தேகக் கேள்விகள் எழுந்தன. இந்த இடைக்கால மனு, நவம்பர் 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘இன்னசென்ட் திவ்யாவைப் பணியிட மாறுதல் செய்ய எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று உச்ச நீதிமன்றத்தில் திடீர் பல்டி அடித்தார் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன். இதனடிப்படையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘நீலகிரி ஆட்சியரை நிர்வாகக் காரணங்களுக்காகப் பணியிட மாற்றம் செய்யலாம்’ எனத் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

யானைகள் வழித்தடம் தொடர்பாக விசாரணைக்குழு ஆய்ந்தறிந்துவருகிறது. ரிசார்ட் உரிமையாளர்கள் பலரும் இன்னசென்ட் திவ்யாவுக்கு எதிராகக் காய்நகர்த்திவருகிறார்கள். நீதிமன்றமோ அவரை மாற்றிக்கொள்ள அனுமதியளித்துவிட்டது. ‘இன்னசென்ட் திவ்யாவை ஏன் மாற்றத் துடிக்கிறார்கள்... அதன் பின்னணியில் என்ன நடக்கிறது?’ என்பதை அறியக் களமிறங்கினோம். கிடைத்த தகவல்கள் எல்லாம் ‘பகீர்’ ரகம்!

“வரைபடத்தை மாத்துங்க...” மிரட்டிய தொழிலதிபர்!

இன்னசென்ட் திவ்யாவுடன் பணிபுரியும் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசினார்... “2009-லிருந்தே யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு வழக்கு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முக்கிய கட்சிகளைச் சேர்ந்தவர்களின் நண்பர்கள், உறவினர்கள், சினிமா நடிகர்கள், பணக்காரர்கள் எனப் பலரின் காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள் மசினகுடி ஏரியாவில் இருக்கின்றன. இப்படி அமைந்துள்ள ரிசார்ட்டுகளில் பலவும், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, மன்னர் பெயர்கொண்ட நடிகர், ‘கஜானா’ அமைச்சருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஆகியோரின் ரிசார்ட்டுகள் யானை வழித்தடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் நினைத்தால், அந்தக் கட்டடங்கள் ‘யானை காரிடார் மேப்’பில் இல்லை என்று விசாரணைக்குழுவிடம் சொல்லலாம். இதன் மூலமாக, அந்தச் சட்டவிரோதக் கட்டடங்கள் இடிபடுவதிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அந்தத் தொழிலதிபர், தன்னுடைய மசினகுடி ரிசார்ட்டை காப்பாற்றிக்கொள்வதற்காக ஆட்சியரிடம் டீல் பேசிப் பார்த்தார். அதற்கு ஆட்சியர் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில், ‘பல கோடி ரூபாய் போட்டுக் கட்டியிருக்கேன். நீங்க இடிச்சுட்டுப் போறதுக்காக நான் பில்டிங் கட்டலை. ஒழுங்கா வரைபடத்தை மாத்துங்க. இல்லைன்னா நடக்குறதே வேற...’ என்று மிரட்டவும் செய்தார். அதற்கும் ஆட்சியர் அசரவில்லை. பொறுமையிழந்த அந்தத் தொழிலதிபர், ஆட்சியருக்கு எதிராக ‘ரிசார்ட் உரிமையாளர்கள்’ லாபியைத் திரட்ட ஆரம்பித்தார். ‘நீலகிரியில் இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்று நான்கு வருடங்களாகிவிட்டன. அவரை மாற்றுங்கள்’ என ‘கஜானா’ அமைச்சர் மூலமாக ஆட்சி மேலிடத்துக்கு நெருக்குதலையும் கொடுக்கத் தொடங்கினார். தொழிலதிபரின் நெருக்கடி முற்றிக்கொண்டிருந்த நிலையில், மற்றொருபுறம் ஈகோ மோதலால் ஒரு வனத்துறைப் பெண் அதிகாரியும், இன்னசென்ட் திவ்யாவுடன் முட்டத் தொடங்கினார்.

மிரட்டப்படுகிறாரா நீலகிரி கலெக்டர்? - நெருக்கும் ஆளுங்கட்சியினர்!

ஈகோ மோதலில் வனத்துறை அதிகாரி... ‘மேப்’ மாற்றத்துக்குத் துடித்த கும்பல்!

தற்போது வனத்துறையில் பணிபுரியும் அந்தப் பெண் அதிகாரி, ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்தவர்தான். வனங்கள் அடர்ந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் பெரும் பகுதி, அந்தப் பெண் அதிகாரியின் மேற்பார்வையில்தான் வரும் என்பதால், ஆட்சியருக்கும் அந்தப் பெண் அதிகாரிக்கும் இடையே நிர்வாகரீதியாக மோதல் அதிகரித்தது. இந்த ஈகோ மோதலில், வனத்துறை அமைச்சரின் உதவியாளர் ஒருவருடன் சேர்ந்துகொண்டு ஆட்சியருக்கு நெருக்கடி கொடுத்தார் அந்தப் பெண் அதிகாரி. விடுப்பு போடச்சொல்லி இன்னசென்ட் திவ்யாவைக் கட்டாயப்படுத்தினார்கள். அந்தச் சமயத்தில்தான், ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மெடிக்கல் லீவ் முடிந்து, நவம்பர் 5-ம் தேதி மீண்டும் அவர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவரைப் பணியில் சேரவிடாமல் ‘கஜானா’ அமைச்சருக்கு நெருக்கமான தொழிலதிபரும், வனத்துறைப் பெண் அதிகாரியும் நெருக்கடி கொடுத்தார்கள்.

‘யானைகள் காரிடார் மேப்’-ன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 7,000 ஏக்கர் பரப்பளவுள்ள யானை வழித்தடப் பாதையில், 821 கட்டடங்கள் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த மேப் இறுதி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டால், அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும். எனவே, அதற்கு முன்பாகத் தங்களுக்குத் தோதான மாற்றத்தைக் கொண்டுவர சட்டவிரோத ரிசார்ட் கும்பல்கள் துடிக்கின்றன. தங்களின் பணபலம், ஆளுங்கட்சி அதிகார செல்வாக்கை வைத்து, தங்களுடைய ரிசார்ட்டுகளை ‘அவுட் ஆஃப் காரிடார்’ என்று மாற்றிக்கொள்ள முயல்கிறார்கள். அதற்கு இன்னசென்ட் திவ்யா உடன்படவில்லை என்பதுதான், அவரை மாற்றத் துடிப்பதற்குப் பிரதான காரணம்” என்றார் விலாவாரியாக.

மிரட்டப்படுகிறாரா நீலகிரி கலெக்டர்? - நெருக்கும் ஆளுங்கட்சியினர்!

நாலா பக்கமும் பகை... மிரட்டப்பட்ட ஆட்சியர்!

நீலகிரி ஆட்சியராகப் பொறுப்பேற்ற திலிருந்து, போர்வெல் தடை, பொக்லைன்களை இயக்கத்தடை, மரம் வெட்டத் தடை, இல்லீகல் காட்டேஜ் மற்றும் ரிசார்ட்டுகளுக்குக் கட்டாய சீல் என்று பல விஷயங்களில் அதிரடிகாட்டிய இன்னசென்ட் திவ்யா, இதில் சம்பந்தப்பட்ட பலரிடமும் பகையைச் சம்பாதித்துக்கொண்டார். நீலகிரியில் வீடு என்கிற பெயரில் காட்டேஜ் அமைத்து வாடகைக்கு விடுபவர்கள் ஏராளம். இப்படி குன்னூரில் பெண் ஒருவர் நடத்திவந்த நான்கு காட்டேஜ்களுக்கு சீல் வைத்திருக்கிறார் இன்னசென்ட் திவ்யா. அந்தப் பெண், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ‘ஒருவகை’யில் நெருக்கம் என்பதால், ஆட்சியருக்கு எதிராகத் தன் பங்குக்குக் குடைச்சல் கொடுத்திருக்கிறார். ஊராட்சிப் பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கான அனுமதி வழங்குவதற்கான பணியையும் ஆட்சியர் அலுவலகமே பார்த்திருக்கிறது. இதனால் ‘வரும்படி’ பார்க்க முடியாத ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலரும் ஆட்சியர்மீது அதிருப்தியில் இருந்திருக்கிறார்கள்.

பொன்தோஸ்
பொன்தோஸ்

தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ் தரப்பிலிருந்தும் இன்னசென்ட் திவ்யாவைப் பணியிடமாற்றம் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து பொன்தோஸிடம் பேசினோம். “யானைகள் வழித்தட வழக்கை வைத்தே நான்கு வருஷத்துக்கு மேல கலெக்டரா ஓட்டிட்டாங்க. மசினகுடி ஏரியாவுல ‘வீடு கம் ரிசார்ட்டாக’ச் செயல்பட்டுவந்த பல பில்டிங்குகளை யானைகள் வழித்தடம்னு சொல்லி சீல் வெச்சுட்டாங்க. நிறைய பேர் வேலை வாய்ப்பை இழந்துட்டாங்க. ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கலை. போன மாசம் 20 ஊராட்சித் தலைவர்கள் கலெக்டரைப் பார்க்க ரெண்டு மணி நேரமா ஆபீஸ்ல காத்துக்கிடந்தாங்க. வெளியில நல்லது பண்ற மாதிரி அவங்க காட்டிக்கிட்டாலும், மக்களுக்கு அவங்க மேல அதிருப்தி இருந்தது உண்மை. ஆனா, அவங்களை மாத்தச் சொல்லி நம்ம சைடிலிருந்து எந்த அழுத்தமும் கொடுக்கலை” என்றார்.

இதற்கிடையே, ‘ஒழுங்கா டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போகலைன்னா உன் மகனைக் கடத்திவிடுவோம்’ என்று இன்னசென்ட் திவ்யாவுக்கு மிரட்டல் வந்ததாகவும் நீலகிரி மாவட்டம் முழுக்கச் செய்தி தீயாகப் பரவுகிறது. தனக்கு வந்த மிரட்டல்கள், ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து முதல்வரிடம் நேரில் பேசுவதற்காக இன்னசென்ட் திவ்யா சமீபத்தில் சென்னை வந்திருக்கிறார். முதல்வரின் அப்பாயின்மென்ட் கிடைப்பதற்கு முன்பாகவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வெளியானவுடன், மன வருத்தத்தோடு அவர் நீலகிரி திரும்பி விட்டாராம். ‘யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு இன்னசென்ட் திவ்யா காட்டிய முனைப்புதான், அவரை நிர்வாகரீதியாக பலிவாங்கிவிட்டது’ என்கிறார்கள் அதிகாரிகள் வட்டத்தில். இந்த மாற்றத்தைச் சாதகமாக்கிக்கொண்டு, யானைகள் வழித்தட மேப்பிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது ஒரு மோசகாரக் கும்பல். “யானை வழித்தடப் பிரச்னையில் இன்னும் ஒரு தீர்வு வராத நிலையில், திவ்யாவை மாற்றத் துடிப்பதில் தமிழக அரசுக்கு ஏன் அவசரம்... அந்தப் பணி முடிந்த பிறகு மாற்றிக்கொண்டால் என்ன?” என்று கோட்டை வட்டாரத்தில் கேட்டோம். “நீங்கள் சந்தேகப்படும்படி ஒன்றும் இல்லை. இது வழக்கமான நடைமுறைதான்!” என்று மென்று விழுங்கினார்கள்.

சூழலியலுக்கும் வன உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும்விதமான பண முதலைகளின் திட்டம் ஜெயித்துவிடக் கூடாது. தங்களின் சட்டவிரோதச் செயல்களுக்கு ஒத்துழைக்காததால், சட்டவிரோத ரிசார்ட் முதலாளிகளால் ஒரு மாவட்ட ஆட்சியர் மிரட்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டிப்புக்குரியது. மேலும், ஆளும் தரப்புக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, நீலகிரியில் இயற்கை காவு கொடுக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பம்.

என்ன செய்யப்போகிறார் முதல்வர்?

******

“எங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லிவிட்டோம்!”

ரிசார்ட் ஒன்றின் உரிமையாளர் விக்ரம் நம்மிடம் பேசுகையில், “காரிடாரில் இருக்கிறது என சீல் வைக்கப்பட்ட அத்தனை ரிசார்ட்டுகளுக்கும் அனைத்துவிதமான அனுமதியும் வைத்திருக்கிறோம். குடிநீர் வரி, மின்சாரம், தாசில்தார் அனுமதி, பஞ்சாயத்து அனுமதி, லைசென்ஸ் என எல்லாமே இருக்கின்றன. அத்தனைக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கையெழுத்திட்டுத்தான் அனுமதி கொடுத்தார்கள். திடீரென வந்து யானைகள் வழித்தடம் எனச் சொல்லி சீல் வைத்துவிட்டார்கள். எங்கள் தரப்பு நியாயத்தை கமிட்டியிடம் சொல்லிவிட்டோம்!” என்றார்.

வெங்கட்ராமன்
வெங்கட்ராமன்

எந்த அதிகாரத்தில் கடிதம் அனுப்பினீர்கள்?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டது, சட்டவிரோத ரிசார்ட்டுகளில் ஒன்றான செரியனின் கோட்டநாடு தோட்டத்து பங்களா. அந்த சீலை நீக்குமாறு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் ஹித்தேஷ் குமார் மக்வானா, நீலகிரி கலெக்டருக்கு உத்தரவுக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். “எந்த அதிகாரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்தக் கட்டடத்தின் சீலை அகற்றச் சொல்லி ஆட்சியருக்கு உத்தரவு கடித்ததை அனுப்பினீர்கள்?” என சீகூர் பீடபூமி யானைகள் வழித்தட விசாரணைக்குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கே.வெங்கட்ராமன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

மிரட்டப்படுகிறாரா நீலகிரி கலெக்டர்? - நெருக்கும் ஆளுங்கட்சியினர்!

ஏன் பல்டி அடித்தார் யானை ராஜேந்திரன்?

‘இன்னசென்ட் திவ்யா மாற்றப்படக் கூடாது’ என்று சொல்லிவந்த வழக்கறிஞர் ராஜேந்திரன், திடீரென ‘அவரை மாற்றுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’ என ஏன் கூறினார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இதற்கான பதிலை அவரிடமே கேட்டோம். “அவங்க கொடுத்த காரிடார் ரிப்போர்ட் ரொம்ப நேர்மையா இருந்தது. நான்தான் அவங்களை மாத்தக் கூடாதுன்னு சொன்னேன். அதுக்கு இடையில தமிழக அரசு நிர்வாகக் காரணங்களுக்காக கலெக்டரை மாத்தணும்னு சுப்ரீம் கோர்ட்டுல பெட்டிஷன் போட்டிருந்தது. அதேசமயம், நீலகிரி கலெக்டர் செயல்பாட்டுல சமீபகாலமா எனக்கு திருப்தி இல்லை‌. சரி, அவங்களை மாத்துனா மாத்திக்கட்டும்னு நீதிபதிகள் முன்னாடி ‘நோ அப்ஜெக்‌ஷன்’ சொல்லிட்டேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு