Published:Updated:

`ஊழல், முறைகேடுகள் இருக்காது; வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவோம்!' -சொல்கிறார் அமைச்சர் எ.வ.வேலு

எ.வ.வேலு
எ.வ.வேலு

`இனி டெண்டர்கள் பரவலாக்கப்பட்டு அதன் அடிப்படையில்தான் பணிகள் நடைபெறும். தமிழகத்தில் 10,000 ஊராட்சி ஒன்றிய சாலைகளைக் கணக்கிலெடுத்து தரமான சாலை அமைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.’

``தமிழகத்தில் 10,000 ஊராட்சி ஒன்றிய சாலைகளைத் தரமாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். கடந்த ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் இந்த ஆட்சியில் நடக்காது. அதற்கான வெளிப்படைத்தன்மையோடு செயல்படவிருக்கிறோம்" என்கிறார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு.

கே.என்.நேரு
கே.என்.நேரு

திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ், மெய்யநாதன், ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ``தமிழகத்திலுள்ள இருவழி, நான்குவழிச் சாலைப் பணிகள் பாதியிலேயே கிடப்பில் கிடக்கின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்த பிறகு சாலையின் இருபுறங்களிலும் அதிக மரங்களை நட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதற்கான வேலைகளில் அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள். நிலுவையிலுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

சாலை விரிவாக்கத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பணிக்காக ஐந்து சிறப்பு டி.ஆர்.ஓ-க்களை நியமிக்கவிருக்கிறோம். திருச்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், அதைக் குறைக்கும் வகையில் உயர்மட்ட பாலங்களை அமைத்துத் தரக் கோரி கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து, உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான திட்டம் தயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள 215 தரைமட்ட பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாநகர சாலைக்கு இணையாகத் தரமாகப் போட வேண்டும் என்று எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தச் சாலைகளைத் தரமாக அமைக்க ஆணையிடப்பட்டிருக்கிறது. கட்டடங்கள் கட்டும்போது தண்ணீர், மணல் போன்றவற்றை முறையாகப் பரிசோதனை செய்த பின்னரே கட்ட வேண்டும் என்பதை நான் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறேன்.

 எ.வ.வேலு
எ.வ.வேலு

இனி டெண்டர்கள் பரவலாக்கப்பட்டு, அதன் அடிப்படையில்தான் பணிகள் நடைபெறும். தமிழகத்தில் 10,000 ஊராட்சி ஒன்றிய சாலைகளைக் கணக்கிலெடுத்து தரமான சாலை அமைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்காக மாவட்ட அளவில் கணக்கெடுக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் இந்த ஆட்சியில் நடக்காது. அதற்கான வெளிப்படைத்தன்மையோடு செயல்படவிருக்கிறோம்" என்றார்.

`மொத்தம் 100 பேருக்குக் குறி!’ - எஸ்.பி.வேலுமணி ரெய்டு பின்னணி..!
அடுத்த கட்டுரைக்கு