Published:Updated:

`வாகனம் வேண்டாம்; பதவி தரும் எந்தச் சலுகையும் வேண்டாம்!'-கலெக்டருக்கு ஒன்றியச் சேர்மன் எழுதிய கடிதம்

கலெக்டருக்கு புதிய சேர்மன் கடிதம்
கலெக்டருக்கு புதிய சேர்மன் கடிதம்

நான் சிறுவயது முதலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அவரைப்போலவே சுயநலமின்றி மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவன்.

பதவி கிடைத்தால் எந்த வழியில் பணம் சம்பாதிக்கலாம் என்றே சிந்திக்கும் மனிதர்கள் பெருகிவிட்ட இக்காலச் சூழலில், `வாகனம் உள்ளிட்ட அரசின் சலுகைகள் எதுவும் எனக்கு வேண்டாம். எனக்குரிய படிச் செலவு பணத்தைக்கூட மனநலம் குன்றியோர் பாதுகாப்பு மையத்துக்கு வழங்கிவிடுங்கள்' என்று கலெக்டருக்கு சேர்மன் ஒருவர் கடிதம் எழுதியிருப்பது பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

நாகப்பட்டினம் அருகே அமைந்துள்ளது திருமருகல் எனும் சிற்றூர். இங்கு கடந்த 25 ஆண்டுகளாக அ.தி.மு.க ஒன்றிய கழகச் செயலாளராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு திருமருகல் ஒன்றியச் சேர்மன் பதவியைப் பெற்றிருக்கிறார். மொத்தமுள்ள 16 ஒன்றியக் கவுன்சிலர்களில் அ.தி.மு.க 9 இடங்களில் வெல்ல, 10 கவுன்சிலர்களின் வாக்குகளைப் பெற்று ராதாகிருஷ்ணன் சேர்மனாகியிருக்கிறார். இவர் பதவியேற்ற உடனே நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் கே நாயருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து திருமருகல் சேர்மன் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``நான் சிறுவயது முதலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அவரைப்போலவே சுயநலமின்றி மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவன். எனவேதான் சேர்மன் என்ற முறையில் அரசு தரும் சலுகைகள் எதுவும் எனக்கு வேண்டாம் என்று கூறி கலெக்டருக்கு கடிதம் அனுப்பினேன்'' என்றவர், இப்பதவியைப் பயன்படுத்தி இந்த ஒன்றியத்துக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்துப் பேசினார்.

அலுவலகம்
அலுவலகம்

``எங்கள் திருமருகல் ஒன்றியத்தைவிட பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் குறைந்த கீழ்வேளூர், திருக்குவளை போன்றவை தனி தாலுகாகளாக மாறிவிட்டன. எனவே, எங்களது நீண்ட கால கோரிக்கையான திருமருகல் ஒன்றியத்தை தனி தாலுகாவாக அமைத்திட வேண்டும். எங்கள் ஒன்றியத்தில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளும் இயங்குகின்றன.

ஐ.ஓ.சி, எம்.ஆர்.எல், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், இயற்கை எரிவாயுவைக் கொண்டு சோப் தயாரிப்பதற்கான சிலிகேட் போன்ற அனைத்தும் அமைந்திருக்கின்றன. னால் ஓ.என்.ஜி.சி அலுவலகத்தை மட்டும் புதுவை மாநிலம் காரைக்காலில் அமைத்துக்கொண்டு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையை அப்பகுதியில் செய்கிறார்கள். ஓ.என்.ஜி.சி-யால் ஏற்படும் பாதிப்புகளை எங்கள் ஒன்றிய மக்கள்தான் அனுபவிக்கிறார்கள். எனவே, மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், பள்ளிக் கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்ட சேவைகளை ஓ.என்.ஜி.சி மூலம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர்
ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர்

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்துப் பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். பனங்குடியில் 176 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியைத் தூர் வாரி, அதை ஒரு சுற்றுலாத் தலமாக்குவதோடு, அதன்மூலம் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் வழிவகை செய்ய நடவடிக்கை எடுப்பேன். 6 ஆறுகள் எங்கள் ஒன்றியத்தின் வழியாகவே 7 கி.மீ தொலைவிலுள்ள கடலில் கலக்கின்றன. எனவே, அவற்றின் வழியாக கடல்நீர் உள்ளே புகுந்து நிலத்தடி நீரும் உப்பாகி வருகிறது. எனவே, இதைத் தடுக்க தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுப்பேன். இங்கு விவசாயம் சார்ந்த கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன். மொத்தத்தில் எங்கள் ஒன்றிய மக்கள் நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுப்பேன்" என்று முடித்தார்.

பின் செல்ல