Election bannerElection banner
Published:Updated:

`டெல்லிக்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பா.ஜ.க ராஜாதான்!' - ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா ( ஈ.ஜெ.நந்தகுமார் )

``பா.ஜ.க கூட்டணியில்தான் அ.தி.மு.க இருக்கிறது. பா.ஜ.க டெல்லிக்கு ராஜா மட்டுமல்ல; தமிழகத்திலும் ராஜாதான்'' என்று ஹெச்.ராஜா தெரிவித்திருக்கிறார்.

`டெல்லிக்கு ராஜா என்றாலும், தமிழகத்தில் பா.ஜ.க வளரவில்லை’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், `பா.ஜ.க கூட்டணியில்தான் அ.தி.மு.க இருக்கிறது. பா.ஜ.க டெல்லிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் ராஜாதான்’ என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பதில் கூறியிருக்கிறார்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை வந்திருந்த ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, ``திருப்பதி கோயில் சொத்துகளைத் தணிக்கை செய்ய நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, ஆந்திரா அரசின் இந்து அறநிலையத்துறை அதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறது. இதேபோல் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆண்டு வருமானம் 10 லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள கோயில்களின் சொத்துகள் மற்றும் வருமானத்தைத் தணிக்கை செய்ய வேண்டும்.

அறநிலையத்துறையால் கோயில்களில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. கோயில்களை அழிக்கும் துறையாக அறநிலையத்துறை செயல்படுகிறது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
ஈ.ஜெ.நந்தகுமார்

கடந்த ஆறு மாதங்களில் 80 கோடி மக்களுக்கு மாதம் தோறும் 25 கிலோ அரிசி, ஐந்து கிலோ பருப்பு பிரதமர் மோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. பைகளில் இலவசப் பொருள்களை வாங்கியவர்கள், மோடியால் மூட்டையில் வாங்கிச் செல்கின்றனர்.

மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி நிச்சயம் கிடைக்கும். மத்திய அரசு நடத்திய காவிரி மேலாண்மைக்குழுக் கூட்டத்தின் முடிவால்தான் காவிரியில் தற்போது நீர் ஓடுகிறது. மழையால் அல்ல. லடாக்கில் சீனாவோடு யுத்தச் சூழல் நிலவும் நிலையிலும்கூட மக்களுக்கு மோடி அரசு உதவிவருகிறது

ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாகச் சிலர் குறை கூறுகிறார்கள். காதல் செய்வதாலும்தான் தற்கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்காக காதல் செய்வதைத் தடை செய்ய முடியுமா?'' என்றார்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
ஈ.ஜெ.நந்தகுமார்

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தவர், ``ரஜினி ஆளுமையானவர் என்பதால், அவர் பா.ஜ.க-வில் சேர்வது குறித்து நான் கருத்துகூற முடியாது'' என்றவரிடம், ``தமிழகத்தில் பா.ஜ.க வளரவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகிறாரே?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ``பா.ஜ.க கூட்டணியில்தான் அ.தி.மு.க இருக்கிறது. பா.ஜ.க டெல்லிக்கு ராஜா மட்டுமல்ல; தமிழகத்திலும் ராஜாதான்'' என்றார்.

இந்தநிலையில், ராமநாதபுரத்தில் கொலை செய்யப்பட்ட அருண் பிரகாஷ் என்ற இளைஞரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க ஹெச்.ராஜா சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, ``ராமநாதபுரம் மாவட்டம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கொரோனா காலத்தில் இந்தோனேஷியா நாட்டிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்து மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததற்கு, ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் அவர்களை விடுதலை செய்யக் கோரியிருந்தார். அதற்காகவே, நவாஸ் கனியை போலீஸார் கைது செய்திருக்க வேண்டும். அவர் அரசியல் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டதால் எம்.பி-யாக இருக்கத் தகுதி இல்லாதவர்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
உ.பாண்டி

ராமநாதபுரத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னின்று நடத்திய இளைஞர் அருண்பிரகாஷ் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ராமநாதபுரத்தில் நடந்த இந்த கொலை சம்பவத்துக்கு தனிப்பட்ட விரோதம் காரணம் எனக் காவல்துறையினர் தங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். கொலையாளிகள் யாரையும் கைது செய்யாமல், விசாரணை செய்யாமல் எப்படி இவ்வாறு காவல்துறை கூறியது?

``என்னைப் பற்றிப் பேச, இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது!" - ஹெச்.ராஜா பேட்டி

ஃபேஸ்புக்கில் பதிவிட்டவரை தற்காலிக பணிநீக்கம் செய்து விசாரிக்க வேண்டும். இக்கொலையில் தொடர்புடைய இஸ்லாமியக் குற்றவாளிகளை க்காப்பாற்ற காவல்துறை ஃபேஸ்புக்கில் பதிவு போட்டதாகத் தெரிகிறது. என்னைப் போன்றவர்கள் கொலை குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டதைக் கொச்சைப்படுத்தும் வகையில் காவல்துறை செயல்பட்டிருக்கிறது.

ஹெச்.ராஜா ஆறுதல்
ஹெச்.ராஜா ஆறுதல்
உ.பாண்டி

அருண்பிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கு உண்மையான காரணத்தை காவல்துறை சொல்ல வேண்டும். இது போன்ற பல இந்துத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கை திசைதிருப்பி உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட காவல்துறையினர் சதி செய்கின்றனர். எனவே, இந்தக் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு