Published:Updated:

`ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிடவில்லை!’ - சரத் பவார் திட்டவட்டம்

சரத் பவார்
சரத் பவார்

ஜனாதிபதி தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால் அதை சரத் பவார் மறுத்திருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சமீபகாலமாக அடுத்தடுத்து தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மும்பையில் மட்டுமல்லாமல், டெல்லியிலும் நடந்தது. டெல்லியில் சரத் பவார் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புகள் அனைத்தும் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக நடந்ததாகவே ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் சரத் பவாரோ டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எப்படி ஆதரவு கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கவே இந்தக் கூட்டத்தைக் கூட்டியதாகத் தெரிவித்திருந்தார்.

மம்தா, பிரசாந்த் கிஷோர், சரத் பவார்
மம்தா, பிரசாந்த் கிஷோர், சரத் பவார்

பிரசாந்த் கிஷோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரைக் கூட்டாகச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாமல் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்போதைக்கு எதிர்க்கட்சி கூட்டணியில் மூத்த அரசியல்வாதி என்று எடுத்துக்கொண்டால் சரத் பவார்தான் இருக்கிறார். எனவே, அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தென்மாநிலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியே நடக்கிறது. இது தவிர பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் சரத் பவார் தயவில் சிவசேனா கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தல்கள் முடியும்போது எதிர்க்கட்சிகள் வலுவான அணியாக மாற வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கணக்கு போட்ட்டிருக்கிறார். இதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மட்டும் எதிர்க்கட்சி அணிக்கு வரும் பட்சத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. அதோடு 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணி அமைப்பது குறித்து பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியுடன் முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதற்கு முன்னதாக நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வலிமை மற்றும் ஒற்றுமையைச் சோதித்துவிடலாம் என்று கிஷோர் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரத் பவாரை நிறுத்துவது குறித்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிகளிடம் ஆலோசித்ததாகத் தெரிகிறது. இதற்கு முன்பு ஜனாதிபதி பதவி கொடுப்பதாகக் கூறி சரத் பவாரைத் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்றதாகவும் கூறப்படுகிறது.

சரத் பவார்
சரத் பவார்

ஆனால் இது தொடர்பாக வரும் செய்தியில் உண்மை இல்லை என்று சரத்ப வார் தெரிவித்துள்ளார். தான் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ``ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை. பிரசாந்த் கிஷோருடன் அரசியல் குறித்து விவாதிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் மட்டத்திலும் ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதிக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

`ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!' - திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

சரத் பவார் இந்தப் பதவிக்கு போட்டியிட்டால் ஆம் ஆத்மி கட்சி, மம்தா பானர்ஜி ஆகியோரும் ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இதில் ஒன்று சேர வேண்டும் என்பதில் பிரசாந்த் கிஷோர் தீவிரமாக இருக்கிறார். அதோடு கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்தும் ஆலோசித்துவருகிறார். இதற்கிடையே சரத் பவார் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சரத் பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அதற்கு சிவசேனா ஆதரவு கொடுக்கும் என்று அந்தக் கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு