Published:Updated:

`அமைச்சர் துரைக்கண்ணுக்கு ரூ.500 கோடி சொத்தா?!' - தஞ்சை அ.தி.மு.க-வை அதிரவைத்த நோட்டீஸ்

துரைக்கண்ணு
துரைக்கண்ணு

`ரூ.500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது இவைதான் காரணம். வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளரான துரைக்கண்ணு மீது நடவடிக்கை எடு - இவன் இதர சாதி' என அந்த துண்டுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

`வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ரூ.500 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் சேர்த்துவிட்டார். அதனால்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் அவர் மீது நடவடிக்கை எடு' எனக் கும்பகோணத்தில் துண்டு பிரசுரம் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துரைக்கண்ணு
துரைக்கண்ணு

அ.தி.மு.க-வில் வேளாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் துரைக்கண்ணு. தஞ்சாவூர் அருகே உள்ள பாபநாசம் தொகுதியைச் சேர்ந்த இவர் அ.தி.மு.க-வில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகக் கும்பகோணத்தில் வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி-யுமான வைத்திலிங்கம், அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கும்பகோணம் பகுதியில் சிலர் துண்டு சீட்டு விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதில், ``அ.தி.மு.க தலைமையே திரும்பிப் பார்'' எனத் தலைப்பிட்டு கொடுக்கப்பட்ட அந்த சீட்டில் உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குக் காரணம் வடக்கு மாவட்டச் செயலாளர் செயல்பாடு இல்லாததுடன், சாதி பார்த்து செயல்படுவது, ரூ.500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது இவைதான் காரணம். வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளரான துரைக்கண்ணு மீது நடவடிக்கை எடு" என அந்தத் துண்டு சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நோட்டீஸ்
நோட்டீஸ்

இதுகுறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம், ``ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவிகளைத் தி.மு.க கைப்பற்றிவிட்டது. தேர்தல் முடிவு வெளியானதுமே அ.தி.மு.க விசுவாசிகள் அமைச்சர் துரைக்கண்ணு மீது அதிருப்தியில் புலம்பிக்கொண்டிருந்தனர். கட்சியில் துரைக்கண்ணு அமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே அவரின் செயல்பாடுகள் மாறிவிட்டது. அதற்கு முன் இவர் எளிமையாகவும் எல்லோரிடத்திலும் தன்மையாகவும் நடந்துகொள்வார். ஆனால், இப்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டார்.

அதுபோக அமைச்சரான பிறகு தன் பெயரிலும் பினாமி பெயரிலும் சொத்துகளை வாங்கிக் குவித்து வருகிறார். இதுகுறித்து பாபநாசம் பகுதியில் வெளிப்படையாகப் பேச்சுகள் எழுந்துள்ளன. கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து செயல்படாமல், தான் சார்ந்த சமூகத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன் அவர்களை வளர்த்துவிடுவது போன்ற செயல்களைச் செய்து வந்தார். இதனால் இவர் மீது கோபம் கொண்டவர்களில் ஒருசிலர்தான் இதுபோன்ற வாசகங்களைத் துண்டு பிரசுரமாக எழுதி விநியோகித்துள்ளனர்" என்றனர்.

துரைக்கண்ணு
துரைக்கண்ணு

துரைக்கண்ணு ஆதரவாளர்களிடம் விசாரித்தோம், ``அண்ணனின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர், இதுபோன்ற அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் ஆகியோர் வழங்கும் ஆலோசனைகளைக் கட்சியில் செயல்படுத்தி வருகிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை மாவட்டம் முழுவதும் படுதோல்வியை அ.தி.மு.க சந்தித்து இருக்கிறது. ஆனால், அமைச்சர் துரைக்கண்ணுதான் இதற்குக் காரணம் எனக் காழ்ப்புணர்ச்சியில் சிலர் கூறி வருகின்றனர்" என்று தெரிவித்தனர்.

Vikatan

இதுதொடர்பாக அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். ``நான் எந்தவிதமான கட்ட பஞ்சாயத்தும் செய்வது இல்லை. அதேபோல் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. அதனாலேயே நற்பெயருடன் வலம் வருகிறேன். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத யாரோ சிலர், சட்டமன்றத் தேர்லுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறநிலையில் அதற்குள் முதல்வரிடத்திலும் மக்களிடத்திலும் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு இதுபோன்ற செயலைச் செய்து வருகின்றனர். இதில், எள்ளவும் உண்மை இல்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு