Published:Updated:

`15 நாள்கள்தான் அவகாசம்!’- சசிகலா வீட்டை இடிக்கக் கெடு விதித்த தஞ்சை மாநகராட்சி

15 நாள்களுக்குள் வீட்டை இடித்து அகற்றாவிட்டால் மாநகராட்சி நிர்வாகமே அதைச் செய்துவிட்டு அதற்கான செலவுத்தொகையை வீட்டின் உரிமையாளரிடமிருந்து வசூல் செய்யும்!

சசிகலா
சசிகலா

தஞ்சாவூரில் உள்ள சசிகலாவிற்குச் சொந்தமான வீடு பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி மற்றும் பள்ளிக்கு அருகில் இந்த வீடு இருப்பதால் விபத்து எதுவும் ஏற்படுவதற்கு முன் 15 நாள்களுக்குள் இடித்து விட வேண்டும். தவறினால் நகராட்சி நிர்வாகமே வீட்டை இடித்து அப்புறப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

`15 நாள்கள்தான் அவகாசம்!’- சசிகலா வீட்டை இடிக்கக் கெடு விதித்த தஞ்சை மாநகராட்சி

தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி விஜயமண்டபத் தெரு, மிஷன் சாலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. மொத்தம் 10,500 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த மனையில் வீடு மற்றும் அதையொட்டி காலி இடமும் உள்ளன. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வீட்டில் சசிகலாவின் உறவினர் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலாவிற்குச் சொந்தமான இந்த வீடு பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளதாக நகராட்சி நிர்வாகத்திற்குப் புகார் வந்தது.

இதையடுத்து இந்த வீட்டுக்குக் கடந்த 17ம் தேதி மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பாணை ஒன்றை வழங்கியது. அதில், இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில், எந்த நேரத்திலும் இடிந்து விழும் தறுவாயில் உள்ளது என எங்களது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

`15 நாள்கள்தான் அவகாசம்!’- சசிகலா வீட்டை இடிக்கக் கெடு விதித்த தஞ்சை மாநகராட்சி

எனவே, இந்த வீடு அவ்வழியே செல்பவர்களுக்கும் கட்டடத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அத்துடன் இக்கட்டடம் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலும் பள்ளிக்கு அருகிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இந்த அபாயகரமான வீட்டை எந்த விதமான உபயோகத்துக்கும் பயன்படுத்துவதைத் தவிர்த்து பொதுமக்களுக்கும் வீட்டில் வசிப்போருக்கும் ஆபத்து எதுவும் ஏற்படுவதற்கு முன் கட்டடத்தைத் தக்க முன் ஏற்பாட்டுடன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டப்பிரிவு 327(1)(2)(3), 478ன்படி அறிவிக்கப்படுகிறது.

`15 நாள்கள்தான் அவகாசம்!’- சசிகலா வீட்டை இடிக்கக் கெடு விதித்த தஞ்சை மாநகராட்சி

தவறும் பட்சத்தில் தங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இந்த நடவடிக்கைக்கான செலவுத்தொகை அனைத்தும் தங்களிடமிருந்து வசூல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி தரப்பில் பேசினோம், சசிகலாவின் பெயரில் உள்ள வீட்டில் அவரது உறவினர் வசித்து வருகிறார். இந்த வீடு பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. இது தொடர்பான புகார் வந்துகொண்டே இருந்தது. இதையடுத்து நாங்கள் நடத்திய ஆய்வில் அது உண்மையென தெரிய வந்தது. இதையடுத்து வீட்டை இடிக்க உத்தரவிட்டு கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை வீடு இடிக்கப்படவில்லை என்பதால் வீட்டின் முன்பு மாநகராட்சி சார்பில் மறு அறிவிப்பாணை ஒட்டப்பட்டுள்ளது.

`15 நாள்கள்தான் அவகாசம்!’- சசிகலா வீட்டை இடிக்கக் கெடு விதித்த தஞ்சை மாநகராட்சி

அதில், இந்த வீடு மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால், மாநகராட்சி அறிவிப்பின்படி உட்புறம் செல்லுதல் அல்லது வீட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கூறியுள்ளோம். 15 நாள்களுக்குள் வீட்டை இடித்து அகற்றாவிட்டால் மாநகராட்சி நிர்வாகமே அதைச் செய்துவிட்டு அதற்கான செலவுத்தொகையை வீட்டின் உரிமையாளரிடமிருந்து வசூல் செய்யப்படும். இதை இடிப்பதற்குள் இக்கட்டடம் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கான நிவாரணத்தொகை மற்றும் நஷ்டஈடு ஆகியவற்றை வீட்டின் உரிமையாளரிடம் பெற்று வழங்கப்படும்" எனத் தெரிவித்தனர்.