Published:Updated:

`நவ் ஆர் நெவர்... ஆபரேஷன் எக்ஸ்போஸ்’ - ரஜினியின் 30 நாள் டார்கெட்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ஊரே கொரோனா வைரஸ் பீதியில் உறைந்துபோயிருக்கிறது. ஆனால், ரஜினி மக்கள் மன்றத்தினர் மட்டும் வீடு வீடாகத் திண்ணை பிரசாரத்தில் குதித்துள்ளனர். அவர்களின் வியூகம்தான் என்ன..? தகவலறிய களத்தில் குதித்தோம்.

தனிக்கட்சி தொடங்கி, தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இதன்பிறகு, அவ்வப்போது அரசியல் வெடிகளைக் கொளுத்திப் போட்டுவந்தவர், தனிக்கட்சி தொடங்கும் தன் ஐடியாவை அமலுக்குக் கொண்டுவரவே இல்லை.

ரஜினி ஆலோசனை கூட்டம்
ரஜினி ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை அவசரமாக அழைத்து, தனது ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். `முதல்வர் பதவிக்கு நான் போட்டியிடாமல், வேறொருவரை முன்னிறுத்தினால் உங்கள் ரியாக்‌ஷன் என்ன, கட்சி, ஆட்சி இரண்டையும் இரண்டு தலைமையின் கீழ் நடத்தினால் எப்படி இருக்கும்?' என ரஜினி கேள்வி எழுப்பியதை, மாவட்டச் செயலாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஒரே ஒரு பேட்டி... டோட்டல் க்ளோஸ்! ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன?

நான் முதல்வர் இல்லை

`நீங்க போட்டியிடலைன்னா கட்சியே தேவையில்லை தலைவரே. ஆட்சியும் கட்சியும் ஒருத்தர்கிட்ட இருந்தா மட்டும்தான் கட்டுப்பாட்டோட இருக்க முடியும்' எனச் சிலர் குரலை உயர்த்தவும், அதை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய மாவட்டச் செயலாளர்கள் தன்னுடைய குரலுக்கு மறுபேச்சு பேச மாட்டார்கள் என நினைத்திருந்தவருக்கு இக்கருத்து அதிர்ச்சியளித்தது. தன்னுடைய ஏமாற்றத்தைப் பத்திரிகையாளர்களிடமும் பகிர்ந்துகொண்டார். இந்தத் தகவல் மீடியா மூலமாகத் தீயாகப் பரவ, ரஜினி அரசியலுக்கே முழுக்குப் போட்டுவிட்டதாகத் தவறான சித்திரிப்புகள் றெக்கை கட்டின. தன்னுடைய நிலைப்பாட்டை விளக்குவதற்காக, கடந்த 12-ம் தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தைக் கூட்டினார்.

ரஜினி
ரஜினி

அதில், ``ஆட்சியும் கட்சியும் வெவ்வேறாக இருக்கும். 50 வயதுக்குக் கீழானவர்களை மட்டுமே வேட்பாளராக முன்னிறுத்துவேன். குறைவான கட்சி நிர்வாகிகளை மட்டுமே வைத்துக்கொள்வேன். முதல்வர் வேட்பாளராக என்னை நினைத்துக்கூட பார்க்க முடியாது. சட்டசபையில் உட்காரும் எண்ணம் எனக்கில்லை. மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் அரசியலுக்கு வருவேன்" என ரஜினி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. `எழுச்சி எப்போது ஏற்படுவது, இவர் எப்போது அரசியலுக்கு வருவது' என மன்ற நிர்வாகிகள் முணுமுணுக்கத் தொடங்கினர். ரசிகர்களிடமும் சோர்வு ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில், ரஜினிக்கு நெருக்கமானவர்கள் மூலமாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும் ஒரு திட்டம் கொண்டு செல்லப்பட்டது. சில நிர்வாகிகளிடம் ரஜினியே நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

`ஆபரேஷன் எக்ஸ்போஸ்'

``கடந்த 50 வருடத்தில் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும், ஊழலை அடிமட்டம் வரையில் ஒரு கட்டமைப்பாக வளர்த்துவிட்டன. இதை உடைக்காமல், நம்மால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இப்போதிருக்கும் வாக்காளர்களில் 65 சதவிகிதம் பேர் இளைஞர்கள். 40 வயதுக்குக் கீழானவர்கள். இவர்களிடம் ஆட்சி மாற்றத்தை மட்டும் ஒரு கருத்தியலாக முன்வைத்தால் அது எடுபடாது. கட்சி தொடங்கும் எல்லோரும் பேசுவதைப் போலத்தான், நானும் பேசுவதாக எண்ணி ஒதுக்கிவிடுவார்கள். நான் எதிர்பார்த்த ஒரு எழுச்சி ஏற்படாது.

இந்த அரசியல் கட்டமைப்பே தவறு என்பதை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஒரு வட்ட, பகுதி செயலாளரிடம் இருந்துதான் ஊழல் தொடங்குகிறது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அரசு நிர்வாகத்துக்குள் அரசியல் கட்சியினர் நுழைந்து நாட்டாமை செய்வதால்தான் ஊழல் புரையோடிப் போயுள்ளது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உங்கள் தொகுதி, பகுதிகளில் நடைபெற்ற ஊழல்களைத் தோண்டியெடுங்கள். அதை மக்களிடம் `எக்ஸ்போஸ்' செய்யுங்கள். இதுதான் எழுச்சியை ஏற்படுத்தும். தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் மீது மக்களிடம் அதிருப்தியை உருவாக்கும்" என்று ரஜினி கூறியுள்ளார்.

30 நாள் டார்கெட்

தன்னுடைய அரசியல் மாற்றக் கருத்தை, அடுத்த 30 நாள்களுக்குள் மக்களிடம் `ரீச்' செய்யுமாறு மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார். ``உங்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருந்தால், எல்லாம் ஈசியாக இருந்திருக்குமே. இவ்வளவு மெனக்கெடத் தேவையில்லையே?" எனத் தென்மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கேட்டதற்கு, ``என்ன சொல்லியிருப்பாங்க, நான் வந்தேறி, ஸ்கூல் வாடகைகூட கட்டாதவன், தமிழனைத் தமிழன்தான் ஆளணும். இப்படியெல்லாம் விமர்சனம் பண்ணியிருப்பாங்க. இப்ப தி.மு.க, அ.தி.மு.க தலைமைக்கு எதிராக என்னை முன்நிறுத்தல, என்னோட கருத்தைத்தான் நிறுத்தியிருக்கேன். என்னோட கருத்தை எதிர்த்து அவங்களால வாதம் பண்ண முடியுமா? இந்த அரசியல் கட்டமைப்பே தவறுன்னு சொல்றேன். தவறு இல்லைன்னு அவங்களால சொல்ல முடியுமா? இதுதான் வியூகம். மக்கள்கிட்டேயும் அதிர்வு தெரிய ஆரம்பிச்சிருச்சு. உற்சாகமா வேலையைப் பாருங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று சிரித்துள்ளார் ரஜினி.

ரஜினியின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வீடுவீடாக மக்களைச் சந்திக்கும் பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். `நவ் ஆர் நெவர்' தலைப்பில் போஸ்டர்கள் தமிழகமெங்கும் முளைத்துள்ளன. ஒவ்வோராலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக விழிப்புணர்வு சந்திப்பு அட்டவணையே போட்டு மக்களைச் சந்திக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்.இ.டி வாகனம் மூலமாக பிரசாரம் தூள் பறக்கிறது. புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டத்தில் வீடுவீடாகத் திண்ணைப பிரசாரம் வேகமெடுத்துள்ளது. ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ரஜினி ஃபிக்ஸ் செய்த 30 நாள் டார்க்கெட்டுக்குள் மக்களிடம் ஓர் அரசியல் சூழலை ஏற்படுத்தப்போவதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் களமிறங்கியுள்ளனர்.

``சரி, அது ஏன் 30 நாள் டார்கெட்?" என்ற ஐயத்தோடு மன்ற மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``30 நாள் கழித்து, மீண்டும் ஒரு அதிர்வை ரஜினி கிளப்பப்போகிறார். அதற்காகத்தான் இந்த டார்கெட். ஏப்ரல் 22-ம் தேதி வாக்கில் தலைவரிடமிருந்து அடுத்த அதிரடி கிளம்பும்" என்றவர், ``இப்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுவும் ஒருவகையில் எங்களுக்கு சாதகம்தான். மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கு இயற்கையே ஒருவழி ஏற்படுத்தித் தந்துள்ளது. கூட்டமாகச் செல்லாமல், தனித்தனியாகச் சென்று மக்களிடம் ரஜினியின் கருத்தைக் கொண்டு சேர்க்க முடிவெடுத்துள்ளோம். பாதுகாப்பு எச்சரிக்கையோடு பிரசாரத்தை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளோம்" என்றார்.

நவ் ஆர் நெவர் போஸ்டர்
நவ் ஆர் நெவர் போஸ்டர்

ஒரு கல்லை வீசியெறிந்து, அதிர்வை உருவாக்கியுள்ளார் ரஜினிகாந்த். அந்த அதிர்வு அலையாக உருமாறும் எனக் காத்திருக்கிறார். அவர் கல் வீசியெறிந்தது குளமா, இல்லை கடலா என்பது அலை ஏற்பட்டால் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு