Election bannerElection banner
Published:Updated:

முடங்கும் நேஷனல் யூத் புராஜெக்ட்... கலங்கும் காந்தியின் சீடர்!

காந்தியின் சீடர் எஸ்.என்.சுப்பாராவ்
காந்தியின் சீடர் எஸ்.என்.சுப்பாராவ்

``இந்தியா எல்லா மொழிகளையும் ஆதரிக்கணும்னு சொல்வார் பாய் ஜி. அதேபோல சர்வமதப் பிரார்த்தனை இருக்கும். சமூகநீதி குறித்த வகுப்புகள் இருக்கும். மத்திய அரசு ஏன் என்.ஒய்.பி-க்கான சலுகைகளை நிறுத்துச்சுன்னு தெரியலை.”

நேஷனல் யூத் புராஜெக்ட் (NYP) என்றொரு அமைப்பு. புதுடெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் பல்வேறு மாநில அரசுகளின் ஆதரவுடன், காந்தி சமாதான நிறுவனத்தின் (Gandhi Peace Foundation) ஓர் அங்கமாகச் செயல்பட்டுவந்த இந்த அமைப்பை நிறுவியவர், சேலம் நஞ்சுண்டையா சுப்பாராவ். `பாய் ஜி’ என அவரது ஆதரவாளர்களால் அன்புடன் அழைக்கப்பட்டுவரும் இவர், காந்தியின் சீடர். `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போதுபோராட்டம் நடத்தி, சிறை சென்றவர். முதல் இந்தியப் பிரதமர் நேரு, காமராஜர் ஆகியோரின் அன்பைப் பெற்றவர்..

என்.ஒய்.பி-யின் முக்கியமான பணிகளில் ஒன்று, இந்தியா முழுக்க இளைஞர் முகாம்களை நடத்துவது. இந்தியாவின் பன்முகத்தன்மை, பார்ம்பர்யம், கலை கலாசாரத்தை உயர்த்திப் பிடித்து, அவற்றின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதே இந்த முகாம்களின் நோக்கம். இதுவரை ஆயிரக்கணக்கான முகாம்களை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடத்திவந்திருக்கிறது என்.ஒய்.பி.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Vikatan

மத்தியில் மோடி பிரதமாரகப் பதவி ஏற்பதற்கு முன்பு வரை என்.ஒய்.பி-யின் வழக்கமான இயக்கத்துக்கு எந்தவிதச் சிக்கல்களும் இல்லை. மத்திய ஆரசின் நிதியுதவியும், பல்வேறு மாநில அரசுகளின் ஆதரவும் இருந்ததால், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் முகாம்களில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்குப் போக்குவரத்து, தங்குமிடம், உணவு எல்லாமே இலவசமாகத் தரப்பட்டு வந்தன.

ஆனால் `நிதி ஆயோக் கொண்டு வரப்பட்ட பின் இந்த அமைப்புக்கான மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டுவிட்டதாம். கூடவே இந்த முகாம்களில் கலந்துகொள்வதற்குச் செல்பவர்களுக்கு ரயில்வே வழங்கிவந்த 50 சதவிகித பயணக் கட்டணச் சலுகையும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாம்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முகாம்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் ஓராண்டுக்குப் பிறகு வரும் ஏப்ரல் 9 முதல் 12-ம் தேதி வரை மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகேயுள்ள, இதுவரை குற்ற வழக்குகளே பதிவாகாத காவல் நிலையம் அமையப் பெற்றுள்ள பகூர் என்கிற கிராமத்தில் நடக்கிறது.

இந்த முகாம் குறித்து தன்னுடைய சீடர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்தான் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் பாய் ஜி.

பாய் ஜி
பாய் ஜி

கடிதத்தில், ‘’இதுவரை இந்தியாவில் இருந்த அரசுகள் நம்மை ஆதரித்துவந்தன. நிதி ஆயோக் வந்து நம் பயணத்தை முடக்கிப் போட்டுவிட்டது. இதிலிருந்து மீள்வது எப்படி என இனிதான் யோசிக்க வேண்டும். இதுவரை முகாம்களூக்கு வருகிறவர்களுக்கு அனைத்தும் இலவசமாகத் தரப்பட்டுவந்த நிலையில் இப்போது அதற்கு இயலாத நிலையில் இருக்கிறோம். எனவே தன்னார்வலர்களும் பொதுமக்களும்தான் நமக்கு இனி ஒரே வழி’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து இந்த முகாம்களில் தொடர்ந்து கலந்துகொண்டு வரும் கருணாகரனிடம் பேசினேன்.

கருணாகரன்
கருணாகரன்

’90 வயசு கடந்தும் இன்னைக்கும் பாய் ஜி சமூகத்துக்காகப் பாடுபட்டுக்கிட்டு வர்றார். என்.ஒய்.பி முகாம்கள்ல காந்தியக் கொள்கைதான் முக்கியமானதா இருக்கும். இந்தியா எல்லா மொழிகளையும் ஆதரிக்கணும்னு சொல்வார் பாய் ஜி. அதேபோல சர்வமதப் பிரார்த்தனை இருக்கும். சமூகநீதி குறித்த வகுப்புகள் இருக்கும். மத்திய அரசு ஏன் என்.ஒய்.பி-க்கான சலுகைகளை நிறுத்துச்சுன்னு தெரியலை. விவேகானந்த கேந்திரம் மாதிரியான அமைப்புகளுக்கு நிறையச் செய்யறாங்க. எங்களுக்கு ஏன் செய்ய மறுக்கிறாங்கன்னு தெரியலை. காந்தியின் தொண்டர்களைக் கலங்கவைப்பது குஜராத்தில் பிறந்த மோடியின் ஆட்சிக்கு அழகல்ல’ என்கிறார் இவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு