Election bannerElection banner
Published:Updated:

``இப்போ எல்லாமே கூலிதான்''- இந்தக்கால அரசியல் குறித்து ஆதங்கப்படும் அந்தக்கால அரசியல்வாதி#MyVikatan

தியாகராஜன் ஐயா
தியாகராஜன் ஐயா

பழைய காலத்து அரசியல் நினைவுகளை நினைச்சுப் பார்த்தாலே அது ஒரு தனி சுகம். அந்த நெனைப்பே என்னை இன்னோர் உலகத்துக்குக் கொண்டு போயிடுது - தொண்டரின் நினைவலைகளில் அந்தக்கால அரசியல்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தியாகராஜன் ஐயாவுக்கு வயது 85. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிக்கு அருகிலுள்ள தெற்குவாண்டான் விடுதி. தி.மு.க-வின் அதி தீவிரத் தொண்டர். தி.மு.க தலைவர் கருணாநிதியை, தனது மூத்த மகன் திருமணத்துக்கு வீட்டுக்கு நேரடியாக அழைத்து வந்து அசத்தியவர். இதுவரை கட்சியில் எந்தப் பதவியும் வகிக்காதவர். கட்சியில் பொறுப்புக் கொடுத்தபோதும் அதை வேண்டாம் என்று மறுத்து மற்றவர்களுக்குக் கொடுத்து உற்சாகமூட்டியவர்.

காலையில் எழுந்தவுடன் அன்றைய அனைத்துப் பத்திரிகைகளையும் படித்துவிட்டுத்தான் அடுத்த வேலை. நடை சற்றுத் தளர்ந்திருந்தாலும், அரசியல் நெடி இன்னும் ஒரு துளிக்கூட குறையவில்லை. அவரை யதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவரிடம் கடந்தகாலத் தேர்தல், மாநாடுகள், சமூக ஊடகப் பிரசாரம், கூட்டம், பணப் பட்டுவாடா இவை பற்றியெல்லாம் பேசினேன். அவையெல்லாம் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்குப் பாடம். இப்படியும் இருந்ததா என ஆச்சர்யம்..! அவரிடம் பேசியதிலிருந்து...

கருணாநிதியுடன் தியாகராஜன் ஐயா
கருணாநிதியுடன் தியாகராஜன் ஐயா

``இன்னிக்கு அரசியலுக்கு வர்ற இளம் தலைமுறைக்கு அரசியல் பத்தின சரியான பார்வை இல்லவே இல்லைனுதான் சொல்லுவேன். ஒரு சரியான தெளிவு இல்லை. புரிதல் இல்லை. கரை வேட்டி கட்டணும். காரிலே ஏறி, கட்சிக்கொடியைக் கட்டிக்கிட்டுப் பறக்கணும். அதைவெச்சு கோடிக்கணக்கிலே காசு பணம் சேர்க்கணும். அதுக்கு கட்சியைப் பயன்படுத்தணும். இதுதான் இப்போ இருக்குற இளம் அரசியல்வாதிங்களோட மனநிலை.

அப்போல்லாம் அரசியல் கட்சித் தலைவர்களின் மொகத்தைப் பார்க்க, ஒரு தெய்வத்தைப் பார்க்கிற மாதிரி மதிச்சு தவம் கெடப்போம். தலைவர்களின் பேச்சைக் கேட்க எத்தனையோ மைல் தூரம் நடந்திருக்கோம். சைக்கிள் மிதிச்சு, அந்த சைக்கிளும் பஞ்சர் ஆகிப்போய் லாரி மேலே ஏறி படுத்து, பசி பட்டினியோட மாநாடுகளுக்குப் போயிருக்கோம். இப்போ எல்லாமே கூலி. எத்தனை பாட்டில் கொடுப்பாங்க... என்ன பிரியாணி கொடுப்பாங்க... கூட்டம் எப்போ முடியும்... பட்டுவாடா எப்போ நடக்கும்னு காத்திருக்காங்க. வேதனையாத்தான் இருக்கு.

அப்போ இருந்த தலைவர்கள் அப்பழுக்கில்லாம இருந்தாங்க. கட்சி உறுப்பினர்களைக் குடும்ப உறுப்பினர்கள் மாதிரித்தான் நினைப்பாங்க. ஒரு வீட்டிலே கல்யாணம், காதுகுத்து விஷேசம்னா சாதி, மதம், இனம் இப்படி எந்தப் பாகுபாடும் இல்லாம கட்சிக்காரங்க எல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்து தங்கி அவங்களோட சொந்தக் குடும்பத்து நிகழ்ச்சி மாதிரி உணர்வோட வேலை பார்ப்பாங்க. இப்போ கால ஓட்டத்துல எல்லாம் மாறிப்போச்சு. கட்சிக்குள்ளே உள்ளடி வேலைகளும் பெருத்துப் போச்சு.

தியாகராஜன் ஐயா
தியாகராஜன் ஐயா

என்னதான் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்னு தேர்தல் பிரசாரம் செஞ்சாலும் தலைவர்களை நேரிலே பார்த்து கூட்டத்தோட கூட்டமா ஒண்ணா நின்னு, பேச்சை ரசிச்சுக் கேட்டு கை தட்டுறதும், விசில் அடிக்கிறதும், தலைவா வாழ்கனு ஒட்டுமொத்தமா குரல் கொடுக்குறதும் ஒரு புதுத் தெம்பைக் கொடுக்கும். அந்த வெறியே ஒவ்வொரு தொண்டனையும் தேர்தல் களத்துக்கு உசுப்பேத்தி ஓடவைக்கும். தலைவர்களுக்கும் அது உற்சாகத்தைக் கொடுக்கும். அன்னிக்கு மாநாட்டுக்கோ, கூட்டத்துக்கோ வெறும் கட்சிக்காரங்க மட்டுமில்லாம பொதுமக்களும் எக்கச்சக்கமா வந்து கலந்துக்குவாங்க. மாற்று அரசியல் கொள்கை உள்ளவங்களையெல்லாம் தலைவர்களோட மாநாட்டுக்குக் கூட்டிட்டுப் போவேன். அந்த ஒரு மாநாட்டுப் பேச்சே அவங்களைக் கட்சியிலே சேரவெச்சுடும். அப்படி எத்தனையோ பேரை நான் மாத்தியிருக்கேன்.

ஒரு அரசியல்வாதின்னா கட்டாயம் நியூஸ் பேப்பர் படிக்கணும். நம்ம கட்சிப் பேப்பர் படிக்கிறதைவிட நம்மைப் பத்தி விமர்சனம் செஞ்சு எழுதுற மற்ற பத்திரிகைகளைத்தான் கட்டாயம் படிக்கணும். அப்போதான் நாம அதுக்கு பதில் கொடுக்க முடியும். இன்னிக்கு உள்ள வெறும் வாடஸ்அப்பும், ஃபேஸ்புக்கும் சும்மா யானைப் பசிக்கு சோளப் பொரி மாதிரி. இதுலே பாதிப் பொய். பாதி நெஜம். எது உண்மை, எது புரளினு கண்டுக்க முடியலை.

`தீப்பொறி பேச்சாளர்களின் கூடாரமாக இருந்த தி.மு.க..!' - ஒரு வாசகரின் பகிர்வு #MyVikatan

ஒவ்வொரு ஊருலேயும் ஒரு டீக்கடை இருக்கும். அந்த டீக்கடையிலே பேசுற அரசியல்தான் கிராமப்புரத்துல பெரிய அளவுலே எல்லார்கிட்டேயும் போய்ச்சேரும். இந்த வேலையை நான் இன்னமும் செஞ்சிக்கிட்டுத்தான் இருக்கேன். இதுக்காகவே நான் தினமும் எல்லா நியூஸ் பேப்பரும் படிக்கிறேன். நமக்கு பிடிக்காத வேற கட்சிக்காரன் எதிர்த்துக் கேள்வி கேட்பான். அவன்கூட சண்டை போடக் கூடாது. அவனுக்குப் புரியவைக்கிற மாதிரி நாம கொடுக்கிற விஷயங்களும் இருக்கணும். அதுக்காக நான் இன்னமும் என்னை ஒவ்வொரு நாளும் தயார்படுத்திக்கிட்டு இருக்கேன். என் வயசொத்த நிறைய அரசியல் கூட்டாளிங்க இப்போ உயிரோட இல்லை. ஒருத்தர், ரெண்டு பேருதான் இருக்காங்க. அவங்களும் நோய்வாய்ப்பட்டிருக்காங்க. அந்த பழைய காலத்து அரசியல் நினைவுகளை நினைச்சுப் பார்த்தாலே அது ஒரு தனி சுகம். அந்த நெனைப்பே என்னை இன்னோர் உலகத்துக்குக் கொண்டு போயிடுது.

இளைஞர்கள் நிறைய பேர் அரசியலுக்கு வரணும். நமக்குனு நல்ல கொள்கைகளைத் தேர்வு செஞ்சு அதுல பயணம் செய்யணும். நேர்மையா இருக்கணும். முடிஞ்சவரை அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும். இன்னிக்கு ஒரு கட்சி. நாளைக்கு ஒரு கட்சினு நிலையில்லாம தாவிக்கிட்டே இருக்கக் கூடாது. அரசியலை நம்ம சுயலாபத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. அரசியல்ங்கிறது இளநீர்த் தண்ணி மாதிரி எந்த மாசும் இல்லாம சுத்தத் தங்கமா இருக்கணும். அரசியலை மாசுபடுத்த நாம ஒருபோதும் காரணமா இருக்கக் கூடாது. ஏன்னா அரசியல்தானே நம்ம எல்லாருக்கும் அடித்தளம்... அதை நாம கெடுக்கலாமா..? இன்னிக்கு நிறைய படிச்சவங்க அரசியலுக்கு வர்றாங்க... இன்னும் நிறைய வரணும். ஆனா கை சுத்தமா இருக்கணும். அப்போதான் நாமும், நம்ம நாடும் சுத்தமா இருக்கும். என்னய்யா நான் சொல்றது சரிதானே..?!” - ஏக்கத்துடன் கேட்டுச் சிரிக்கிறார் தியாகராஜன் ஐயா..!

- பழ.அசோக்குமார்

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

விகடன் தேர்தல் களம் 2021
விகடன் தேர்தல் களம் 2021

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு