Published:Updated:

``பாசத்திற்குரிய சின்னம்மா... பதவியேற்க வா!'' - பன்னீர் சொன்ன தினம் இன்று

2016 டிசம்பர் 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில்தான், `அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா வர வேண்டும்’ எனச் சொன்னார், ஓ.பன்னீர்செல்வம்.

சசிகலாவுடன் பன்னீர்
சசிகலாவுடன் பன்னீர் ( விகடன் )

சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகப் பதவியேற்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் சொன்ன தினம் இன்று!

ஜெயலலிதா இறந்த அடுத்த நாளே எழுந்தது, 'சசிகலா பொதுச் செயலாளர் ஆக வேண்டும்' என்ற கோஷம். அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் அந்தக் கோஷத்தை எழுப்பிக்கொண்டிருந்த போதுதான், ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து ஆதரவு வெளிப்பட்டது.

சசிகலாவுடன் பன்னீர்
சசிகலாவுடன் பன்னீர்
விகடன்

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் பொறுப்பை வி.கே.சசிகலா ஏற்க வேண்டும்' என அறிக்கை விட்டார், அன்றைக்கு தமிழகத்தின் முதல்வராகவும் கட்சியின் பொருளாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட அந்த அறிக்கையில் சொன்ன விஷயங்கள் அப்படியே ஓ.பன்னீர்செல்வத்துக்கே இன்று பொருந்தும். அன்றைக்கு சசிகலாவை ஆதரித்துவிட்டு, அடுத்த இரண்டே மாதத்தில் பல்டி அடித்தவர் பன்னீர்.

2016 டிசம்பர் 10-ம் தேதி வெளியிட்ட அந்த அறிக்கையில் என்ன சொல்லியிருந்தார்?

''மறைந்த முதல்வர் அம்மாவின் நிழலாக இறுதிவரை இருந்து, அவரின் மெய்க்காப்பாளராக, உயிர் காக்கும் தோழியாக, உன்னத சேவகியாக, உறுதுணையாக நிற்கும் தங்கையாகவே வாழ்ந்துவருபவர், எங்களின் பாசத்திற்குரிய சின்னம்மா. எண்ணில்லாத சோதனைகளையும் வேதனைகளையும் அம்மா சந்தித்த காலகட்டங்களில், அவருக்கு உற்ற துணையாக இருந்து அந்தத் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டவர், சின்னம்மா.

சசிகலா
சசிகலா

பொய் வழக்குகள் போடப்பட்டு, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி சிறைவாசம் மேற்கொண்ட நேரத்தில், அம்மாவுடன் சேர்ந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தவர் சின்னம்மா. அம்மாவுடன் 33 ஆண்டுகள் இணைந்து நின்று, அவரின் சிந்தனையை, செயலாற்றலைத் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருப்பவர் சின்னம்மா'' என அந்த அறிக்கையில் சொன்னார் பன்னீர்செல்வம்.

''அம்மாவைப் போலவே அ.தி.மு.க நிர்வாகிகளை, கடைக்கோடி கிராம தொண்டர்களை அறிந்து வைத்திருப்பவர் சின்னம்மா. எனவே, அம்மா வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ஒரு ராணுவ அமைப்புபோன்று கட்சியைத் தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சின்னம்மா பொறுப்பேற்று வழிநடத்துவது ஒன்றே ஆகும்'' என்று சொல்லி, அ.தி.மு.க-வுக்கு தலைமையேற்க அழைப்பு விடுத்தார்.

''அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சின்னம்மா பொறுப்பேற்பது பற்றிய கருத்துக்கு, ஒரு மாற்றுக் கருத்து அ.தி.மு.க-வில் இல்லை. அப்படி ஒரு மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர் எவரேனும் இருந்தால், அவர் இந்தக் கட்சியின் தொண்டர் இல்லை'' என அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார் பன்னீர்செல்வம். இப்போது நிறம் மாறியிருக்கும் பன்னீர்செல்வம், அன்றைக்குச் சொன்ன கருத்தை வைத்துப் பார்த்தால், இன்றைக்கு பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வின் தொண்டர் இல்லை.

அரசியல் வெற்றிடம் பற்றி ரஜினி வரை இன்றைக்குப் பேசுகிறார்கள். ஆனால், ஜெயலலிதா இறந்த ஐந்தாவது நாளே அதுபற்றி திருவாய் மலர்ந்தவர், பன்னீர்செல்வம். அவர் வெளியிட்ட இந்த அறிக்கையிலும் வெற்றிடம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

சசிகலா
சசிகலா
விகடன்

''அம்மா மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறைவு செய்திடவே சின்னம்மாவை அ.தி.மு.க-வினர் சந்தித்து, தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த 33 ஆண்டுகளாக அம்மாவுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் சின்னம்மா. அதனால்தான், தன்னைப் பெற்றெடுத்த தாயின் இடத்தை சின்னம்மா நிரப்பியுள்ளார் என அம்மா புகழ்ந்துரைத்தார்.

'என் மீதான விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத் தவறாக சித்திரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட பெண்மணி சசிகலா. எனக்காக அவர் மிகவும் சிரமங்களை அனுபவித்துள்ளார். என்னுடனான நட்பு மட்டும் இல்லை என்றால், அவரை இந்த அளவு யாருமே தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை நிரப்பிய பெண் அவர்' என அம்மாவே கூறியிருக்கிறார்.

அம்மா மீது சின்னம்மா கொண்டுள்ள பற்றுக்கும், பாசத்திற்கும் இதைவிட வேறு அத்தாட்சி தேவையில்லை'' என அந்த அறிக்கையில் உருகுகிறார் பன்னீர்செல்வம்.

சசிகலாவும் பன்னீரும்
சசிகலாவும் பன்னீரும்
விகடன்

அதோடு நிற்கவில்லை. ''சின்னம்மாவை இகழ்ந்துரைத்து, ஏளனம் செய்து, மனசாட்சியே இன்றி பொய்யான வதந்திகளைப் பரப்பி, அவரை அரசியலில் ஈடுபட விடாமல் முடக்கிவிடலாம் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன'' என்கிறார். அவரேதான் இன்றைக்கு சசிகலாவை இகழ்ந்து ஏளனம் செய்து கொண்டிருக்கிறார்.

`உன் தலைவன் யார்... நீ என்ன சீமான் கட்சியா?’ -இலங்கையில் இயக்குநர் களஞ்சியத்துக்கு நேர்ந்த சோகம்

''ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட அ.தி.மு.க-வை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள ஓரிரு எதிர்க்கட்சிகளின் கைவரிசையும் இருக்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன். இத்தகைய வதந்தி பரப்பும் செயல்கள் வெற்றி பெறாது; குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற ஆசை நிச்சயம் நிறைவேறாது. தமிழக மக்கள் அறிவார்ந்தவர்கள். சிந்தனைத் திறம் மிக்கவர்கள். அவர்களை ஏமாற்ற நினைப்பவர்கள்தான் இதுவரை ஏமாந்துள்ளார்கள் என்பது வரலாறு. அந்த வரலாறு இதற்கும் பொருந்தும்'' என அறிக்கையில் தெரிவிக்கிறார்.

சிந்தனை மிக்க அறிவார்ந்த தமிழக மக்கள் இருக்கட்டும். இதில் பன்னீர்செல்வமே கட்சியினரை ஏமாற்றியதுதான் வரலாறு.