Published:Updated:

`ஒண்டிவீரனுக்கு மரியாதை!’ - நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முந்தும் தலைவர்கள்?

இ.கார்த்திகேயன்
எல்.ராஜேந்திரன்

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஒண்டிவீரன் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
ஒண்டிவீரன் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசின் லஞ்சம், ஊழலை மறைக்கவே மாவட்டங்களைப் பிரித்தாளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் செய்பவர்களுக்கும் அதை வாங்கும் மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்திடவே இதுபோன்ற நடவடிக்கைகளைச் செய்கிறார்கள்.

ஒண்டிவீரன் சிலைக்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை
ஒண்டிவீரன் சிலைக்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவின் அதிக லாபத்தில் செயல்படுவதாகச் சொல்கிறார். அதே வேளையில், தமிழக முதல்வரோ ஆவின் நஷ்டத்தில் செல்வதாகச் சொல்கிறார். அவர்களுக்குள்ளேயே முரண்பட்ட கருத்து உள்ளது. முதலில் அதைச் சரி செய்ய வேண்டும். எந்த மாநிலத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் தி.மு.க துணை நிற்கும். அதைப்போலத்தான் காஷ்மீர் விவகாரத்திலும் தி.மு.க போராட்டம் அறிவித்துள்ளது.

நான் துண்டுச்சீட்டு வைத்துப் பேசுவதாக தமிழிசை, ஹெச்.ராஜா போன்றோர் குற்றம்சாட்டுவது குறித்து எனக்கு கவலையில்லை. புள்ளி விவரங்கள், ஆதாரத்துடன் பேசுவதற்காகத்தான் துண்டுச்சீட்டுகளைப் பயன்படுத்துகிறேன். அவர்களைப் போல பொத்தாம் பொதுவாக எப்போதுமே பேச மாட்டேன். நாங்குநேரி சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க போட்டியிடுவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.” என்றார்.

இதுவரை ஒண்டிவீரன் நினைவு நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க தரப்பில் சபாநாயகர் தனபால், துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக தவறாமல் வந்து நினைவு மண்டபம் மற்றும் நெற்கட்டும்செவலில் உள்ள ஒண்டிவீரனின் சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.

சபாநாயகர் தனபால்
சபாநாயகர் தனபால்

தி.மு.க சார்பில் ஸ்டாலின், அ.ம.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வருவது இதுவே முதல்முறை. ஆனால், நினைவிடத்திற்கு வந்த தலைவர்கள் யாரும் சமாதி இருக்கும் நெற்கட்டும்செவலுக்குச் செல்லவில்லை. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால்தான் இந்தாண்டு மற்ற கட்சித் தலைவர்களின் வருகைக்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.