Published:Updated:

'கொரோனாவை ஒழிக்க 'ஒரே நாடு ஒரே கொள்கை' திட்டத்தை செயல்படுத்தவேண்டும்' - சரத்பவார் கட்சி கோரிக்கை.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

கொரோனாவை ஒழிக்க ஒரே நாடு ஒரே கொள்கையை மத்திய அரசு பின்பற்றவேண்டும் என்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் தட்டுப்பாடு என அடுத்தடுத்து பல சிக்கல்களுக்கு மத்தியில் மாநில அரசுகளும், மத்திய அரசும் கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

பாலாசாஹேப்
பாலாசாஹேப்

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "கொரோனாவை எதிர்த்து போராட ஒரே நாடு ஒரே கொள்கை திட்டத்தை அமல்படுத்தவேண்டும். இக்கொள்கையை வகுக்க அனைத்துக்கட்சிக்கூட்டத்தை மத்திய அரசு கூட்டவேண்டும். ஒரே நாடு ஒரே கொள்கையின் அடிப்படையில் பணியாற்றவேண்டிய நேரமிது.உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் கொரோனாவிற்கு இறந்தவர்களை தகனம் செய்யாமல் ஆற்றில் தூக்கிப்போடும் நிலை இருக்கிறது. ஒரே நாடு ஒரே கொள்கையை அமல்படுத்தாதவரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. எனவே நரேந்திரமோடி அரசு அக்கொள்கை குறித்து முடிவு செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும். ஆக்சிஜன் சப்ளையை நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட் 12 பேர் கொண்ட கமிட்டியை அமைத்திருக்கிறது. மத்திய அரசு வேலை செய்யாததால்தான் அந்த பணியை கோர்ட்கள் செய்கிறது. மத்திய அரசு தனது பணியை செய்ய தவறி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று மகாராஷ்டிரா அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ள தற்போது இருக்கும் கோவின்மொபைல் ஆப்பில் பல்வேறு தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. ஒரே மொபைல் ஆப்பில் நாடு முழுவதும் உள்ள அனைவரும் பதிவு செய்து கொள்ள மிகவும் சவாலாக இருக்கிறது. மாநிலங்கள் சொந்தமாக மொபைல் ஆப்களை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கவேண்டும். அந்த மொபைல் ஆப்பில் இருக்கும் தகவல்களை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே மகாராஷ்டிராவிற்கு சொந்தமாக மொபைல் ஆப் உருவாக்க மத்திய அரசு அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியும் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சரியான கொள்கை இல்லாமல் இருப்பதாக மத்திய அரசை விமர்சித்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் வருவாய்துறை அமைச்சர் பாலாசாஹேப் தோரட் அளித்த பேட்டியில், கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் எந்த வித கொள்கையும் இல்லாமல் இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. மத்திய அரசு முன்பு கொரோனாவை வெற்றிகரமாக ஒழித்து விட்டதாக தெரிவித்தது. ஆனால் தேர்தல் மற்றும் கும்பமேளா போன்றவற்றால் மீண்டும் ஒட்டுமொத்த நாடும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடிதான் முழுப்பொறுப்பு ஆகும். சுப்ரீம் கோர்ட் ஆக்சிஜன் விநியோகத்தில் தலையிட்டு இருப்பதால் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர் கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு சீரியசாக இல்லை என்று இதன் மூலம் தெரிகிறது. மாநிலகளுக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் தடுப்பூசி வழங்கவும் மத்திய அரசு அனுமதிப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். ஆனால் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிடக்கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு