Published:Updated:

ஒன் பை டூ: அ.தி.மு.க, தி.மு.க எந்த கூட்டணிக்கு பலம் அதிகம்?

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - ஜெயக்குமார்

10 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்துவருவதால், அ.தி.மு.க மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகத் திட்டமிட்ட பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறது தி.மு.க.

ஜெயக்குமார், அமைச்சர், அ.தி.மு.க

``தமிழ்நாட்டை அதிகக் காலம் ஆட்சிசெய்த கட்சி, ஆட்சி செய்துகொண்டிருக்கும் கட்சி, ஆட்சி செய்யப்போகும் கட்சி அ.தி.மு.க. எனவே, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் பலம் வாய்ந்தது என்று உலகத்துக்கே தெரியும். ஒரு கூட்டணியின் பலம் என்பதே, அந்தக் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பதைப் பொறுத்ததுதான். அந்த வகையில், கூட்டணியின் கேப்டனாக இருக்கிற அ.தி.மு.க சரியான திசையை நோக்கிக் கப்பலைச் செலுத்திவருகிறது. எனவே, மீண்டும் ஆட்சி என்ற இலக்கை நிச்சயம் சென்றடைவோம். கடந்த காலங்களில் எப்படி திசைமாறிய கப்பலாக தி.மு.க கூட்டணி தவறான பாதைக்கு இழுத்துச் செல்லப்பட்டதோ... அதேபோலத்தான் இப்போதும் பயணித்துக்கொண்டிருக்கிறது. சரியான இலக்கை அவர்கள் ஒருபோதும் அடைய முடியாது.

10 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்துவருவதால், அ.தி.மு.க மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகத் திட்டமிட்ட பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறது தி.மு.க. கடந்த காலங்களில் 1977 - 1980, 1980 - 1984, 1984 - 1987 என்று தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்று ஆட்சி அரியணையை அலங்கரித்த கட்சிதான் அ.தி.மு.க. அந்தச் சரித்திரச் சாதனையை வருகிற 2021 தேர்தலிலும் நிகழ்த்திக்காட்டுவோம்!’’

ஜெயக்குமார்
ஜெயக்குமார்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநிலச் செயலாளர், தி.மு.க ஐ.டி விங்

``2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க பெற்ற இமாலய வெற்றியே, வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஏனெனில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான சுமார் இரண்டு ஆண்டுகளில், ஆளுங்கட்சியின் செயலற்ற திறன் அவர்களது நிலையை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியிருக்கிறது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது; வேலைவாய்ப்பின்மை பெருகிவிட்டது. பேரிடர் காலத்தைச் சரிவர கையாளத் தெரியாத அரசுகளால், அமைப்புசாரா தொழிலாளர்களில் ஆரம்பித்து மாதச் சம்பளம் வாங்குவோர் வரை பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. பெட்ரோல் விலையேற்றம், அனைத்துப் பொருள்களின் விலையேற்றத்துக்கும் அடிப்படைக் காரணமாகியிருக்கிறது. குறிப்பாக, 2019-க்குப் பிறகு காஷ்மீர் சிறப்பு அங்கீகாரம் ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட மாநில உரிமைகளை கபளீகரம் செய்தது என சர்வாதிகார ஆட்சியை நடத்திவருகிறது மத்திய பா.ஜ.க அரசு. மாநிலத்திலுள்ள அடிமை அ.தி.மு.க அரசும், பறிபோகிற மாநில உரிமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பாமல், மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்கி தங்கள் எஜமான விசுவாசத்தைத்தான் காட்டியிருக்கிறது. எனவே, 2019-ல் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு மக்களிடையே இருந்த அதிருப்தியைவிடவும் இன்றைக்குப் பல மடங்கு அதிருப்தி பெருகியிருக்கிறது.

இப்படியான சூழலில்தான், நான்கு வருடங்களுக்கு முன்னால் யாரென்றே அடையாளம் தெரியாதவராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை எம்.ஜி.ஆராக நினைத்துக்கொண்டு மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிப்பேன் என்று சொன்னால், அது அவரது விபரீத கனவு என்று மட்டும்தான் சொல்ல முடியும்!’’